#The_mountain_and the_squirrel* by Ralph Waldo Emerson
எளிய_தமிழில் _எமர்சன்….
#மலையும் அணிலும்...
கலையாத மோனத்தில்
நிலையாக நின்ற
மலையின் மடியில்
துள்ளித் திரிந்த
கள்ளமில்லா குட்டி அணிலிடம்
ஏனடா சிறுபதரே
வீணடா உன் பிழைப்பென
செருமியது செருக்காய்…
உருவில் உயர்ந்த மலை ..
துணிவாய் பேசியது
அணிலும் அறிவின் துணையோடு
நீரே நெடிதாய் உயர்ந்தவர் .
யாரே மறுப்பார் இதனை …
பாரே அறியுமே அதனை
அணு முதல் அனைத்தும்
நுணுகிய மண்ணும்
விரிந்த விண்ணும்
பிரியாது இயைந்தால்
சரியாய் இயங்கும்
உருளும் உலகும்
பருவம் பலவும்..
பெருத்த மலையே உன்னால்
சிறுக்கவும் கூடுமோ?
சிறுத்த நானென்றும் உன் போல்
பெருக்கவும் கூடுமோ?
சுறுசுறுப்பாய் சுற்றி வந்து
வெண்பனிக்காட்டில்
வண்ணமாய் தடம் பதித்து
சின்னச்சின்ன கோலமிடுவேனே
என்ன மாயம் செய்தும் நீ
எந்நாளும் ஓரடியும் நகரக் கூடுமோ?
எண்ணி நீ சொல்லி விடு
என்னருமை மலைத் தோழமையே!
வனத்தை தாங்கும்
தினவில்லை என் தோளில்
மனத்தில் என்றும்
மகிழ்வுண்டு எனக்கு
கொட்டைப்பழத்தை
மொட்டை மலையே
உடைக்கும் திறனை
உடையவனா நீ?
திசைக்கொரு திறனுண்டு
இசைந்து வாழ
இனிது இனிது
வாழ்தல் இனிது..
மொழிபெயர்ப்பு : #Raji_Vanchi