எழுநா

எழுநா

Download on the App Store

எழுநா episodes

  • நாக குலத்தவர் பற்றிக் கூறும் ஹிபவுவ கல்வெட்டு | இலங்கை பிராமிக் கல்வெட்டுகளில் நாகர் | என். கே. எஸ். திருச்செல்வம்

    ‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.

    5 min
  • அறிமுகம் | சமத்துவச் சமூகம் காணப் போராடுவோர் பார்வையில் ஆறுமுக நாவலர் | ந. இரவீந்திரன்

    இன்றைய இருப்பில் இயங்கும் சமூக சக்திகள் தத்தமக்கான நலன்களின் நோக்கில் கடந்த காலத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்றன. மேலாதிக்கத் தமிழ்த் தேசியம், தலித்தியம், விடுதலைத் தேசியம் என்பவற்றின் கருத்தியல் தளங்களை அடிப்படையாக உடைய சமூக சக்திகள் இன்றைய இயக்கங்களாகச் செயற்படுகின்றன. எமக்கான நவீன வரலாற்றைக் கட்டமைத்த ஆளுமையாகிய ஆறுமுக நாவலர் குறித்து இவை ஒவ்வொன்றும் தமக்கே உரிய கண்ணோட்டத்தில் மறுவாசிப்பை மேற்கொள்கின்றன; இதன்வழியாக, கடந்தகாலச் சமூக சக்திகள் வழிவகுத்துவிட்டிருந்த இயங்குமுறை அமைந்த அடித்தளங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றன. இதேபோன்ற பின்னணிக்குரிய ஏனைய சமூகங்களில் இயங்கிய ஆளுமைகளுடன் எமது இயங்கு தளத்துக்குரிய ஆளுமைகளை ஒப்பிடுவதன் வாயிலாக செய்யப்பட்டவற்றையும், செய்திருக்கத்தக்கன எவை என்பதையும் மதிப்பீடு செய்வது அவசியமானது. இவற்றின் பெறுபேறுகள் எமக்கான எதிர்கால மார்க்கத்தை வடிவமைப்பதற்கு மிகமிக முக்கியமானவை ஆகும். “சமத்துவச் சமூகம் காணப் போராடுவோர் பார்வையில் ஆறுமுக நாவலர்” எனும் இத்தொடரானது நாவலரின் பங்களிப்புக் குறித்த மதிப்பீட்டின் வழியாக சமகால இயங்குமுறையைக் கணிப்பிட்டு, சுயவிமரிசனங்களுடன் புதிய பாதையையும், அதற்குரிய சரியான மார்க்கத்தையும் கண்டடையும் நோக்கில் எழுதப்படுகிறது.

    19 min
  • சிவில் சமூகமும் சிவில் சமூக அமைப்புகளும் | அரசறிவியல் கலைக் களஞ்சியம் | ஆங்கில மூலம் : பேராசிரியர் ஜயதேவ உயன்கொட | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

    ‘அரசறிவியல் கலைக்களஞ்சியம்’ (Encyclopedia Of Political Science) என்னும் தலைப்பில் அமையும் இத் தொடரில் அரசியல் கோட்பாடுகள் (Political Theories), அரசியல் விஞ்ஞான எண்ணக்கருக்கள் (Concepts) சமகால அரசியல் விவாதங்கள் என்பன குறித்த கட்டுரைகள் வெளியிடப்படவுள்ளன. பொதுவெளியில் (Public Sphere) நடைபெறும் அரசியல் விவாதங்களை ஆரோக்கியமுடையனவாக ஆக்குவதற்கு, அரசியல் கருத்தாக்கங்கள் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்துவதும், சமூகத்தின் பல மட்டங்களிற்கும் அரசியல் அறிவை எடுத்துச் செல்வதும் அவசியமான பணி என நாம் உணருகின்றோம். தமிழ் அரசியல் சூழலில் நிலவும் கோட்பாட்டு வறுமையை (Theoretical Poverty) நீக்குவதற்கு இக் கட்டுரைத் தொடர் உதவும் என்பது எமது நம்பிக்கை. தமிழ்ச் சமூகத்தில் அறிவியல் மூலதனம் (Intellectual Capital) ஒரு சிறு மேட்டிமைக் குழுவிடம் (Elite Group) குவிந்திருப்பதை நீக்கி, அறிவுச் செல்வத்தின் மறுபங்கீட்டின் மூலம் சமூக விடுதலை, ஜனநாயக மயப்படுத்தல், அடிமட்டத்தினர் அதிகாரத்தில் பங்கேற்றல் ஆகிய இலக்குகளை அடைதல் இத் தொடரின் நோக்கமாகும்.

