அக்டோபர் 12, 1956. வழிந்து கொண்டிருக்கும் நெரிசலுக்கு மத்தியில் பிதுங்கியபடி ஒரு இரயில் பம்பாய் நகரிற்குள் நுழைந்தது. இன்றைக்கு நாகபுரி செல்லும் இருபதாவது இரயில் இது.
பல சிறப்பு ஏற்பாடுகளை இரயில்வே நிர்வாகம் முன்னரே செய்திருந்தாலும், நாகபுரிக்குச் செல்லும் நெரிசல் மட்டும் குறைந்தபாடில்லை. திருவிழாக் கூட்டம் போல் படையெடுத்துச் சென்றனர் பட்டியலின மக்கள்.
ஏன் இந்த திடீர் விநோதம்? என்ன ஆனது நாகபுரிக்கு? இன்னும் ஓரிரு நாட்களில் அந்த நகரம் அடையவிருக்கும் வரலாற்றுச் சிறப்பு அப்படி!
நாகபுரி வந்து சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்குவதற்கும், பள்ளி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன; நிகழ்வு நடைபெற இருக்கும் திறந்த வெளி மைதானத்தில் மூங்கில் விரிப்புகள் வீசப்பட்டிருந்தன. இந்த 3000 மின்சார விளக்குகளுக்கு மத்தியில்தான் ஆண்டாண்டுகளாக இருள்பூசிய ஒரு இனம், ஒற்றை ஆளை நம்பி ஒளி வீசக் காத்திருந்தது.
அக்டோபர் 14-ம் தேதி காலை மதமாற்ற நிகழ்ச்சி நடைப்பெற்று முடிந்தபோது, சுமார் 6 இலட்சம் மக்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறி பௌத்த மதத்தை தழுவினர். இந்துமத வரலாற்றில் அழிக்கமுடியாத கரும்புள்ளி.
ஆனால் வரலாறு அத்தோடு நின்றுவிடவில்லை. அடுத்த நாள் காலை வரை கண்ணியமாகக் காத்திருந்தது.
'பாபாசாகேப்.. பாபாசாகேப்..' என்று பெருந்திரள் கோசத்திற்கு மத்தியில் மௌனம் பூத்த முகத்தோடு அம்பேத்கர் வந்தார். இந்து மதத்தின் இடியாப்ப சிக்கலை, அடியோடு பெயர்த்து எறிந்த அத்தனை வெற்றியும் அவர் கண்ணில் தெரிந்தது.
தன்மேல் வீசப்பட்ட அம்புகளை எல்லாம் மிக இலாவகமாகப் பிடுங்கி, பதில் தாக்குதல் செய்ய ஆயுத்தமானார்.
இந்து மதத்தின் கொடுமைகளையும்; பௌத்த மதத்தின் பெருமைகளையும்; பட்டியலின மக்களின் கடமைகளையும் மடமடவென அவர் பேசியது வெறும் 3 மணிநேர சொற்பொழிவல்ல, மூவாயிரம் ஆண்டுகால அடிமை வரலாறு.
பிற்போக்குத் தனங்களை பிரம்பால் விரட்டிய, டாக்டர். பி. ஆர். அம்பேத்கரின் பிரம்மாண்ட பேச்சு இதோ..