எழுநா

எழுநா

Download on the App Store

எழுநா episodes

  • தனிநாயகம் அடிகளாரின் கல்விச் சிந்தனைகள் - பகுதி 2 | கு. சின்னப்பன்

    தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘தமிழ்த்தூது வண. தனிநாயகம் அடிகளாரின் நான்காவது நினைவுப் பேருரை’ நிகழ்வில் பேராசிரியர். முனைவர். கு. சின்னப்பன் அவர்களால் இக் கட்டுரை வாசிக்கப்பட்டது.

    25 min
  • ஷியாம் செல்வதுரையின் 'பசித்த பேய்கள்' | இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள் | இளங்கோ

    ஈழத்தில் போர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உக்கிரமாக நடந்திருக்கின்றது. அது அங்கிருந்த அனைத்து மக்களையும் ஏதோ ஒருவகையில் பாதித்திருக்கின்றது. இப்போது யுத்தம் முடிந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. போர் ஒரு கொடுங்கனவாய் மக்களின் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டிருந்தாலும், அதன் நிமித்தம் ஏற்பட்ட உடல்/உள வடுக்கள் இன்னும் இல்லாமல் போகவில்லை. இனங்களிடையே நல்லிணக்கம் மட்டுமில்லை, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆற்றுப்படுத்தல்கள், உதவிகள் கூட போரால் வெற்றி கொள்ளப்பட்ட அதிகாரத் தரப்பால் நிகழ்த்தப்படவில்லை. இன்னுமின்னும் இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு இனங்களும் துவிதங்களாகப் பிரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஈழத்துப் போர்ச்சூழலின் பின்னணியில் எழுதப்பட்ட பனுவல்களை முன்வைத்து வாசிப்புச் செய்யப்படுகின்ற ஒரு தொடராக ‘இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள்’ அமைகின்றது.

    10 min
  • ஆன்மிக நாத்திகம் | தமிழ்ப் பண்பாடு : ஊற்றுகளும் ஓட்டங்களும் | ந. இரவீந்திரன்

    நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம் மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.

    19 min
  • வல்லிபுரப் பொற்சாசனம் : பேராசிரியர் பரணவிதான அவர்களின் வாசிப்பின் மீதான விமர்சனமும் மீள் வாசிப்பும் | இலங்கையில் தமிழ் பௌத்தம் | சிவ தியாகராஜா

    'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

    17 min
  • கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பின் சாதியும் ஜனநாயக அரசியலும் குறித்த ஓர் ஆய்வு - பகுதி 1 | இலங்கையின் அரசியல் 1900 - 1981 : பன்முகநோக்கு | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

    ‘இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்று கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

    22 min
  • தமிழர் தாயகத்தில் கால்நடை வளர்ப்பில் பெண்களும் அவர்களின் சவால்களும் | இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் | சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

    கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

    9 min
  • மட்டக்களப்புப் பூர்வகுடிகளின் சடங்குகள் - உளவியலும் அழகியலும் | வேடர் மானிடவியல் | கமலநாதன் பத்திநாதன்

    இலங்கைத் தீவின்  பூர்வீக குடிகளாக சிங்களவர்களையும்  மற்றும் தமிழர்களையும்  அவர் தம் பேரினவாத சிந்தனையானது,  பல வரலாற்று புனைவுகளின் ஊடாக இற்றை வரை  தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால்  இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் வேடுவர் என்பதை எவரும் மறுக்கவியலாது. அதனடிப்படையில், கிழக்குக் கரையோரம் எங்கும் வாழும் இன்று தமிழை பேசு மொழியாகக் கொண்டுள்ள வேடுவர்களின் இருப்பியல் பற்றியும், அவர் தம் தேவை பற்றியும் ‘வேடர் மானிடவியல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் ஆய்வுப்பாங்கில் விவரிக்கின்றது. வேடுவர்களுக்கே உரித்தான அடையாளங்களை வெளிக்கொணர்வதாகவும், இதுவரை நாம் அறிந்திடாத வேடுவர் குணமாக்கல் சடங்குகள், இயற்கையுடன்  பின்னிப்பிணைந்த அவர்களின் வாழ்வியல், வேடுவர் மீதான ஆதிக்க சாதியினரின் பாகுபாடுகள் என்பன உள்ளிருந்து மரபு மீட்கும் நோக்கில் பிரதானமாகக் கண்டறியப்பட்டு, அவை தொடரின் ஊடாக முன்வைக்கப்படுகின்றன. அத்துடன் காலனிய எண்ண மேலாதிக்கத்துள் சிக்குண்டு அழிந்துகொண்டிருக்கும், அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அவர் தம் மானுட நகர்வுகள் முதலான பல அல்லோல கல்லோல நிலைமைகளும் இதில் விரிவாகப் பேசப்படுகின்றன.

    25 min
  • சிவன் அருள் இல்லம் : உலகம் முழுவதும் வாசனைத் திரவியங்களை ஏற்றுமதி செய்யும் வட மாகாண நிறுவனம் | வளரும் வடக்கு | ஆங்கில மூலம் : ஜெகன் அருளையா | தமிழில் : த. சிவதாசன்

    நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே ‘வளரும் வடக்கு’ எனும் இத் தொடரின் நோக்கமாகும். வடக்குப் பிரதேசத்தில் புலம்பெயர் சமூகத்தின் முதலீடு, புத்தாக்க தொழில் முனைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எத்தனிப்புகள், தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வு, முயற்சிகளின் தோல்விகளில் இருந்து கற்ற பாடம், வடக்கு பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படக்கூடிய பிரச்சனைகள், உலகளாவிய சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்தொடர் அமையும். இத் தொடர் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார முயற்சிகளை விபரிப்பதோடு மட்டுமே நின்றுவிடாது, அதன் தொடர்ச்சியான அசைவிற்குத் தேவையான முன்னெடுப்புகளின் சாத்தியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பின்னணியில் தரவுகளோடு ஆராய்கிறது. இது புதிய முயற்சியாளர்களுக்கு பாடமாக அமைவதோடு மேலும் பல முயற்சியாளர்களை வடக்கை நோக்கி வரவழைக்கும்.

    13 min
  • பிரசவ செவிலி கொத்தியாத்தை | ஈழத்து நாட்டார் தெய்வங்கள் | தி. செல்வமனோகரன்

    பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது.

    22 min

About எழுநா

From the publisher's feed

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது.