எழுநா

விபுலானந்தர் ஆய்வுத்தடத்தில் தமிழிசையின் மீட்டுருவாக்கம் | பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன்


Listen Later

 தமிழிசையின் செல்நெறி, சுகமான ஒரு பயணம் அல்ல. மக்களின் வாழ்வியலுக்குள் இலக்கியச் செழுமைக்குள் புதைந்திருந்த தமிழிசையின் தனித்துவமான அடையாளங்கள், காலவெளியில் கண்டுவந்த மாற்றங்களும் படிமலர்ச்சியும், பண்பாட்டு அரசியல் மேலாண்மைகளுக்குள் எதிர் கொண்ட சவால்கள், தன்னைத் தகவமைத்துக் கொள்ள எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் என்பன தமிழர் வாழ்வியல் வரலாறாகும்; தமிழ்ப் பண்பாட்டின் வரலாறுமாகும். 

இந்த வகையில் தமிழிசையின் மீட்டுருவாக்கதில் உயிர் விசைகளாக விளங்கிய முன்னோடிகளின் உருவாக்கம், பங்களிப்பு பற்றிய தெளிவான புரிதல் இன்றியமையாதது. தமிழிசையின் அடையாளங்களைத் தேடி வெளிப்படுத்திய விபுலானந்தர் ஆய்வுத்தடம் பற்றிய இனமரபு இசையியல் பகுப்பாய்வாக இக்கட்டுரை அமைகின்றது.

பொதுமனிதர் பார்வையில் மட்டுமன்றி இசைத்துறையினர், இசைபற்றி பேசும் அறிவுஜீவிகளிடத்தும்கூட இசை பற்றிய முழுதளாவிய பார்வை இல்லையெனலாம்; அதன் வழியேதான் தமிழிசை பற்றிய தரிசனங்களும். இசையின் யாதேனும் ஒரு பிரிவை அழுத்துவதாகவே இவர்களின் பேச்சும் எழுத்தும் அமைவது அனுபவமாகும். 

பெரும்பாலும் சாஸ்திரிய சங்கீதமே சங்கீதம்; ஏனையவை எளிமையானவை அல்லது எளியவை என்ற  எண்ணக்கருவாக்கமே ஆதிக்கம் செலுத்தக் காணலாம். இந்தப் பின்னணியில் தமிழிசையின் வரையறையும் வளர்ச்சியும் அதன் வரலாற்று அரசியலுக்குள் அமிழ்ந்து போயுள்ளன.

இனமரபு இசையியல் சார்ந்து விபுலானந்தருக்கு விழிப்புணர்வும் அதனடியான தமிழிசை ஆர்வமும் ஆய்வும் வசப்பட்டமைக்கு அவருக்கு வாய்த்த இளமைக்கால சமூகமயமாக்கம் அடிப்படையானது என அறிய முடிகின்றது. பிள்ளைப் பருவத்திலேயே அவரது சமூகமயமாக்க சூழலான காரை தீவு கண்ணகையம்மன் சடங்குகளில் பாடப்பட்ட கண்ணகி வழக்குரைப் பாடல்கள், உடுக்குச்சிந்து, காவியம் என்பன சிலப்பதிகாரத்தின் மீது ஏற்படுத்திய ஈர்ப்பிலிருந்தே அவரது தமிழிசை ஆய்வுத் தேடல் தொடங்கியதெனலாம். 

ஆரம்ப, இடைநிலைக் கல்வியை முடித்தபின் கொழும்பிலே பொறியியல் கற்கும் போது யாழ்ப்பாணத் தமிழறிஞர் கைலாய பிள்ளையவர்களிடம் சிலப்பதிகாரத்தினை முறைப்படி பயின்றார். இந்தக் காலத்திலேயே சிலப்பதிகாரத்திலே விரிவாகப் பேசப்படும் தமிழிசையை ஆராயும் எண்ணம் முகிழ்த்த தென்பார்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

எழுநாBy Ezhuna