பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய சோழர்கள் நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவர் கோப்பரகேசரி வர்மன் விசயாலய சோழன் ஆவார். காந்த மனோகரச் சோழனின் மகனான விஜயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசராக உறையூரில் பதவி ஏற்றார். இவரே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவர். கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியப் போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினார். இதற்க்கு பின்னர் 250 வருடம் தஞ்சாவூர் சோழர்களின் தலைநகராக விளங்கியது.