
Sign up to save your podcasts
Or


‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடரானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்தத் தொடரானது, இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உருத்து என்பவை தொடர்பிலும் இந்தக் கட்டுரைத் தொடர் பேசவுள்ளது.
இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன.
இலங்கை முஸ்லிம்களின் இனத்துவ (ethnic) மூலத்தையும், வரலாற்றையும், இலங்கை முஸ்லிம்கள் எனும் இன அடையாளத்தினுள் கரைந்திருக்கும் பன்முக இன மரபுகளின் கலவையையும் தேடிய பக்கச்சார்போ, புனித நோக்குகளோ அற்ற ஒரு பரந்த அறிவியல்தன்மையுடன் கூடிய ஆய்வாக ‘இலங்கை முஸ்லிம்கள் – இனத்துவ மரபும் சமூகவியலும்’ என்ற இந்த கட்டுரைத்தொடர் அமைகிறது. குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் என்போர் இன மரபு சார்ந்து அரபு மூலத்தையா அல்லது தமிழ் மூலத்தையா தங்கள் இனத் தொடர்ச்சியாகக் கொண்டுள்ளனர், இலங்கை முஸ்லிம்களின் இனத்துவ அடையாளமாக தமிழைக்கொள்ள முடியுமா?, ஒரு சமூகமாக இலங்கை முஸ்லிம்களுக்குள்ளே இருக்கும் பண்பாட்டு வேறுபாடுகள், உள்ளக வேறுபாடுகள் மற்றும் முரண்கள் அவற்றின் சமூகவியல் தன்மை ஆகியவற்றை இந்தத் தொடர் பரந்த ஆய்வுக்குட்படுத்துகிறது.
மலையக சமூகத்தினரது சமூகநல விடயங்களையும், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி குறித்த விடயங்களையும், தொழிற்சங்கம், அரசியல் மற்றும் மலையக மக்களின் வாக்குரிமை பிரச்சினைகளையும், தோட்ட தொழிலாளர்களின் வேதன மாற்றங்கள், அது குறித்த கொள்கைகள், கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் போன்ற விடயங்களையும், வீட்டுரிமை, உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளையும் மையப்படுத்தியதாக ‘மலையகம் : சமூக – பொருளாதார அரசியல் பரிமாணங்கள்’ இந்தத்தொடர் அமைகின்றது. அத்தோடு இந்தத்தொடர் மலையத்தில் தேயிலை கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான கொள்கை முன்மொழிவுகள், தொழிலாளர்களின் வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள் போன்ற விடயங்களையும் வளர்ச்சிப் போக்கு கண்ணோட்டத்தில் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகள் எவ்வாறு அமையலாம் என்பதற்கான பொறிமுறைகளையும் முன்வைக்கின்றது.
இலங்கையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடமாகாணத்தில் குயர் மக்களுக்கான உரிமைக் குரல்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணமுடிகிறது. ‘வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல்’ என்ற இத் தொடரானது, வடபுல மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள பிற்போக்கான கருத்தியல்கள் பால்நிலைச் சமத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைதல், குயர் மக்கள் இந்தச் சமூகத்தின் மத்தியில் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்வதற்குக் கலாசாரம் சமய அல்லது மத கட்டமைப்புக்களின் பங்கு, வடபுலத்தில் குயர் அரசியல், குயர் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய குயர் செயற்பாட்டாளர்களின் சமத்துவம் நோக்கிய முன்னெடுப்புக்கள், கல்வியலாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட மையக்கருத்து வெளிப்பாட்டளர்கள் குயர் அரசியல் அல்லது அதுசார்ந்த விடயங்களில் பேணும் மௌனிப்பு என்பன பற்றி பேசவிழைகின்றது.
இலங்கைத் தமிழர்களுக்கு 2500 ஆண்டுகளுக்குக் குறையாத வரலாறு மற்றும் வழிபாட்டு பாரம்பரியம் உள்ளது. பண்டைய இலங்கைத் தமிழர் பற்றி இதுவரை பலரும் அறிந்திராத, இதுவரை வெளிச்சத்துக்கு வராத, அரிய உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் எனும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாக இலங்கையில் ‘பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர்’ எனும் இவ்வாய்வு அமைகிறது. இலங்கையில் வாழ்ந்த தமிழர் பற்றிய முக்கிய சான்றாக விளங்குவது 2300 ஆண்டுகளுக்கு முன்பு கற்குகைகளில் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களாகும். இவ்வாறான ஐந்து பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கையில் காணப்படுகின்றன. அந்த கல்வெட்டுக்களில் தமிழர்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்களை இக்கட்டுரைத்தொடர் வெளிப்படுத்துகின்றது. அத்தோடு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு வேலைத் திட்டத்தில், இலங்கையில் காணப்படும், 1500 பிராமிக் கல்வெட்டுகளை மீள்வாசிப்பு செய்ததன் பயனாக வெளிக்கொணரப்பட்ட பல்வேறு அம்சங்களை ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்துவதாகவும் இத்தொடர் அமைகிறது. இவ் ஆய்வில் தமிழர் பற்றி கூறும் மேலும் பல பிராமிக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அத்துடன் சோழர் காலத்திற்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 600 சிங்களக் கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து அவற்றிலும் தமிழர் பற்றிக் கூறப்பட்டுள்ள பல விபரங்கள் பற்றியும் இத்தொடர் கட்டுரை கூறுகிறது.
ஈழத்தில் தோன்றிய வைத்தியம் தொடர்பான நூல்களில் ஒன்று செகராசசேகரம். கி.பி.15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செகராஜசேகரன் என்னும் பெயருடன் நல்லூரில் இருந்து ஆட்சிசெய்த மன்னன் குடிமக்களுக்காக இந்தியாவில் இருந்து பண்டிதர்களை வரவழைத்து செகராசசேகரம் என்னும் வைத்தியநூலை ஆக்குவித்தான். இதில் பல பகுதிகள் தற்போது அழிந்துள்ளன. தற்போது கிடைக்கும் செகராசேகரம் நூலில் உள்ள ‘இரசவர்க்கம்’ என்ற பகுதியில் சொல்லப்பட்டுள்ள, பாரம்பரிய வைத்திய முறைமைகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள், நோய்களுக்கான சிகிச்சைகள் பற்றி தெளிவுபடுத்துவதாக ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகிறது.
அடையாள அரசியல் என்றால் என்ன என்ற கோட்பாட்டுப் புரிதலை உண்டாக்கி, இலங்கையினுடைய அடையாள அரசியலின் வரலாற்றுப் போக்கினையும், தமிழ் தலைவர்களின் அணுகுமுறைகளையும் விமர்சன நிலையில் நோக்குவதற்கு இந்தத்தொடர் முனைகிறது.
ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.
From the publisher's feed