மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. மத்திய அரசும் நாணயத்தை வெளியிட அனுமதி வழங்கியிருந்தது. அதன்படியே நாணயத்தின் வடிவமைப்பெல்லாம் முடிந்து, நாணயமும் அச்சிடப்பட்டது. இந்த நாணயம் வெளியிடும் விழாவுக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று, தமிழக அரசும் கடந்த 18-ம் தேதி வெளியிட முடிவுசெய்தது.இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட்டார். திமுக அரசும், மத்திய பாஜக அரசும் கருத்தியல்ரீதியாக மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டிருந்த சூழலில், திமுக அரசு நாணய வெளியிட்டு விழாவுக்கு பாஜக அமைச்சர் ஒருவரை அழைத்தது பேசுபொருளானது. திமுக, பாஜக-வுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தார். அதற்கு திமுக தலைவரும் கடுமையாகச் சாடியிருந்தார். இந்த விவகாரத்தில் நடப்பதென்ன..?