எல்லை பலம் புதுமை எப்போதும் நிச்சயித்தல்
அல்லல் தரும் கிரியை ஆன்மாவுக்கு -- ஒல்லை
அறிவு ஆசை ஐம்புலனும் ஆரவரும் காலம்
குறியா மயக்கு என்று கொள்.
வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பினோம்
சுத்தமாம் தத்துவங்கள் சொல்லக்கேள் -- நித்தமாம்
சுத்தவித்தை ஈசுரம்பின் சொல்லும் சதாசிவம்நல்
சத்திசிவம் காண் அவைகள் தாம்.
சுத்தவித்தை ஞானம்மிகும் தொன்மையாம் ஈசுரம்தான்
அத்தன் தொழில் அதிகம் ஆக்கிடும் -- ஒத்த இவை
சாதாக்கியம் என்றும் சத்தி சிவம் கிரியை
ஆதார ஞான உரு ஆம்.
ஆறாறு தத்துவமும் சொன்னோம் அடைவாக
மாறா மலம் இரண்டும் வாசொல்லக் - கூறில்
அறியாமை ஆணவம் நீ ஆன சுகம் துக்கம்
குறியா வினை என்று கொள்.
ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்
மாறா அருளால் வகுத்துரைத்தீர் -- வேறு ஆகா
என்னை எனக்கு அறியக் காட்டீர் இவை கண்டேன்
உன்னரிய தேசிகரே! உற்று
நன்றா உரைக்கக்கேள் நல்ல சித்தின் முன் அசித்து இங்கு
ஒன்றாது சித்து அசித்தை ஓராது -- நின்று இவற்றை
அன்றே பகுத்து அறிவது ஆன்மாவே என்றுமறை
குன்றாமல் ஓதும் குறித்து.
தத்துவங்கள் ஆறாறும் தம்மைத்தாம் என்று அறியா
எத்தன்மை என்னில் இயம்பக்கேள் -- சுத்தமாம்
ஆறு சுவையும் அறியாவே தம்மைத்தாம்
கூறில் அவை இவை போல் கொள்.