“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னைப் போன்ற சாமானியர்களுக்கும் புரியும்படியாகச் சொல்லுங்கள். நீங்கள் எதையும் எளிதாகச் சொல்லி புரியவைப்பவர் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். அதனால்தான் உங்களிடம் கேட்டேன்!” “பெரிய ஆளப்பா நீ. சரி, சொல்கிறேன்... இதென்ன?” “வெண்ணெய்!” “சரி... இதோ இந்தப் பாலில் அது எங்கே இருக்கிறது?” “.......” “அதான்! இப்படித்தான் இறைவனும் பாலில் வெண்ணெயைப் போல நம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறார். சரி! இந்த வெண்ணெயைப் பாலிலிருந்து எப்படி எடுப்பார்கள்?” “மத்தால் கடைந்து எடுப்பார்கள்.” “அந்த மத்துதான் ஆன்மிகம்!” என்றார். ஆன்மிகத்தின் மிகச் சிக்கலான பல்வேறு விஷயங்களை எளிதாகச் சொல்வதென்பது சிலருக்குத்தான் வரும். அந்தக் கலையில் கை தேர்ந்தவர் இந்த நூலின் ஆசிரியர் தென்கச்சி கோ.சுவாமிநாதன்.