சேரனும், சோழனும்
பாண்டியனும், பல்லவனும்,
விஜயநகரம், பாமினி
சாளுக்கியர், மராத்தியர்,
கலிங்கம், பாஞ்சாலம்
மகதம், அங்கம்,
கோசலம், காந்தாரம்
கூர்ச்சரம், காம்போஜம்
குப்தர்கள், குஷாணர்கள்
மொகலாயர்கள், மௌரியர்கள்
லோடி வம்சம், கில்ஜி வம்சம்
அடிமை வம்சம், துக்ளக் வம்சென
சிற்றரசாய் பேரரசாய்
சிதறுருண்டு கிடந்தோம்நாம்!
வர்த்தகக் கொடிபிடித்தவன்
நர்த்தனமாடினான் நாட்டைப்பிடித்து!
பிரித்தாளும் சூழ்ச்சி செய்தது
பிரித்தானியம் எழுச்சி பெற்றது,
அன்னைதேசம் அடிமையானது,
ஐரோப்பியதேசம் அரசமைத்தது!
துந்துபி முழங்கியது
துப்பாக்கி வெடித்தது!
அங்கம் பிளந்தது
செங்குருதி ஓடியது!
மண்ணை மீட்க
மகத்தான தியாகங்கள்!
தேசத்தை மீட்க
தேகமெல்லாம் காயங்கள்!
காலனி ஆதிக்கத்தில்
காலணியாய் நசுக்கப்பட்டோம்!
மேலணி அணியாத
மேதையின் தலைமையேற்றோம்!
நள்ளிரவில் ஓர்விடியல்
நமக்காக உதித்தது,
யூனியன்ஜாக் அகன்றது
மூவர்ணம் பறந்தது!
மதமெனும் தந்திரம்
மாயாஜால மந்திரம்
சுதந்திர நாட்டுக்கு
இவையா சுந்தரம்?
தொழில்செய்ய கேந்திரம் அமைப்போம்,
புதிதுபுதிதாய் எந்திரம் சமைப்போம்!
மொழியாக மதமாக
இனமாக சாதியாக
ஆதிக்கத்தை திணித்தால்
ஆணிவேரை அறுப்போம்!
ஆயிரம் கோடிகளுக்கு
ஆயுதங்கள் வாங்கி
வல்லரசாவதா
இப்போதைய தேவை?
காகிதங்கள் வார்த்து
கல்வி வளர்த்து
நல்லரசாவதே
இப்போதைய தேவை!
சுயாட்சி பெற்ற மாகாணங்கள்
சமத்துவம் பேணும் சட்டங்கள்
திக்கற்றோருக்கான திட்டங்கள்
வண்டு தேனெடுப்பதுபோல் வரிகள்
உறுப்பினர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் மக்கள் மன்றங்கள்
விழிநீரை வரவழைக்கா விலைவாசி
ஆதிக்கமற்ற சமுதாயம்
அமைந்த தேசமாய்
அன்னை தேசம் அமைய
எழுபத்தைந்தாவது
விடுதலை நாளில்
எடுப்போம் நாம் சூளுரை!
தாய்நாட்டையும்
தாய்மொழியையும்
இருவிழியாய் காத்து
இறும்பூது எய்துவோம்!
*75-வது விடுதலை நாள் வாழ்த்துகள்*
_*சு.முத்துராமன் எம்.ஏ*_