கண்ணனை நினைக்காத நாளில்லையே...’ என்ற பாடல் வரிகளுக்கேற்ப, கண்ணனைப் போற்றும் கதைகளை கண்ணனின் குணாதிசயமான சுறுசுறுப்போடும் துறுதுறுப்போடும் குதூகலத்தோடும் விளையாட்டு போல் எளியவரின் பக்தியாக உருக வைக்கும்படி அழகாகச் சொல்கிறது இந்த நூல். படிக்கப் படிக்க விறுவிறுப்பும் பக்திப் பரவசமும் நம்மை மெய்மறக்கச் செய்துவிடுகின்றன. சகல புண்ணியங்களும் பெற வேண்டுமென்றால் பகவானின் திவ்விய நாமங்களைச் சொன்னாலே போதும் என்கின்றன புராணங்கள். கண்ணனின் திருநாமங்களுக்கு அத்தனை வலிமை உண்டு. அம்புப் படுக்கையில் பீஷ்மர் இருந்தபோது, ‘பீஷ்மர் ஒரு ஞானசக்தி. அவர் இறந்துவிட்டால், பின்பு இந்த உலகில் ஞானம் என்பதே ஒருவருக்கும் வாய்க்காது போய்விடும்’ என்று சொல்லும் கண்ணன், அடியவர்களைக் கௌரவப்படுத்தி, அன்பும் அரவணைப்பும் கொண்டு அவர்களுக்கு மரியாதை செய்கிற அவதார புருஷன். பெருங்கருணை, ஜோதி வடிவமே பகவான், எமதருமனின் கனிவு, ஹரி... ஹரி.., திருமாலின் திருமேனி, வரம் தருவாய் வாசுதேவா.., கண்ணனின் விளையாட்டு, கட்டுண்டு கிடந்த கண்ணன், யமுனை ஆற்றிலே..! கண்ணன் இருக்க கவலை எதற்கு? மானம் காப்பான் தோழன்... என்று அவனுடைய ஒவ்வொரு திருநாமமும் கடலளவு தண்ணீரை அப்படியே உள்ளங்கைக்குள் அடக்கிவிடுகிற சாதுர்யத்துடன், வாழ்வின் உயரிய கருத்துகளை, மிகப் பெரிய குணத்தை நமக்கு உணர்த்துகிறது. அத்தகைய பரவசத்தோடு சக்தி விகடனில் வேளுக்குடி கிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். ஓவியர் மாருதியின் வண்ண ஓவியங்கள் உயிரோட்டமாக நடமாடுகின்றன. கண்ணனின் நாமங்களைச் சொல்லும் இந்த நூல், வாசிப்போரின் மனசை தாமரையாகப் பூரிக்க வைக்கும்.