பெண் என்றால் அமைதியானவள், பொறுமையின் பிரதிபலிப்பு, எதையும் தாங்கும் இதயம் கொண்டவள், மென்மையானவள் போன்ற குணங்களுக்கு இலக்கணமாக திகழ்பவள்.நம் நாட்டை பொறுத்தவரை ஆண்களைவிட பெண்களுக்கே மனநல பாதிப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மிக மோசமான மனநோய்கள் ஆண்களை பாதிக்கக்கூடியதாகவும், மிதமான பாதிப்புகள் பெண்களை அதிகம் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளன. சிறுவயதில் ஆண்கள் அதிகமாகவும், வயதான பின் பெண்கள் அதிகளவிலும் மனநல பாதிப்பிற்கு ஆளாகின்றனர். மனபதட்டம், மனஅழுத்தம், மனச்சோர்வு, மனஎழுச்சி, மனச்சிதைவு போன்ற பொதுவான மனநல பிரச்னைகள் பெண்களையும் பாதிக்கலாம். ஆனால் மனநிலை மாறுபாடு கோளாறுகள் குறிப்பாக மனவருத்த நோய் மற்றும் மனப்பதட்ட நோய்கள் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் காணலாம். வேகமாக இயங்கும் வாழ்க்கை முறையில் மனஅழுத்தம் பலரிடம் காணப்படுகிறது. வேலைக்கு சென்று வந்து வீட்டையும் கவனித்துக்கொள்ள வேண்டிய பெண்களிடம் மனஅழுத்தம் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. 'ஹிஸ்டிரியா' எனும் மனநல பாதிப்பு பெரும்பாலும் இளம்பெண்களையே அதிகம் பாதிக்கும். உடல் அளவில் எப்படி பெண்ணுக்கும், ஆணுக்கும் சில வேறுபாடுகள் உண்டோ, அதுபோல் உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த வேறுபாடுகளும் உண்டு. இதன் முடிவு, பெண்களுக்கென்றே சில பிரத்யேகமான மனநலம் தொடர்பான பிரச்னைகள் உள்ளன.