Tea and me...
தேநீர்த் தருணங்கள்...
ஒரு கோப்பை தேநீரோடு என்னவெல்லாம் செய்ய இயலும்?!...
மழையோடு, நினைவுகளை சந்திக்கலாம், நிகழ்கால கணங்களில் வாழ்வை சுகித்து கரையலாம், ப்ரிய தோழியோ தோழனோ வருகையில் சில சிட்டிகை சந்தோஷங்கள் தூவி உரையாடல்களை ருசிக்கலாம்...
இசையில் தொலைந்து மௌனத்தில் மீண்டெழலாம்...
கண்ணீரின் கனம் சற்றே குறைவதை உணரலாம்... நாளைகளை வரவேற்க மனதை தயார்ப்படுத்தலாம்...
இன்னும் எத்தனையோ ஏலம் கமழும் தேநீர்த் தருணங்களில் நம் உள், போதையுணரலாம்...
ஒரு புறம் மனம் கொண்டாடி மகிழ,
சுகிக்கும் ஒவ்வொரு துளியின் பின்னும் பல்லாயிர உழைக்கும் கரங்கள் நமக்கான இன்பங்களை தேர்ந்தெடுத்துப் பறித்து பதப்படுத்துகின்றன...
பச்சைப் பசேலென மரகத விரிப்பாய் தேயிலைத் தோட்டங்கள்... குளிர்பனி பூத்திருக்கும் ஏகாந்த சூழல்... நீலகிரித் தைல வாசமதை மென் காற்றின் விரல்கள் மனதை நிறைத்துச் செல்லும்...
இயற்கை மீது தீராக் காதல் கொண்டு தோட்டத்தில் வலம் வர, சூரியப் பொன்னொளியில் இலைகளெல்லாம் மினுமினுக்க, அதைவிட அதிகமாய் பளிச்சிடும் புன்னகை ஏந்திய அன்பு பூத்த முகங்கள் அங்கங்கே தென்பட்டன.
கனமான கத்திரிக்கோல்களும், சாக்குப் பைகளையும் ஏந்தி, அட்டைப் பூச்சிகள், சிறுத்தை, காட்டெருமை, கரடி என விலங்குகளின் தாக்குதல் சாத்தியமுள்ள சூழலில் உழைத்து, வறுமையும் நாளை பற்றிய கவலைகளும் சுமந்த மனதை வெளிக்காட்டாத கண்களும் கொண்டு நாம் தினமும் ருசிக்கும் தேநீருக்கு காரணங்களாகின்றனர்.
ஆசையாக பேசுகையில், அம்மாடி அவ்வளவு வாஞ்சை அவர்களிடம். புகைப்படம் எடுக்கையில், பரவசமும் வெட்கம் பூப்பதும் கொள்ளை அழகு.
சில நிமிடங்கள் கையிலேந்தவே பாரமாய் உள்ளது கத்திரிக்கோல். வருடங்களாக தினமும் பாரம் சுமக்கும் கைகள் அனைத்தும் காப்பு காய்ச்சி இருக்கின்றன...
நன்றியோடு அவர்கள் உள்ளங்கைகளில் முத்தம் வைத்தால், சற்று இதம் தருமா அவர்கள் மனதிற்கு?
என்றாவது ஒரு நாள், சற்று இளைப்பாறச் சொல்லி நாம் யாரேனும் அவர்களுக்கு தேநீர் பரிமாறியிருப்போமா?!
தேநீரைப் போலத்தான், நாம் சுகமாய் நுகரும் பலவித வளங்களும், தருணங்களும்... நம் மகிழ்ச்சியின் பின், எத்தனையோ முகம் தெரியா உயிர்களின் உழைப்பு விதைக்கப்பட்டிருக்கின்றன.
நன்றி மறவாதிருப்போம்... மனிதம் விதைப்போம்...
ஒரு கோப்பை தேநீரோடு, வாழ்வை புரிந்து கொள்ள முயலலாம்...