எழுநா

எழுநா

Download on the App Store

எழுநா episodes

  • இரு வேறு சிந்தனைப் போக்குகள் : கூத்துக் கலையின் ஊற்றுக் கண்கள் | ஈழத்து தமிழரின் ஆற்றுகைக் கலைகள் : மரபும் மாற்றமும் | சின்னையா மௌனகுரு

    ஈழத்து மரபுவழி ஆற்றுகைக் கலைகளுக்கு ஒரு வரலாறும் வளர்ச்சியும் உண்டு. தென்மோடி, வடமோடி, சிந்துநடைக் கூத்துகள், வாசாப்பு, இசை நாடகம், பள்ளு, குறவஞ்சி, வசந்தன், மகுடி என அது பன்முகப்பட்டது. இவற்றுள் சில அருகிவிட்டன; சில கால ஓட்டத்துடன் நின்று போராடி நிலைக்கின்றன; சில மாறுகின்றன. காலந்தோறும் ஏற்பட்ட பண்பாட்டு கலப்புகளும், அதனை உருவாக்கிய அரசியல், பொருளாதார, சமூக காரணங்களும் இம்மாற்றங்களுக்கு அடித்தளமாக உள்ளன. இந்த பல்வேறு வகைப்பட்ட ஆற்றுகை வடிவங்கள் தத்தமக்கென அழகியலையும், அமைப்பையும், வெளிப்பாட்டுத் திறனையும் கொண்டுள்ளன; ஒன்றிலிருந்து ஒன்று பெற்றும் வளர்ந்துள்ளன. இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்வதும், அவை மாற்றம் பெற்றபோது அது சம்பந்தமாக நடந்த விவாதங்களை அறிவதும், இதன் இருப்பைத் தக்கவைக்கும் முயற்சிகளில் ஈடுபடுபவருக்கும், அதனை மேலும் வளர்த்துச் செல்ல விரும்புவோருக்கும் உதவியாக இருக்கும். இப் பல்வேறு ஆற்றுகை வடிவங்கள் பற்றியும் அவை கல்வி உலகில் ஏற்கப்பட்ட பின்னணிகள் பற்றியும், அதனால் இந்த ஆற்றுகைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் அறிமுகம் செய்வதாக ‘ஈழத்துத் தமிழரின் ஆற்றுகைக் கலைகள் : மரபும் மாற்றமும்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமைந்திருக்கும்.

    19 min
  • இலங்கையில் தமிழ்ப் பௌத்தம் | பௌத்தச் சிற்பங்கள் ஊடாக அறியப்படும் இலங்கை - ஆந்திர உறவுகள் : பகுதி 1 | பரமு புஷ்பரட்ணம்

    'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

    22 min
  • லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் - உடுவில் | யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்கள்| இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

    இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

    11 min
  • இலங்கையில் அரிசி அரசியலும் அதனை எதிர்கொள்வதில் கூட்டுறவுத் துறையின் வகிபாகமும்  | கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : போரின் பின்னரான மீள் கட்டுமானமும் அபிவிருத்தியும் | வை. ஜெயமுருகன்

    2009 இல், போரின் முடிவில், போர் தந்த சிதைவுளுக்கு நாம் முகம் கொடுத்தோம். இதில் மிக முக்கியமானது போர் சிதைத்த எமது நிறுவன நினைவு வளம் (Institutional Memory) ஆகும். மனித இழப்புகளுக்கு அடுத்ததாக, எம்மால் கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்வும், சிதைவும் பிடுங்கி எறியப்பட்ட பூசணிக் கொடிகள் போல எங்கும் பரவிக் கிடக்கிறது. நிறுவனங்களின் சிதைவுகளில் மிக முக்கியமானதும், மிகவும் பாதிக்கப்பட்டதுமாக அமைவது கூட்டுறவு இயக்கமாகும்; கூட்டுறவுத் துறையின் வெற்றிக்கு அச்சாணியாக இருந்த கடனுதவுக் கூட்டுறவுச் சங்கங்களும் அதனோடு இணைந்தே அழிவுக்குள்ளாகின. இச் சிதைவுகளைக் கண்டறிந்து மீள் உருவாக்கம் செய்ய வேண்டிய காலமிது. அதன் பொருட்டு, கூட்டுறவு இயக்கம் – கூட்டுறவின் கட்டமைப்புக்கள் மிக முக்கிய அசைவியக்கமாக மாற முடியுமா? போரின் பின்னரான மீள் கட்டுமானத் திட்டங்களுக்கும் நிலையான அபிவிருத்திக்கும் கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் யாது? எங்கிருந்து தொடங்குவது? போரின் பின்னரான சிதைவுகள், அதன் விளைவாக விளைந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு அதனால் உதவ முடியுமா? ஆகிய வினாக்களை இத் தொடர் முன்வைத்து ஆராய்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகம் உட்பட, இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள கூட்டுறவுத் துறையினால் ஒரு வலுவான மாற்றுப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு சிறப்பாக உதவ முடியும். கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி சார் விடயங்களை மையமிட்டு காத்திரமான விடயங்களை தர்க்கத்துடன் கலந்துரையாடி, சிந்தனைக்கான முன்மொழிவுகளை தரும் இத் தொடர் ‘கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : போரின் பின்னரான மீள் கட்டுமானமும் அபிவிருத்தியும்’ எனும் பெயரில் அமைகிறது.

