நீங்கள் ஒரு பண்டைய நகரிலுள்ள ஒரு கோவிலுக்குச் சென்று,அங்குள்ள அமைதியான தோட்டங்களைப் பார்க்கிறீர்கள். நீங்கள் வியர்க்க விறுவிறுக்க ஒரு மலையின்மீது ஏறி அதன் உச்சியை அடைந்து, நாற்புறமும் பரந்து விரிந்திருக்கும் காட்சிகளைக் கண்டு மெய்சிலிர்க்கிறீர்கள். நீங்கள் ஓர் அழகான நீலக்கடல் முன்னால் நின்று கொண்டு, தொலைதூரத்திலுள்ள தொடுவானத்தைக் கண்டு மெய்மறந்து போகிறீர்கள். அன்றாட வாழ்வின் அவசரங்களிலிருந்து சற்று விலகி, இத்தகைய அசாதாரணமான கணங்களில் கிடைக்கின்ற புத்துணர்ச்சியை நீங்கள் அனுபவித்ததுண்டா?
அப்போது உங்களுடைய இதயம் லேசாகியிருப்பதுபோல நீங்கள் உணர்வீர்கள்; இனம் புரியாத, இதமான ஓர் ஆற்றல் உங்கள் உடல் நெடுகிலும் ஊடுருவிப் பாய்ந்து கொண்டிருக்கும்; அக்கணத்தில் அன்றாட வாழ்வின் கவலைகளும் மனக்கலக்கங்களும் மாயமாய் மறைந்துவிடும்; அக்கணத்தில் நீங்கள் உயிர்த்துடிப்புடன் இருப்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.