
Sign up to save your podcasts
Or


இலங்கை முஸ்லிம்களின் இனத்துவ (ethnic) மூலத்தையும், வரலாற்றையும், இலங்கை முஸ்லிம்கள் எனும் இன அடையாளத்தினுள் கரைந்திருக்கும் பன்முக இன மரபுகளின் கலவையையும் தேடிய பக்கச்சார்போ, புனித நோக்குகளோ அற்ற ஒரு பரந்த அறிவியல்தன்மையுடன் கூடிய ஆய்வாக ‘இலங்கை முஸ்லிம்கள் – இனத்துவ மரபும் சமூகவியலும்’ என்ற இந்த கட்டுரைத்தொடர் அமைகிறது. குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் என்போர் இன மரபு சார்ந்து அரபு மூலத்தையா அல்லது தமிழ் மூலத்தையா தங்கள் இனத் தொடர்ச்சியாகக் கொண்டுள்ளனர், இலங்கை முஸ்லிம்களின் இனத்துவ அடையாளமாக தமிழைக்கொள்ள முடியுமா?, ஒரு சமூகமாக இலங்கை முஸ்லிம்களுக்குள்ளே இருக்கும் பண்பாட்டு வேறுபாடுகள், உள்ளக வேறுபாடுகள் மற்றும் முரண்கள் அவற்றின் சமூகவியல் தன்மை ஆகியவற்றை இந்தத் தொடர் பரந்த ஆய்வுக்குட்படுத்துகிறது.
இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.
‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடரானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்தத் தொடரானது, இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உருத்து என்பவை தொடர்பிலும் இந்தக் கட்டுரைத் தொடர் பேசவுள்ளது.
திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது எதிர் கொண்ட சில முக்கியமான நுணுக்கங்களை (Nuances) அடிப்படையாகக் கொண்டும், கட்டுரையாளரின் வணிகரீதியான சாதிப்பு அனுபவங்களைப் பகிர்வதாக அமைகிறது.
இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் 'இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்' என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு - கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.
இலங்கையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடமாகாணத்தில் குயர் மக்களுக்கான உரிமைக் குரல்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணமுடிகிறது. ‘வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல்’ என்ற இத் தொடரானது, வடபுல மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள பிற்போக்கான கருத்தியல்கள் பால்நிலைச் சமத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைதல், குயர் மக்கள் இந்தச் சமூகத்தின் மத்தியில் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்வதற்குக் கலாசாரம் சமய அல்லது மத கட்டமைப்புக்களின் பங்கு, வடபுலத்தில் குயர் அரசியல், குயர் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய குயர் செயற்பாட்டாளர்களின் சமத்துவம் நோக்கிய முன்னெடுப்புக்கள், கல்வியலாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட மையக்கருத்து வெளிப்பாட்டளர்கள் குயர் அரசியல் அல்லது அதுசார்ந்த விடயங்களில் பேணும் மௌனிப்பு என்பன பற்றி பேசவிழைகின்றது.
மலையக சமூகத்தினரது சமூகநல விடயங்களையும், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி குறித்த விடயங்களையும், தொழிற்சங்கம், அரசியல் மற்றும் மலையக மக்களின் வாக்குரிமை பிரச்சினைகளையும், தோட்ட தொழிலாளர்களின் வேதன மாற்றங்கள், அது குறித்த கொள்கைகள், கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் போன்ற விடயங்களையும், வீட்டுரிமை, உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளையும் மையப்படுத்தியதாக ‘மலையகம் : சமூக – பொருளாதார அரசியல் பரிமாணங்கள்’ இந்தத்தொடர் அமைகின்றது. அத்தோடு இந்தத்தொடர் மலையத்தில் தேயிலை கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான கொள்கை முன்மொழிவுகள், தொழிலாளர்களின் வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள் போன்ற விடயங்களையும் வளர்ச்சிப் போக்கு கண்ணோட்டத்தில் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகள் எவ்வாறு அமையலாம் என்பதற்கான பொறிமுறைகளையும் முன்வைக்கின்றது.
நாள்தோறும் நாம் உணவாகக் கொள்ளும் தானியங்கள், காய்கறிகள், சுவையூட்டிகள், பாலுணவுகள் என்பவற்றின் குணங்கள் மற்றும் பயன்பாடு பற்றிக் கூறும் நூல் பதார்த்தகுணம் என்று அறியப்படும். அகத்தியர், தேரையர் முதலானோரின் பெயர்களில் பதார்த்தகுணம், குணபாடம் போன்ற தலைப்புகளில் பலநூல்கள் கிடைக்கின்றன. இவ்வகையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆக்கப்பெற்ற நூல்களுள் ஒன்றே இருபாலைச்செட்டியார் என்று அறியப்படும் ஒரு மருத்துவரால் ஆக்கப்பெற்ற பதார்த்தசூடாமணியாகும். இற்றைக்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் இலங்கை வருகைக்குப் பின்னர் ஆக்கம் பெற்ற இந் நூலில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு உணவு வகைகள் தொடர்பில் கூறப்பட்டுள்ளவற்றை ‘பதார்த்த சூடாமணி’ என்ற இத் தொடர் ஆராய்கின்றது.
From the publisher's feed