    15 min
  • யாழ்ப்பாணத்தைச் சுற்றுலாத்தலமாக மாற்றுதல் : திட்டங்களும் பரிந்துரைகளும் | வளரும் வடக்கு | ஆங்கில மூலம் : ஜெகன் அருளையா | தமிழில் : த. சிவதாசன்

    நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே ‘வளரும் வடக்கு’ எனும் இத் தொடரின் நோக்கமாகும். வடக்குப் பிரதேசத்தில் புலம்பெயர் சமூகத்தின் முதலீடு, புத்தாக்க தொழில் முனைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எத்தனிப்புகள், தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வு, முயற்சிகளின் தோல்விகளில் இருந்து கற்ற பாடம், வடக்கு பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படக்கூடிய பிரச்சனைகள், உலகளாவிய சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்தொடர் அமையும். இத் தொடர் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார முயற்சிகளை விபரிப்பதோடு மட்டுமே நின்றுவிடாது, அதன் தொடர்ச்சியான அசைவிற்குத் தேவையான முன்னெடுப்புகளின் சாத்தியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பின்னணியில் தரவுகளோடு ஆராய்கிறது. இது புதிய முயற்சியாளர்களுக்கு பாடமாக அமைவதோடு மேலும் பல முயற்சியாளர்களை வடக்கை நோக்கி வரவழைக்கும்.

    15 min
  • வடக்கு மாகாணத்தின் காலநிலை தொடர்பான பரிந்துரைகள் | பிராந்திய காலநிலையியல் : வடக்குப் பிராந்தியம், இலங்கை | நாகமுத்து பிரதீபராஜா

    ஒரு பிரதேசத்தின் பல்வேறு விடயங்களை கட்டமைப்பதில் அந்தப் பிரதேசத்தின் இயற்கை அம்சங்கள் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றன. குறிப்பாக ஒரு பிரதேசத்தின் காலநிலை சார்ந்த அம்சங்கள் அந்தப் பிரதேசத்தினுடைய இயற்கையையும் அந்த பிரதேசத்திற்குரிய பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களையும் கட்டமைப்பதில் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றது. அந்த அடிப்படையில் வடக்கு மாகாணத்தினுடைய பல்வேறு வகைப்பட்ட விடயங்களை தீர்மானித்ததில் வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை மிகப்பெரிய செல்வாக்கினை பெற்றிருக்கின்றது. வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை சார்ந்த பாரம்பரிய அறிவியல் விடயங்களையும் நவீன விஞ்ஞான ரீதியிலான ஆய்வு சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கியதாக வடக்கு மாகாணத்தினுடைய காலநிலைப் பண்புகளை முழுமைப்படுத்தி வெளியிடுவதாக ‘பிராந்திய காலநிலையியல் : வடக்குப் பிராந்தியம், இலங்கை‘ எனும் தொடர் அமைகின்றது.

    11 min
  • ஆங்கிலக் கல்வியும் நவீன நிர்வாக முறையும் இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம்  | இலங்கையின் இனவாத அரசியல் - ஒரு வரலாற்றுப் பார்வை | பி. ஏ. காதர்

    இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்குவதாகவே இலங்கையின் ‘இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடர் அமைகிறது. இதன்படி, 1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்  நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தத் தொடர் ஆராய்கின்றது. இரு பகுதிகளாக அமையவுள்ள இந்தத் தொடரின் முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இனவாத அரசியலின் பாத்திரம் பற்றியும் ஆராய்கிறது.

