எப்படி இருக்கீங்க?
நல்லா இருக்கேன். நீங்க?!
ஆங் நான் நல்லாருக்கேன்.
. . .
வீட்ல எல்லாரும் எப்டி இருக்காங்க?! ம்ம்...எல்லாரும் நல்லா இருக்காங்க.
ம்ம்...
. . .
தேய்வழக்காய் நலம் விசாரிப்புகளில் துவங்கி, சிறிது நேர மேலோட்டமான சராசரி உரையாடலுக்குப் பின் விடைபெறும்/அழைப்பைத் துண்டிக்கும் மனிதர்கள் கண்களில், எதிரே இருப்பவர் தேக்கி வைத்திருந்த கனத்த சோகங்கள், மௌனமாய் விம்மிக் கொண்டிருக்கும் வலிகள் எதுவுமே தென்படாதா?! தொலைப்பேசியைத் தாண்டி மனதில், ஓலத்தின் ஓர்த் துளி ஒலிக்காதா?!
"சொன்னா தான தெரியும்"னு எல்லாத்தையும் தட்டிக்கழிச்சுடறது சுலபம்...
"என்ன ஆச்சு? யூ வான்ட் டு டாக்?!"னு கனிவும் வாஞ்சையும் தரக்கூடிய சில வார்த்தைகளுக்காக ஏங்கும் சோர்வடைந்த மனங்கள் எத்தனையோ உலகில்...
பல வருடப் பழக்கம் என்பதெல்லாம், கணக்கு வைத்துக்கொள்ளவா? பெருமைக்காகவா?! சில மாதங்களே ஆயினும், சிறு மாற்றம் குரலில் தென்பட்டாலோ, முகத்தில் மகிழ்ச்சியின் சுவடகன்று வாட்டம் குடிகொண்டிருந்தாலோ, சற்று இறுக்கம் தளர்த்த முயலாமல், நாம் எங்கு ஏன் நகருகிறோம்?!
தனிமையும் மௌனமும் ஔடதமாய் அமையும் தான், பல வலிகளுக்கு. இருப்பினும் கேட்பாரற்று வடிந்து கொண்டிருக்கும் கண்ணீரோடும் ஆறாத ரணங்கள் யாரோடும் பகிராத நிலையிலும் நம்மைச் சுற்றி பலர் உள்ளனர்...
செவி சாய்த்தல் போதாது; சற்றே மனம் சாய்த்து பாரங்கள் கரைக்க முயலுவோம். நம்பிக்கையும் நேரமும் பரிசளித்து நிகழும் அரிதாரமற்ற உரையாடல்களால் ஆழமான புரிதல்கள் புலரும்; எந்த உறவிலும் நங்கூரமாய்த் தோள் கொடுக்கும்.
"எப்படி இருக்கீங்க...?!"
"தெரியல..."
ஹ்ம்ம்... பேசனுமா?...
ஆமா... ஆனா...
" சாயந்திரம் சந்திக்கலாமா..."