எழுநா

எழுநா

Download on the App Store

எழுநா episodes

  • கரும்புக்காரன் எனும் தெய்வமும் வழிபாட்டுமுறைகளும் | ஈழத்து நாட்டார் தெய்வங்கள் | தி. செல்வமனோகரன்

    பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது.

    23 min
  • தமிழ்ச் சமூகத்தின் அடிக்கட்டுமானங்களும் கருத்தியலும் | ஈழத்து தமிழரின் ஆற்றுகைக் கலைகள் : மரபும் மாற்றமும் | சின்னையா மௌனகுரு

    ஈழத்து மரபுவழி ஆற்றுகைக் கலைகளுக்கு ஒரு வரலாறும் வளர்ச்சியும் உண்டு. தென்மோடி, வடமோடி, சிந்துநடைக் கூத்துகள், வாசாப்பு, இசை நாடகம், பள்ளு, குறவஞ்சி, வசந்தன், மகுடி என அது பன்முகப்பட்டது. இவற்றுள் சில அருகிவிட்டன; சில கால ஓட்டத்துடன் நின்று போராடி நிலைக்கின்றன; சில மாறுகின்றன. காலந்தோறும் ஏற்பட்ட பண்பாட்டு கலப்புகளும், அதனை உருவாக்கிய அரசியல், பொருளாதார, சமூக காரணங்களும் இம்மாற்றங்களுக்கு அடித்தளமாக உள்ளன. இந்த பல்வேறு வகைப்பட்ட ஆற்றுகை வடிவங்கள் தத்தமக்கென அழகியலையும், அமைப்பையும், வெளிப்பாட்டுத் திறனையும் கொண்டுள்ளன; ஒன்றிலிருந்து ஒன்று பெற்றும் வளர்ந்துள்ளன. இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்வதும், அவை மாற்றம் பெற்றபோது அது சம்பந்தமாக நடந்த விவாதங்களை அறிவதும், இதன் இருப்பைத் தக்கவைக்கும் முயற்சிகளில் ஈடுபடுபவருக்கும், அதனை மேலும் வளர்த்துச் செல்ல விரும்புவோருக்கும் உதவியாக இருக்கும். இப் பல்வேறு ஆற்றுகை வடிவங்கள் பற்றியும் அவை கல்வி உலகில் ஏற்கப்பட்ட பின்னணிகள் பற்றியும், அதனால் இந்த ஆற்றுகைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் அறிமுகம் செய்வதாக ‘ஈழத்துத் தமிழரின் ஆற்றுகைக் கலைகள் : மரபும் மாற்றமும்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமைந்திருக்கும்.

    22 min
  • பௌத்த மத மறுமலர்ச்சியின் இரண்டாம் காலகட்டம் : 1883 – 1897 | இலங்கையின் இனவாத அரசியல் - ஒரு வரலாற்றுப் பார்வை | பி. ஏ. காதர்

    இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்குவதாகவே இலங்கையின் ‘இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடர் அமைகிறது. இதன்படி, 1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்  நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தத் தொடர் ஆராய்கின்றது. இரு பகுதிகளாக அமையவுள்ள இந்தத் தொடரின் முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இனவாத அரசியலின் பாத்திரம் பற்றியும் ஆராய்கிறது.

    27 min
  • இலங்கையில் தமிழ்க்குயர் சமூகத்தால் எதிர்கொள்ளப்படும் மருத்துவ மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் | வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல் | அனுதர்சி கபிலன்

    இலங்கையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடமாகாணத்தில் குயர் மக்களுக்கான உரிமைக் குரல்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணமுடிகிறது. ‘வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல்’ என்ற இத் தொடரானது, வடபுல மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள பிற்போக்கான கருத்தியல்கள் பால்நிலைச் சமத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைதல், குயர் மக்கள் இந்தச் சமூகத்தின் மத்தியில் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்வதில் கலாசாரம் – சமயம் அல்லது மதக் கட்டமைப்புகளின் பங்கு, வடபுலத்தில் குயர் அரசியல், குயர் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய குயர் செயற்பாட்டாளர்களின் சமத்துவம் நோக்கிய முன்னெடுப்புகள், கல்வியியலாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட  மையக்கருத்து வெளிப்பாட்டளர்கள் குயர் அரசியல் அல்லது அது சார்ந்த விடயங்களில் பேணும் மௌனிப்பு என்பன பற்றிப் பேசவிழைகின்றது.

