அவரது உடை கிழிந்த கஃப்னி, தலையணைக்கு பழைய செங்கல், படுக்கைக்கு நைந்துபோன சணல் கோணி, உணவோ பலர் வீட்டில் பிச்சையெடுத்த கலவையான உணவு. அவர் ஒருபோதும் தானாக உண்டதில்லை. காக்கை, பூனை, நாய்கள், பறவைகள் அந்த உணவிற்காக காத்துக்கிடக்கும். அவர் மயமந்திரம், தந்திரங்கள், எதுவும் செய்யவில்லை. ஆனால், அவர் கண்களில் கருணை ஒளி பொங்கி வழிந்தது. அவர் உதடுகள் உச்சரித்த வார்த்தைகளில் சக்தி பிறந்தது. ஏழை எளியமக்களின் நோய்களுக்கு, கொடுத்த பொருட்கள் எல்லாம் அருமருந்தாய் நோய் தீர்த்தது. ஷீர்டி மக்கள் மட்டுமே அவரை அப்போது 'பாபா.. பாபா..' என கொண்டாடினார்கள். பின்பு அவரின் அற்புதங்களால் உலகம் போற்றும் பெருங்கடவுளாக போற்றி வணங்கினார்கள்.