    13 min
  • கடலின் அக்கரை போனோரே: கேளாத குரல்களின் வலி | சமகாலத்தைப் பொருள்கொள்ளல் : கவனம்பெறா அசைவியக்கங்கள் | மீநிலங்கோ தெய்வேந்திரன்

    இலங்கையின் சமகாலச் சூழலில் மூன்று விடயங்கள் தவிர்க்கவியலாமல் செல்வாக்குச் செலுத்துகின்றன. முதலாவது மூன்று தசாப்தகால யுத்தம்; இரண்டாவது போரின் முடிவின் பின்னரான இயங்கியல்; மூன்றாவது பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும். இவை மூன்றும் தன்னளவிலும், இலங்கைச் சமூகத்திலும் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் அனைத்தும் கவனிக்கப்படவுமில்லை, கருத்தில் கொள்ளப்படவுமில்லை. சமகாலத்தைப் பொருள்கொள்ளல் என்பது வெறுமனே அன்றாடக் கதையாடல்களுக்குரியவற்றுடனோ அல்லது பொதுப்புத்தியில் எப்போதும் நிலைத்திருக்கும் விடயப்பரப்புகளுடனோ மட்டும் நின்றுவிடுவதல்ல. இலங்கைச் சமூகப் படிநிலையில் நலிந்தோரின் கதைகள் சொல்லப்பட வேண்டும்; அதுசார் வினாக்கள் எழுப்பப்பட வேண்டும். இலங்கையின் சமகாலம் குறித்த பெரும்பான்மையான எமது உரையாடல்கள் கவனம் குவிக்கத் தவறும் விடயங்களையும் அமைதியாகக் கடந்து செல்லும் களங்களையும் ‘சமகாலத்தைப் பொருள்கொள்ளல்: கவனம்பெறா அசைவியக்கங்கள்’ எனும் இத்தொடர் பேசமுனைகிறது.

    22 min
  • கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண நடைமுறைகள் - பகுதி 3 | கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள் | எம். ஐ. எம். சாக்கீர்

    கிழக்கிலங்கை இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசமாகும். இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் பண்பாட்டுக்கூறுகள் மட்டக்களப்புத் தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளோடு பல விடயங்களில் ஒத்ததாகவும் வேறுப்பட்டும் காணப்படுவதோடு பிற முஸ்லிம் பிராந்திய கலாசாரகூறுகளிலிருந்தும் தனித்துவமாகக் காணப்படுகின்றன. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் கிழக்கின் பூர்வ பண்பாட்டுக்கூறுகளினை தமது மத நம்பிக்கைக்கு ஏற்ப மதத்தின் அடிப்படைக்கூறுகளில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பண்பாட்டுக்கட்டமைப்பை தகவமைத்துக் கொண்டனர். இப்பண்பாட்டுப் மறுமலர்ச்சியின் கூறுகளினை கலந்துரையாடுவதாக ‘கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள்’ என்ற இக்கட்டுரைத்தொடர் அமையும். இதன்படி, கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தாய்வழி குடிமரபு முறை, முஸ்லிம் குடிவழிமரபில் உள்ள மாற்றங்கள், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் அவற்றில் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பாரம்பரிய பரிகார முறைகள், உறவுமுறைகள் மற்றும் குடும்ப அமைப்புகள், உணவுமுறைகள், ஆடை அணிகலன்களும் மரபுகள், வீடுகள் மற்றும் கட்டடக்கலை மரபுகள், பாரம்பரிய அனுஷ்டானங்கள், கலைகள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்தத் தொடர் பேசவுள்ளது.