    12 min
  • இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும் | இலங்கையில் பௌத்தம் | கந்தையா சண்முகலிங்கம்

    ‘இலங்கையில் பௌத்தம்’ என்னும் இந்தத்தொடர் பௌத்தம் பற்றி மானிடவியலாளர்களாலும் சமூகவியலாளர்களாலும், அரசியல் விஞ்ஞானிகளாலும் எழுதப்பட்ட ஆய்வுகள் பற்றி அறிமுகம் செய்வதாக அமைகின்றது. குறிப்பாக 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பௌத்த சமய சீர்திருத்தவாதம், சமூகம், பண்பாடு, அரசியல், இன உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் அரசியல் பௌத்தத்தின் வகிபாகம் என்பன பற்றி ஆய்வாளர்களின் கருத்துக்கள் விரிவாக இந்தத் தொடரில் நோக்கப்படும்.  கணநாத் ஒபயசேகர, ஸ்டான்லி ஜே. தம்பையா, எச். எல். செனவிரத்தின, கித்சிறிமலல் கொட, சரத் அமுனுகம, ஜயதேவ உயன்கொட, குமாரி ஜயவர்த்தன, லெஸ்லி குணவர்த்தன ஆகிய இலங்கையின் சமூக விஞ்ஞானிகளின் நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் , ஹவ்வார்ட் றிஜின்ஸ், உர்மிலா பட்னிஸ், றிச்சார்ட் கொம்பிரிட்ஜ், யொனதன் ஸ்பென்சர் முதலிய இலங்கையரல்லாத ஆய்வாளர்களின் ஆய்வுகள் சிலவும் இந்தக் கட்டுரைத்தொடரில் விமர்சன நோக்கில் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

    11 min
  • வரலாறு மற்றும் இலக்கியப் பதிவுகளில் நாகநாடும் நாகர்களும் - பகுதி 1 | பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம் | சிவ. தியாகராஜா

    யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையில் மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ எனும் இக்கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பவற்றின் பரந்த காட்சிப் பதிவாக விளங்கும்.

    23 min
  • பேரரசும் பெண் விடுதலையும் | வேந்தர் இல்லா வையகம் : இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம் | கார்த்திகேசு இந்திரபாலா

    ”  ‘வேந்தர் இல்லா வையகம்: இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம்‘ எனும் இத்தொடர் ‘ஒருவர் வாழ்க்கை ஊடாகத் தென்படும் காட்சிகள்‘ பற்றியதாகும். இத்தொடர் கட்டுரைகள் என் வாழ்க்கையில் கண்ட, கேட்ட, கேள்விப்பட்ட, வாசித்தறிந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய மனப்பதிவுகள் பற்றியும் அவற்றால் என் மனதில் உருவாகிய கருத்துகள் பற்றியும் கூறுபவை. இவை வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் அல்ல. இவை யாழ்ப்பாணத்தைப் பற்றியவை; 20 ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்டவை. வரலாற்றை எழுதுவோர்க்குச் சான்றுகளைக் கொடுத்துதவும் சுவடிகள் போன்று இத்தகைய நினைவுப் பதிவுகளும் பயன்படும் என்ற நோக்கத்துடன் இவை எழுதப்படுகின்றன.”

    –கார்த்திகேசு இந்திரபாலா– 

    11 min
  • சுதந்திரத்திற்கு முந்திய அரை நூற்றாண்டு வரலாற்றில் இலங்கையின் சட்ட சபைகளில் அரசியல் பிரதிநிதித்துவம் - பகுதி 1 | இலங்கையின் அரசியல் 1981 - 1900: பன்முகநோக்கு | தமிழில்: கந்தையா சண்முகலிங்கம்

    ‘இலங்கையின் அரசியல் 1981 – 1900: பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1981 முதல் 1900 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

    15 min
  • லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் - பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்கள் | இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

    இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

    13 min
  • இலங்கையில் ஜனாதிபதிமுறையை ஆதரித்து முன்வைக்கப்படும் போலியானதும் நகைப்புக்கிடமானதுமான வாதங்கள் - பகுதி 2 | அரசியல் யாப்பு சிந்தனைகள் | தழுவலாக்கம் : கந்தையா சண்முகலிங்கம்

    இலங்கையின் சட்டத்துறை அறிஞர்களும், அரசியல் விஞ்ஞானிகளும் இலங்கையின் அரசியல் யாப்புகள் பற்றிய அடிப்படைப் பிரச்சினைகள் (Core Issues) பற்றிய உயராய்வுகள் பலவற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளனர். 1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த மூன்று அரசியல் யாப்புகள் பற்றியும், இம்மூன்று அரசியல் யாப்புகளுக்கும் கொண்டுவரப்பட்ட யாப்புத் திருத்தங்கள் பற்றியும், நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றியும் இவ் உயராய்வுகளில் விரிவாக அலசப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில் உள்ளடங்கிய பெறுமதிமிக்க கருத்துகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதே ‘அரசியல் யாப்புச் சிந்தனைகள்’ என்னும் இத்தொடரின் நோக்கமாகும். 

    27 min

About எழுநா

From the publisher's feed

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது.