ஆகஸ்ட் 14, 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் இரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசுச் சூடி தன்னை அலங்கரித்துக் கொண்ட வேளையில் ஒரு யுகாந்திர மாற்றம் நடைபெற இருந்தது. 400 ஆண்டுகால ஆங்கிலேய அடிமை சாசனத்தை நார்நாராகக் கிழித்தெறியக் காத்திருத்தது, இந்தியா.
அப்ப வருமோ, இப்ப வருமோ, ரெயிலில் வருமோ, மெயிலில் வருமோ என்று காத்துக்கிடந்த சுதந்திரம் ரகசியமாய் இரவில் வந்தது. மன்னராட்சிக்கும் அடிமையாட்சிக்கும் பழகிப்போன இந்தப் பழமைதேசத்தில் ஜனநாயகப் பூ, நள்ளிரவில் மொட்டவிழ்த்தது. இந்தியா உடைந்து போய்விடும் என்ற மேற்கத்திய வாதங்களுக்கு வாய்ப்பூட்டுப் போட்டது அந்த இரவு. இதுவரை இல்லாத, யாரும் கேள்விப்படாத பல பணிகளை தன் மேல் இழுத்துவாரிப் போட்டுக் கொண்டனர் தேசாபிமானிகள்.
காந்தியும் நேருவுமே மாறுபட்ட முடிவெடுத்த நாள் அன்றுதான். ஒற்றை தினத்தில் தான் வரலாறு மாறுகிறது. 'காலனி ஆஃப் பிரிட்டன்' என்பது 'இறையாண்மை மிக்க இந்திய தேசமானது' அன்றுதான். இந்தியாவின் கடமைகளை இந்தியர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே அறிமுகப்படுத்திய நாள் அன்றுதான். அரங்கம் ஒலிர, "Long days ago.." என்று நேரு தொடங்கும் போது, இந்தியத் தாயும் தன்னை சுதந்திரத் தேவியாக்கிக் கொண்டாள். 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த பேச்சுக்களுள் ஒன்றாகக் கருதப்படும் 'விதியுடன் ஒரு ஒப்பந்தம்' இதோ..