"ஒரு கொடி ஒரு இலட்சியத்தை குறிக்கிறது. எல்லா நாடுகளுக்கும் ஒரு கொடி அவசியம். அதற்காக இலட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இது ஒரு விதமான சிலை வழிபாடுதான்" என்று காந்தி சொன்னது நேருவுக்கும் கேட்டிருக்கும். 1947-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி ஒரு வரலாற்று நிகழ்வை வரைந்து வைத்திருந்தார் நேரு.
வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பிறக்கும் முன்னரே பெயர் சூட்டுவதைப் போல, இன்னும் 24 நாட்களில் விடுதலை அடைய காத்திருக்கும் தேசத்திற்கு பூச்சூட்டி கொடி ஏற்கும் கூட்டம் டெல்லியில் கூடியிருந்தது.
சரியாக 6412 நாட்களுக்கு முன்பு லாகூரில் உள்ள ராவி நதிக்கரையில் அவர் ஏற்றிய அதே கொடியின் மாதிரியைத்தான் சிறு மாறுதலோடு கொண்டுவந்திருத்தார், நேரு. இந்தியாவிற்கு கொடியின் தேவை என்ன எனத் தொடங்கி கொடியின் மேன்மை சொல்லி அவர் முடிக்க கரவோசங்கள் அதிர்ந்தன.
அழுக்குப் படிந்த ஆடையை உருவி தேசியக் கொடி என்னும் பட்டாடையைத் தேகம் முழுக்க பரப்பி விட்ட நேருவின் பேச்சு இதோ..