திருச்சிற்றம்பலம்
குறிப்பு:
1. பாசத்தால் கட்டுண்ட பசுக்களின் உய்வின் பொருட்டு இறைவனால் நுண்ணுடலும் (சூக்ஷ்ம சரீரம்) அவற்றின் வினைக்கேற்ற (பரு) உடல்கள் பின்னும் அருளப்பட்டன என்பது சித்தாந்தம் கூறும் உலகின் துவக்கம்.
2. நுதல் – நெற்றி; இறைஞ்சி – வணங்கி; இறந்து – கடந்து; புகழும் ஆறு – புகழும் வகை.
விருகம் – மிருகம்; தாவர சங்கமம் – (ஸ்தாவர ஜங்கமம்) சராசரம்.
இறைவனுடைய பெருமையை அறிந்து அவருடைய திருநாமங்களில் மூழ்கியிருப்போருக்கு இங்கேயே வீடுபேறு – வேதம்.
3. வேதங்கள் பலவாறெல்லாம் ஆழ்ந்து ஆராய்ந்தும், பலபல கோணங்களில் கூறியும் அவர் தம் பெருமையைக் கூறச் சொற்கள் இல்லாமையை உணர்த்துகின்றன. அத்தகு பெரிய அவரோ மிகச் சிறியவற்றிலும் நிறைந்துள்ளார். என்ன விந்தை இது ?!
சுடர் மிகுவதால் இருளுக்குக் கேடு – பசவண்ணர். உள்ளத்தில் மெய்ச்சுடரான இறைவன் வர பொய்யிருளுக்குக் கேடு.
4. வெய்ய – காய்கின்ற/ சூடான; தணிய – குளுமையான.
இறைவனுக்கு பிறவற்றைப் போலத் தோற்றம், வாழ்வு, முடிவு இல்லாமையைக் குறிப்பிட்டு, அப்பெருமானே மற்ற எல்லாப் பொருள்களுக்கும் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்கள் மூலம் இயங்கச் செய்கிறார் என்னும் திறத்தை வெளிப்படுத்துகிறார்.
5. ஒப்பற்ற உன்றன் அடியார் நடுவுற்றிருக்கும் அருளைப் புரிவாய்.
6. மணமானது காண இயலாத நுண் பொருள்களாகப் பரவுகின்றது. இறைவன் அந்த நுண்மையினும் நுண்மையாக இருக்கிறார்.
7. சேய்மை – தொலைவு; நணியது – அருகில் இருப்பது; மாற்றம் – சொல்