    22 min
  • எக்ஸ்பிரஸ் பேர்ள் : பேரிடரின் சிறுதுளி | பசுமை எனும் பேரபாயம் | மீநிலங்கோ தெய்வேந்திரன்

    காலநிலை மாற்றத்தின் விளைவுகளை இன்று அனைவருமே அனுபவிக்கின்ற நிலையில் பசுமை நோக்கிய நகர்வு குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் பரந்துபட்டளவில் மக்களைச் சென்றடைந்துள்ளது. பசுமையின் பெயரால் வளச்சுரண்டல்கள், உரிமை மறுப்புகள், மோசடியான வர்த்தகம், போலியான திட்டங்கள் என அனைத்தும் அரங்கேறுகின்றன. குறிப்பாக மூன்றாமுலக நாடுகள் இதற்குப் பலியாகின்றன. இலங்கையும் இதற்கு விலக்கல்ல. இலங்கை உயிரினங்களின் செறிவு அடிப்படையில் ஆசியப் பிராந்தியத்தில் முக்கியமான நாடாக கருதப்படுகிறது. ஆனால் இலங்கையின் உயிர்ப்பல்வகைமை மிகப்பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் காலநிலை மாற்றத்தின் கொடும் விளைவுகளையும் இலங்கை சந்தித்துள்ளது. இவை குறிப்பாக விவசாயத் துறையை சீரழித்துள்ளது. உயரும் கடல்மட்டம் இலங்கைக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் உண்டு. இத்தகைய பின்புலத்தில் இலங்கைச் சூழலில் பசுமை எனும் பெயரால் நடைபெறுகின்ற விடயங்களைத் தத்துவார்த்த ரீதியிலும் வரலாற்று நோக்கிலும் சமகால நிகழ்வுகளுடனும் நோக்க இத்தொடர் விழைகிறது. பசுமையின் பெயரால் நடந்தேறுபவை ஏற்படுத்தும் சமூகப் பொருளாதார மாற்றங்களையும் அதன் அரசியல் சிக்கல்களையும் சேர்த்தே ‘பசுமை எனும் பேரபாயம்‘ எனும் இத்தொடர் கவனம் செலுத்துகிறது.

    25 min
  • நாகர் பற்றிக் குறிப்பிடும் முத்துக்கல் மலைக் கல்வெட்டுகள் | இலங்கை பிராமிக் கல்வெட்டுகளில் நாகர் | என். கே. எஸ். திருச்செல்வம்

    ‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.

    11 min
  • சமஷ்டி முறைகளை ஒப்பிடுதல் – பகுதி 3 | அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம் | ஆங்கில மூலம் : றொனால்ட்.எல். வாட்ஸ் | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

    இனக் குழுமம், சமயம், மொழி, பண்பாடு ஆகியவற்றால் வேறுபாடுகளைக் கொண்ட பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களில் (MULTI – CULTURAL SOCIETIES) சமாதான வழிகளில் தீர்க்க முடியாதனவான சிக்கலான அரசியல் பிரச்சினைகள் தீவிரமடைந்து உள்நாட்டுக் குழப்பங்களிற்கும், உள்நாட்டு யுத்தங்களிற்கும் வழிவகுத்துள்ளன. இதனை மூன்றாம் உலக நாடுகளின் சமகால வரலாறுகள் உணர்த்தியுள்ளன. இவ்வரசியல் பிரச்சினைகளைப் பேச்சு வார்த்தைகள் மூலம் சமாதான வழியில் தீர்த்தல், சம்மந்தப்பட்ட நாடுகளின் அமைதிக்கும், சமூக – பொருளாதார – அரசியல் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. அமைதி வழியான தீர்வை அரசியல் தீர்வாக (POLITICAL SOLUTION) அமைப்பதோடு அதிகாரப் பகிர்வு (POWER SHARING), சுயாட்சி (SELF RULE) ஆகியவற்றுக்கான ஆட்சிக் கட்டமைப்புக்களை, அரசியல் யாப்புச் சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்குவதும் இன்றியமையாத முன் தேவையாக உள்ளது. அந்த வகையில், ‘அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம்’ என்னும் இப்புதிய தொடரில் மூன்றாம் உலக நாடுகளான இலங்கை, இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் அனுபவங்களை விளக்கியுரைக்கும் கட்டுரைகளின் தமிழாக்கம் வெளியிடப்படும். பல்வேறு தீர்வு மாதிரிகள், அத்தீர்வு மாதிரிகளின் பின்னால் உள்ள அரசியல் கோட்பாடுகள் (POLITICAL THEORIES), அரசியல் யாப்புத் தத்துவங்கள் (CONSTITUTIONAL PRINCIPLES) என்பனவும் விளக்கிக் கூறப்படும்.

    17 min

About எழுநா

From the publisher's feed

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது.