மலாலா. பாக்கிஸ்தான் பற்றிய அத்தனை அபிப்பிராயத்தையும் சுக்குநூறாக்கிய மூன்று எழுத்து. அணு ஆயுதம் வைத்துக்கொண்டு அமெரிக்க தேசமே, அல்லோலப்பட்டு தேடிக்கொண்டிருக்கும் தாலிபான்களை, இந்த 15 வயது சிறுமி ஆட்டங்காணவைத்தாள். 12 வயதில் கல்யாணம், 14 வயதில் குழந்தைகளென இவள் தோழிகள் எல்லாம் தோல்விகளை தழுவியபோதும், அடக்குமுறைக்கு எதிராக கல்வி உரிமை வேண்டி ஒற்றை ஆளாக நின்றாள்; துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளிடம் நிராயுதபாணியாக, அமைதி வேண்டி நின்றாள்; தோட்டாக்களால் குண்டடிப்பட்டு, உயிருக்கே ஆபத்து வந்தபோதும் ஐ.நா. வரை சென்றாள்; இன்று உலகெங்கும் கல்வி உரிமை பெறாத அத்தனை கிராமங்களையும் இவள்தன் பாச அரவணைப்பால் வென்றாள்! சுடப்பட்ட கணப்பொழுதில், " ஐய்யய்யோ எங்கள் மலாலாவுக்கு என்ன ஆச்சு?" என்று பூவுலகம் முழுக்க பூகம்பம் வெடிக்க, மாதங்கள் பல சென்று மெல்ல எழுந்தாள் மலாலா. உன் முகத்தின் ஒரு பாதி செயல்படாது என மருத்துவர்கள் சொல்ல, "அதனாலென்ன, இனி என் வாழ்வின் எல்லா பாதியும் குழந்தைகளுக்காகவே செயல்படப்போகிறதே!" என்று புன்முறுவல் பூத்தாள். அடியெடுத்து வெளிவந்தாள், படையெடுத்தன பல பரிசுகள். உலகின் மிக இளவயதில் நோபல் பரிசு பெற அழைப்பு விடுத்தனர். சென்றாள். மேடையில் நின்றாள். அவளின் வார்த்தைக்காகத் தவமிருந்த காதுகள் பூவின் மொட்டைப் போல், மெல்ல அலர்ந்தன.. கைதட்டல்கள் பறந்தன.. இதோ அந்தப் பேச்சு..