    12 min
  • வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வலுச்சக்தி மூலங்களுக்கான வாய்ப்புகளும் வளங்களும் | வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும் | அமரசிங்கம் கேதீஸ்வரன்

    ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் நிலைபேறுகைக்கு ஸ்திரத்தினை வழங்குகின்றது. இலங்கையில் உள்ள வளச் செழிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றக்கூடியது. இலங்கையின் கால்பங்குக்கும் அதிகமான நிலப்பரப்பை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளன. இந்தவகையில் இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு, அதில் அடையாளப்படுத்தக்கூடிய வளங்கள் அல்லது இதுவரை கண்டறியப்பட்ட வளங்கள் தொடர்பாக தெளிவுடுத்துவதாகவும், அந்த வளங்களின் இப்போதைய பயன்பாடற்ற முறைமையை மாற்றியமைத்து உச்சப்பயனைப் பெறுதல், அதனூடே வடக்கு – கிழக்கின் விவசாயத்துறை, உட்கட்டமைப்பு, கடல்சார் பொருளாதாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்வது பற்றியும் ‘வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் விளக்குகின்றது.

    13 min
  • சங்கரி சந்திரனின் 'சூரியக்கடவுளின் பாடல்' (Song of the Sun God) | இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள் |  இளங்கோ

    ஈழத்தில் போர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உக்கிரமாக நடந்திருக்கின்றது. அது அங்கிருந்த அனைத்து மக்களையும் ஏதோ ஒருவகையில் பாதித்திருக்கின்றது. இப்போது யுத்தம் முடிந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. போர் ஒரு கொடுங்கனவாய் மக்களின் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டிருந்தாலும், அதன் நிமித்தம் ஏற்பட்ட உடல்/உள வடுக்கள் இன்னும் இல்லாமல் போகவில்லை. இனங்களிடையே நல்லிணக்கம் மட்டுமில்லை, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆற்றுப்படுத்தல்கள், உதவிகள் கூட போரால் வெற்றி கொள்ளப்பட்ட அதிகாரத் தரப்பால் நிகழ்த்தப்படவில்லை. இன்னுமின்னும் இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு இனங்களும் துவிதங்களாகப் பிரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஈழத்துப் போர்ச்சூழலின் பின்னணியில் எழுதப்பட்ட பனுவல்களை முன்வைத்து வாசிப்புச் செய்யப்படுகின்ற ஒரு தொடராக ‘இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள்’ அமைகின்றது.

    11 min
  • இலங்கையில் 1970களுக்குப் பின்பாகத் தோற்றம்பெற்ற புதிய வர்க்கம் – பகுதி 2 | இலங்கையின் அரசியல் 1981 - 1900: பன்முகநோக்கு | ஆங்கில மூலம்: நவரட்ண பண்டார | தழுவலாக்கம்: கந்தையா சண்முகலிங்கம்

    இலங்கையின் அரசியல் 1981 – 1900: பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1981 முதல் 1900 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

    8 min
  • வணிக வாழ்க்கையின் வெற்றியில் பெண்களின் பங்களிப்பு | ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை | கணபதிப்பிள்ளை ரூபன்

    திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது எதிர் கொண்ட சில முக்கியமான நுணுக்கங்களை (Nuances)  அடிப்படையாகக் கொண்டும், கட்டுரையாளரின் வணிகரீதியான சாதிப்பு அனுபவங்களைப் பகிர்வதாக அமைகிறது.

    7 min

About எழுநா

From the publisher's feed

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது.