அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Abaayam! Abaayam!
--
ஆஸ்தான மண்டபத்தில் புலவர்களுக்கு முன்னதாகவே வந்தியத்தேவன் பிரவேசித்தான். அங்கே ஓர் உயர்ந்த சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருப்பவர் தான் சின்னப் பழுவேட்டரையராயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான். அவரைச் சுற்றிலும் பலர் கைகட்டி வாய் புதைத்து நின்றார்கள். அன்று வந்த ஓலைகள் பலவற்றை வைத்துக் கொண்டு ஒருவர் நின்றார். கணக்காயர் கணக்குச் சொல்வதற்குக் காத்திருந்தார். காவல்படைத் தலைவர்கள் சின்னப் பழுவேட்டரையருடைய அன்றாடக் கட்டளைகளை எதிர்பார்த்து நின்றார்கள். ஏவிய வேலைகளைச் செய்வதற்குப் பணியாளர்கள் காத்திருந்தார்கள். சிம்மாசனத்துக்குப் பின்னால் நின்று சில ஏவலாளர் வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள். கையில் வெற்றிலைப் பெட்டியுடன் ஒருவன் ஆயத்தமாயிருந்தான்.
மிடுக்கிலும் பெருமிதத்திலும் யாருக்கும் பின்வாங்காதவனான வந்தியத்தேவன் கூடச் சிறிது அடக்க ஒடுக்கத்துடனேதான் சின்னப் பழுவேட்டரையரிடம் அணுகினான்.
பெரியவரைக் காட்டிலும் சின்னவர் வீரகம்பீரத்தில் இன்னும் ஒருபடி உயர்ந்தவராகவே காணப்பட்டார். நமது வீரனைப் பார்த்ததும் அவர் முகமலர்ச்சியுடன், "யார், தம்பி, நீ! எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார்.
வீர வாலிபர்களைக் கண்டால் சின்னப் பழுவேட்டரையரின் கடுகடுத்த முகம் மலர்ந்து விடும். நாடெங்கும் உள்ள வாலிப வீரர்களைத் தம்முடைய காவல் படையில் சேர்த்துக்கொள்வதில் அவருக்கு மிக்க ஆர்வம்.
"தளபதி! நான் காஞ்சீபுரத்திலிருந்து வந்தேன்! இளவரசர் ஓலை கொடுத்து அனுப்பினார்!" என்று பணிவான குரலில் வந்தியத்தேவன் மறுமொழி சொன்னான்.
காஞ்சீபுரம் என்றதும் சின்னப் பழுவேட்டரையரின் முகம் கடுத்தது.
"என்ன? என்ன சொன்னாய்?" என்று மீண்டும் கேட்டார்.
"காஞ்சீபுரத்திலிருந்து இளவரசர் கொடுத்த ஓலையுடன் வந்தேன்!"
"எங்கே? இப்படிக் கொடு!" என்று அலட்சியமாய்க் கேட்டபோதிலும் அவருடைய குரலில் சிறிது பரபரப்புத் தொனித்தது.
வல்லவரையன் அடக்க ஒடுக்கத்துடன் ஓலைச் சுருளை எடுத்துக் கொண்டே, "தளபதி! ஓலை சக்கரவர்த்திக்கு!" என்றான்.
அதைப் பொருட்படுத்தாமல் சின்னப் பழுவேட்டரையர் ஓலையை வாங்கி ஆவலுடன் பார்த்தார். பக்கத்தில் நின்றவனிடம் கொடுத்து அதைப் படிக்கச் சொன்னார். கேட்டுவிட்டு, "புதிய விஷயம் ஒன்றுமில்லை!" என்று தமக்குத் தாமே முணுமுணுத்துக் கொண்டார்.
"தளபதி! நான் கொண்டு வந்த ஓலை ..." என்றான் வந்தியத்தேவன்.
"ஓலைக்கு என்ன? நான் கொடுத்து விடுகிறேன் சக்கரவர்த்தியிடம்!"
"இல்லை; என்னையே நேரில் சக்கரவர்த்தியின் கையில் கொடுக்கும்படி ..."
"ஓகோ! என்னிடம் நம்பிக்கை இல்லையா? இளவரசர் ஆதித்தர் அப்படி உன்னிடம் சொல்லி அனுப்பினாரோ?" என்ற போது, தஞ்சைக் கோட்டைத் தளபதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.
"இளவரசர் அவ்வாறு சொல்லவில்லை; தங்கள் தமையனார்தான் அவ்விதம் கட்டளையிட்டார்!"
"என்ன? என்ன? பெரியவரை நீ எங்கே பார்த்தாய்?"
"வழியில் கடம்பூர் சம்புவரையர் வீட்டில் ஒருநாள் இரவு தங்கியிருந்தேன். அங்கேதான் பார்க்க நேர்ந்தது. இந்த மோதிரத்தையும் அவர்தான் கொடுத்தனுப்பினார்."
"ஆகா! இதை நீ ஏன் முன்னமே சொல்லவில்லை? கடம்பூரில் இரவு நீ தங்கியிருந்தாயா? இன்னும் யார் யார் வந்திருந்தார்கள்?"
"மழநாடு, நடுநாடு, திருமுனைப்பாடி நாடுகளிலிருந்து பல பிரமுகர்கள் வந்திருந்தார்கள்."
"இரு, இரு! பிறகு சாவகாசமாகக் கேட்டுக் கொள்கிறேன். முதலில் நீயே இந்த ஓலையைச் சக்கரவர்த்தியிடம் கொடுத்து விட்டு வா! அப்புறம் தமிழ்ப் புலவர்கள் வந்து விடுவார்கள். வளவளவென்று பேசிக் கொண்டிருப்பார்கள். இந்தப் பிள்ளையைச் சக்கரவர்த்தியிடம் அழைத்துப் போ!" என்று அருகில் நின்ற வீரன் ஒருவனுக்குச் சின்னப் பழுவேட்டரையர் கட்டளையிட்டார்.
அந்த வீரனைத் தொடர்ந்து வந்தியத்தேவன் மேலும் அரண்மனையின் உட்புறத்தை நோக்கிச் சென்றான்.
மூன்று பக்கங்களில் அலைகடல் முழக்கம் கேட்கும்படியாகப் பரந்திருந்த சோழ சாம்ராஜ்யத்தின் சிங்காசனம் சில காலமாக நோய்ப் படுக்கையாக மாறியிருந்தது. அந்தச் சிம்மாசனத்தில் பராந்தக சுந்தர சோழ சக்கரவர்த்தி சாய்ந்து படுத்திருந்தார். இராஜ்யாதிகாரங்களையெல்லாம் மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு, மருத்துவ சிகிச்சை செய்து கொண்டிருந்தாராயினும் சிற்சில முக்கியமான சந்தர்ப்பங்களில் முக்கியமான மனிதர்களுக்கு அவர் தரிசனம் அளித்தே தீரவேண்டியிருந்தது. அமைச்சர்களும் தளபதிகளும் வேளக்காரப் படை வீரர்களும் அவரைத் தினந்தோறும் வந்து தரிசித்து விட்டுப் போவது இராஜ்யத்தின் நன்மைக்கு அவசியமாயிருந்தது.