மார்க்ரேட் எலிசபெத் நோபல் என்று பெற்றோர் வைத்த பெயரால் விளித்தால் அவரை யாருக்கும் தெரியாது. அரவிந்த் கோஷ் சூட்டிய 'அக்னிசிகா' என்ற பெயரால் அழைத்தால் பெரும்பாலும் புரியாது. 'லோகமாதா' என்று தாகூர் அழைத்த பெயரால் ஜெபித்தால் அவரைப் பலருக்கும் அடையாளம் தெரியாது. அரவிந்தர் போற்றிய 'வீரத்துறவி' என்றால் ஒருசிலருக்கு யாரென்றே புரியாது. பின் அவரை எப்படி அழைப்பது?
அயர்லாந்தில் பிறந்து கிறிஸ்தவராக வளர்ந்து ஹிந்துவாக வாழ்ந்து இந்தியராக இறந்துபோனாரே, அவரை நாம் எப்படி அழைப்பது? பாமரர் எல்லாம் ஒன்றுகூட்டி வழங்கிய ' சகோதரி நிவேதிதா தேவி' என்று கூக்குரலிடலாமா?
ஆஹ்ம். பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட கொல்கத்தா நகரில், வெறும் பழங்களையும் பாலையும் உண்டு சேவையாற்றினார். பின் அதற்கும் பண நெருக்கடி ஏற்பட, ஒருவேளை பாலையும் நிறுத்திகொண்டு சேவை புரிந்தார். அப்போதுதான் கொல்கத்தா மக்களால் 'சகோதரி' என்று அன்பொழுக அழைக்கப்பட்டார். அதுநாள்வரை விவேகானந்தர் வழங்கிய நிவேதிதா என்ற பெயரே அடையாளமானது.
விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்த அவர், பெண் கல்வி பொருட்டும் இந்துத்துவம் பொருட்டும் பெரும் பங்காற்றினார்.
ஒரு காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த தென்னிந்திய கவி ஒருவரைப் பார்த்து, "ஆமாம். எங்கே உங்கள் மனைவி?" என இவர் கேட்க. "எங்கள் வழக்கப்படி பெண்களை வெளியே அழைத்து வருவதில்லை. மேலும் அவளுக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது" என்றார் அந்தக் கவி. "உங்கள் மனைவிக்கே விடுதலை தராத நீங்கள், இந்தத் தேசத்திற்கு விடுதலை பெறுவது எப்படி சாத்தியம்?" என்று நிவேதிதை கேட்ட மறுகணம் எதிரில் இருந்த மகாகவி பாரதியார் இவர்தன் சிஷ்யர் ஆனார். ஆம். நம் தமிழ்க்கவிக்கே பெண்ணியம் புகட்டிய அந்நியக் கவி சகோதரி நிவேதிதா தேவி.
அக்டோபர் 2, 1902-ம் ஆண்டு பம்பாய் ஹிந்துப் பெண்கள் சங்கத்தில் "இந்தியப் பெண்களின் நற்பண்பு" என்ற தலைப்பில் பேச அழைத்தனர். ஆனால் நிகழ்ச்சிக்கு முன்னரே பார்வையாளருடன் கலந்துரையாடிய நிவேதிதை தன் தலைப்பை மாற்றிக் கொண்டார். "இங்கு வீற்றிருக்கும் ஹிந்துப் பெண்களைவிட அத்தனை உயரிய நல்லொழுக்கத்தை நான் பயின்று விடவில்லை. அதனால் நான் ஏன் ஹிந்து மதத்தை தழுவினேன்" என்று பேச விரும்பிகிறேன் என்று அவர் சொன்னதும் ஆரவாரம் பொங்க ஆமோதித்தனர்.
இந்தியப் பெண்ணின் நற்பண்பு என்று அவர் சுட்டிச் சொன்ன பல பழக்கங்கள் இன்று ஏற்றுக்கொள்ள முடியாதது. விவாதத்திற்கு உட்பட்டது. இருந்தபோதும் ஒரு ஆங்கிலேயப் பெண்ணை வசீகரிக்க ஹிந்து மதத்தில் என்ன இருந்தது என்பது மிக முக்கியமான வியூகம்.
ஒட்டுமொத்த இந்தியருக்கும் தான் ஏன் ஹிந்து ஆனேன் என நிவேதிதா பேசியதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி இதோ..