இப்போது இருக்கின்ற வடமொழி ஆண்டிலே குழப்பம்தான் மிச்சம்.
நம் மாதத்திலும் தமிழனுக்கு விழாக்கள் இல்லை, சித்திரை தொடங்கினால் சித்திரா பௌர்ணமி என்கிறோம். அதைக்கூட சித்திரை நிலவு என்று சொல்லுவதில்லை, சித்திரா பௌர்ணமி என்கிறோம். வைகாசி என்றால் விசாகம் என்கிறோம்.
ஆனி என்றால் ஆனித்திருமஞ்சனம் என்கிறோம், ஆடி மாதம் என்றால் ஆடிப்பூரம் என்று அதற்கு ஒரு உற்சவம் கொண்டாடுகிறோம், ஆவணி என்றால் ஆவணி அவிட்டம் என்று யாரோ ஒருவன் பூணல் போட்டுக்கொள்ள அதை நாம் விழாவாக கொண்டாடுகிறோம்,
புரட்டாசி என்றால் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருக்கிறோம் நவராத்திரி கொண்டாடுகிறோம், ஐப்பசி என்றால் தீபாவளி, கார்த்திக் என்றால் தீபம், மார்கழி என்றால் அதை அறவே பீடை மாதம் என்று ஒதுக்கி விட்டோம். கீதையிலே கண்ணன் சொன்னான் "மாதங்களில் மார்கழியும் நானே என்று",
அதை பீடை மாதம் என்று சொல்லிவிட்டோம். ஆக கண்ணன் சொன்ன மாதம் மாதங்களில் பீடை மாதம்தான் அவன் என்று ஒப்புக் கொண்டதாக. தை, அதைக்கூட பொங்கல் மாதம் என்று சொல்வதில்லை, தைப்பூசம் என்கிறோம், மாசி மகம் என்கிறோம், பங்குனி உத்திரம் என்கிறோம்.
இப்படி மாதத்திற்கு ஒரு விழா தமிழனுக்காக அல்ல நட்சத்திரங்களுக்காக. அதைப்போலவே ஆண்டு கணக்கு, 60 ஆண்டு தான் என்று ஒரு வளையத்தை கூறியிருக்கிறோம். அந்த 60 ஆண்டுகள் எப்படி பிறந்தன? ஒரு அசிங்கம் அது. நாரதருக்கு திடீரென்று ஒரு ஆசை ஏற்படுகிறது. கண்ணனிடம் செல்கிறார்,
கண்ணன் என்றால் தமிழ் கடவுள். கிருஷ்ணனிடம் செல்கிறார், அவன் தமிழ் கடவுள் அல்ல. எப்படி யாதவா இங்கே வந்தாலோ அதைப்போலவே கிருஷ்ணன் கண்ணனாக வந்துவிட்டான். நம்முடைய தமிழ் குடிமகன் ஆயர், எவ்வளவு அழகான தமிழ்ச்சொல், கோனார் - ஐயம்பெருமாள் கோனார், எவ்வளவு அழகான தமிழ்ச்சொல்.
நமக்கு தமிழ் பிடிப்பதில்லை ஆயரையும் கோனாரையும் விரட்டி விட்டு யாதவர் என்று வைத்துக் கொண்டோம். தமிழன் யார் என்று கேட்கிற அத்தமிழ் குடிமகன், ஆயரையும் கோனாரையும் விரட்டி விட்டு யாதவர் ஆனவர்கள் எல்லாம் தமிழ் குடிமகனாக இருக்க முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.
கார்மேகக் கோனார், ஐயம்பெருமாள் கோனார் - இவைகளெல்லாம் ஏதோ சொல்லத் தகாத சொல்ல கூசுகின்ற கேவலமான சொற்கள் என்று நாமே கணக்கிட்டு இவைகளை எல்லாம் நமது அகராதிகளில் இருந்தே விரட்டிவிட்டு, புதிய வடமொழிச் சொற்களை பயன்படுத்தும் அளவிற்கு தாழ்வு நிலைக்கு போய் விட்டோம்.
அதனால் தான் வருடக்கணக்கிலே கூட அசிங்கமான பிறப்பெடுத்த வருடங்களை நம்முடைய வருடங்களாக ஆக்கிக் கொண்டோம். நாரதருக்கு ஆசை ஏற்பட்டது, கிருஷ்ணபகவான் இடத்திலே சென்றான். அவர் என்னவென்று கேட்டார். "கிருஷ்ணா உன்னுடைய அழகைப் பார்த்து சொக்கிப் போனேன்",
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும், "நான் பெண் ஆகிறேன்", சரி, "நாமிருவரும் உறவாட வேண்டும்". என்ன உறவு? விளக்கத் தேவையில்லை. உறவாடினார்கள், ஒரே இரவில் அறுபது குழந்தைகளை பெற்றார்கள். அந்த 60 குழந்தைகளின் பெயர்தான் பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது என்று அட்சய வரை முடிகின்ற 60 ஆண்டுகள். இந்த 60 குழந்தைகளின் பெயரால் 60 ஆண்டுகள். இந்த 60 ஆண்டு முடிந்து விட்டால் ஒருவனுடைய அகவையை நம்மால் சரியாக நிர்ணயிக்க முடியுமா? என்னுடைய தந்தையார் கால ஜோதிடர்கள் கூறியது நான் குரோதன ஆட்சி வருடத்தில் பிறந்தவன்.
எனக்கு இப்பொழுது வயது 71. குரோதன ஆட்சிக்குப் பிறகு அட்சய, இப்பொழுது என்னுடைய வயது என்னவென்று கேட்டால் 12 வயது அல்லது 10 வயது. 72 வயது சொல்ல முடியாது, ஏனென்றால் ஒரு வட்டம் முடிந்து போய்விடுகிறது. அந்த 60 வயது குள்ளேயே சுழன்று சுழன்று வருவதால் வயது கணக்கிட முடியாது. 1994,
1995 என்றெல்லாம் இருப்பதைப் போல இதைவைத்து ஒன்றும் பெரிய முரண்பாட்டை ஏற்படுத்திவிட முடியாது என்ற காரணத்தினாலே தான் தமிழனுக்கு என்று தனி ஆண்டு கணக்கு வேண்டும், தமிழனுக்கு என்று தனி ஆட்சி மொழி வேண்டும் மாநிலத்திலே மட்டுமல்ல மத்தியிலும் வேண்டும் என்று குரல் கொடுக்கிறோம் நாம்.
தமிழனுக்கு என்று தனி ஆண்டுக் கணக்கு வேண்டும் என்கிற அந்த உறுதிப்பாட்டில் திடமாக இருக்க வேண்டும். அதில் வெற்றி பெறுகின்ற வரையிலே நாம் அதற்காக பணியாற்ற வேண்டும்.
-முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி