நான் பார்த்த ஆண்மகனில்
எனை கவர்ந்த கள்வன் நீ...
முதலில் என் கண்களை பறிகொடுத்தேன்
பின்பு என்னையே இழந்தேன் உன்னிடம்
உன் கை பிடித்து நடக்கையில்
சிறு குழந்தை போல் ஆகிறேன்
உன் நிழல் விழும் பாதையில்
என் பாதை அமைக்கிறேன்
உன்னோடு நானிருக்கும் நொடிகள் அனைத்தும்
என் வாழ்வின் வரமென மாறிப்போகிறது
உன் மார்பில் நான் சாயும் நேரமெல்லாம்
எந்தன் கடிகாரம் தன்னிலை மறக்கிறது
பேசி பேசி மொழிகள் எல்லாம் வற்றி
பேசா நிலை வந்தும்
கண்கள் மட்டும் பேசாமல் பேசுகிறது
மொழி தேவையில்லை போல அவைகளுக்கு
ஈருருளி மீதேறி, காற்றின் ஓசை பரவ
என் மூச்சும் உன் கழுத்தில் தத்தி
திக்கி திக்கி கேட்டும் வார்த்தைகள் யாவையும்
ஒன்றாக இணைத்து பேசி செல்லும் பொழுதும்
உந்தன் தண்டுவட அதிர்வை என்னுள் கடத்துகிறாய்
ஆண் என கர்வம் கொள்ளாமல்
எந்தன் வார்த்தைகளுக்கு உரிமை தரும் பொழுதும்
எந்தன் கருத்துகளுக்கு செவி சாய்க்கும் பொழுதும்
இன்னும் ஆழம் செல்கிறாய் என் மனதுள்ளே
காலத்தின் நீட்சி தான் எத்தனை மாயம்
காதல் கசக்கும் என தூரம் இருந்த என்னை
கடைக்கண் பார்வை வீசி
இது தான் காதல் என்று சொல்லிவிட்டாய்
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும்
புது புது அர்த்தங்கள் கற்று தந்து
என்னையே முழுதும் களவாடி விட்டாய்
உயிரும் உன்னோடு கலந்த பின்பு
உடல் இரண்டும் வெவ்வேறு திசை இருந்து பயன் என்ன?
நெற்றி முத்தம் பதித்து ஐவிரல் இணைத்து
உன் மார்போடு அணைத்துக்கொள்..
முழுதாய் நானும் உனதாகிறேன்...