மணிபல்லவம் என்பது கடல் சூழ்ந்த ஒரு தீவு; அது புகாரின் தென்திசையில் முப்பது யோசனை தூரத்தில் இருந்தது. அதனை சென்ற நூற்றாண்டில் நயினாதீவு என்று அடையாளங் கண்டுள்ளனர். ஆயினும் அங்கு புராதனமான பௌத்த சமய சின்னங்கள் எவையும் கிடைக்கவில்லை.
மணிபல்லவத்தில் அமைந்த தர்மாசனம் கடலோரமாகவும் நாவாய்களின் தரிப்பிடமொன்றின் அண்மையிலும் இருந்தது என்பதும் கம்பளச் செட்டியின் கதைமூலம் உணரப்படும். அத்தீவிலே தரித்துநின்று செல்லும் நாவாய்கள் கடற் பாறைகளில் மோதி உடைவதைப் பற்றியும் அக்கதை மூலம் அறியமுடிகின்றது. மணிபல்லவம் பற்றி மணிமேகலையிற் சொல்லப்படும் விபரங்கள் நயினா தீவுக்கன்றி நெடுந்தீவிற்கே பொருத்தமானவை.
நெடுந்தீவிலே கடலோரமாகவுள்ள வெடியரசன் கோட்டையில் ஆதிவரலாற்றுக் காலத்துப் பௌத்தப் பள்ளிகளின் அடையாளங்கள் உள்ளமை கவனித்தற்குரியது. அந்தப் பள்ளிகளும் காலத்தால் மணிமேகலைக்கு முற்பட்டவை. அவை நாக அரசர்களின் திருப்பணிகளாகும்.
அங்கு சேதியங்கள் சிலவற்றின் அடித்தளங்கள் சீர்குலையாத நிலையிற் காணப்படுகின்றன. அங்குள்ள, தமிழ்ப் பிராமி வடிவங்களில் எழுதிய கல்வெட்டுகள் அவற்றுக்கும் நாகருக்கும் இடையிலான தொடர்புகளின் அடையாளங்களாகும்.
3.
கந்தரோடையில் அமைந்திருக்கும் சேதியம் போன்ற சிறிய மிதமான அளவுடைய கட்டுமானங்களிடையே அவற்றை வலம் வந்து வழிபடுவதற்கான சுற்றுப் பாதைகளுக்குப் போதிய அளவான இடைவெளிகள் காணப்படவில்லை. அவை வழிபாட்டிற்குரிய கட்டுமானங்களாக அமைக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது.
அவை காலஞ்சென்ற பௌத்த துறவிகளின் ஈமப்பள்ளிப் படைகளாக அமைந்தவை என்று கொள்ளுவதற்கான காரணமுண்டு. அவற்றுட் சிலவற்றை அகழ்வு செய்தபொழுது ஈமத்தாழ்வைகள் அடையாளங் காணப்பட்டுள்ளன.