திருச்சிற்றம்பலம்
குறிப்பு:
1. இறைவன் எங்கும் நிறைந்து இருக்கும் பொழுது அவர் எதனை நீங்குவார், புதிதாக வருவதற்கு அவர் இல்லாதது என்ன உள்ளது, அவர் கலந்து இல்லாத பொருள் தான் ஏது – புதிதாகக் கலப்பதற்கு ? இவ்வாறு எல்லாப் பொருளிலும் இருந்த போதிலும், பொருளின் தன்மையால் குறைபடாமல் தான் என்றும் தூயவனான புண்ணிய மூர்த்தியாகவே உள்ளார்.
இறைவன் சொற்களால் சொல்லி முடியாதவர். நுண் உணர்வால் அறியப்படுபவர். (ஒ. அவனருளே கண் கொண்டு காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே–தேவாரம் )
சிவபெருமான் எல்லாப் பொருள்களுடனும் கலந்து தோன்றினும் இவை எதுவும் அவரல்ல. அவர் கலந்து இருப்பது போலவே எல்லாம் கடந்தும் உள்ளார்.
சிவபெருமானுக்கு அவதாரம் இல்லை. அவர் பிறப்பது இல்லை.
3. இறைவன் அன்பர்களுக்கு எளியவனாகக் காட்சி அளித்த போதிலும், அவருடைய பேரியல்பு யாராலும் முழுதும் ஆய்வது பற்றி எண்ணியும் பார்க்க இயலாதது. எனவே தான் அவருடைய இயல்பினை சற்றேனும் காண முயல்கின்ற ஞானிகளின் திறனை வியந்து கூறுகின்றார் மாணிக்க வாசகர். (ஒ. பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறியாமை விளம்புகின்றேனே – திருமந்திரம்)
இருள் என்பது (ஒளி) இன்மையைக் குறிக்கும். உலகங்கள் எல்லாம் ஒடுங்கிய பின்னர் இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லாத அந்நிலை ஏதுமற்ற இருள் போன்றது அவ்விருளில் ஒளியாக இறைவன் ஆடுகின்றார்.
பொருளினை உணர்ந்து சொல்லுவதன் மூலம் உணர்வினோடு ஒருமைப்பட்டுத் தொழுதலால் அவ்வகை வணக்கத்தின் பெருமை வலியுறுத்தப்படுகின்றது. திருச்சிற்றம்பலம்.