திருவிழா நகரான மதுரையில் ஆண்டு முழுக்க விழக்கள் தான். அந்த வகையில் ஆடி மாதம் முளைக்கொட்டுத் திருவிழா. மதுரையில் ஆயில்ய நக்ஷத்திரத்தில் ஆடி மாத முளைக்கொட்டுத் திருவிழாவுக்குக் கொடியேற்றுவார்கள் இந்த உற்சவத்திற்கு அன்னைக்கு மட்டுமே கொடி ஏற்றப் படுகிறது. அதைத் தொடர்ந்து பத்து நாட்கள் முளைக்கொட்டு உற்சவம் நடக்கும். எல்லா நதிகளிலும் வெள்ளம் புத்தம்புதியதாக வந்து வயல்களில் செழிப்பாக நாற்றுக்கள் வளரவேண்டி நடத்தப்படும் உற்சவம்
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர்களின் வாக்கின்படி, ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்ளவும், தங்கள் நிலங்களில் பயிர் விளைச்சல் அதிகரிக்க வேண்டியும் இறைவனை வழிபாடு செய்வது வழக்கம். அந்தவகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா
பத்துநாட்களும் அம்மன் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் அம்மன் சந்நிதியிலேயே இருக்கும் மீனாக்ஷி நாயக்கன் மண்டபத்தில் காட்சி தருவாள். வரும் முளைப்பாரிகளை எல்லாம் அம்மனுக்கு எதிரே வைத்திருப்பார்கள். பச்சை நிறம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். கடைசி நாள் கும்மியோடு முளைக்கொட்டைப் பொற்றாமரையில் கரைப்பதோடு அம்மனுக்கு உற்சவம் முடியும்.
பத்து நாட்களும் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மங்கள இசை வாசிக்கும் இசைக் கலைஞர்கள் நாதஸ்வரம், தவில் போன்ற இசைக் கருவிகளை அம்பாள் முன் இசைத்து மகிழ்வார்கள். அம்மன் முன் வாசித்தால் அவர்கள் வருகிற ஆண்டுகளில் சிறப்பாக வாழமுடியும் என்கிற நம்பிக்கை.