நட்போ, காதலோ, ஆணோ, பெண்ணோ,
எந்த உறவானாலும்
அன்பால்
பிரபஞ்சத்தில் நம் இதயத்தின் துகள்கள்
எத்தனைப்பேரிடம் சென்றிருக்கும்...
நாம் பெறும்
ஒரு துளி அன்பில்
கடலளவு ஆனந்தம் கிடைக்குமென எண்ணி
கானல் எத்தனைக் கண்டிருப்போம்...
புதிர் துண்டுகளாய்(puzzle pieces) நம் இதயத்தைப் பலரிடம் கொடுத்து வைப்பதும் உண்டு...
இத்தனையும் எதற்காக?!...
பேரன்பின் அருவியின் கீழ் நிற்க, உள் நனைந்து உதிரமினித்து உயிர் வளி கண்டு வலிகளுக்கு அருமருந்தாகும் அன்பென்றுதானே?!
ஆகிறதா?!... அருமருந்தாகிறதா?!...
எத்தனை ஏமாற்றங்கள், ஏளனங்கள், நம்பிக்கை நீர்த்துப் போகும் நயவஞ்சகங்கள், நம் இருத்தலை இதயத்தை ஒரு பொருட்டாகவே எண்ணாத கர்வத்தில் கனக்கும் கல்நெஞ்சங்கள், காரியவாத பச்சோந்திகள்...
அன்பை மட்டுமே அறிய முனையும் மனங்கள், இத்தனை ரணங்களை எப்படித் தாங்கும்?!...
ஏன் தாங்க வேண்டும்?!
நம் கண்ணீரின் கடலில் நாமே மூழ்காமலிருக்க
துகள்களாய் துண்டுகளாய் சுற்றி,
அன்பிற்காக மண்டியிடும் ஏங்கும் இதயத்தை
இன்றே இப்பொழுதே வீடழைத்து வரவேண்டும்...
முழுதாய்!
முழுதாய் நம்மோடே இருக்கட்டும் நம் இதயம்...
நம்மை விட யார் கொண்டாட இயலும் காதலாகி கசிந்துருகி நம் இதயத்தை?!...
பேரன்பைப் பொழிவோம் பிறர்மீது
அதில்
முதல் துளி நம் மீதே இருக்கட்டும் என்றென்றும்...
அன்பாலானது உலகம்
அதில் நாமுமிருக்கிறோம்... நம்மையும் நேசிக்க மறவாதிருப்போம்...
~மதுமதி. H