உலப்பில் இன்பம்:
நீலப்பெருங்கடலின்
நீலத்தைப் பூச்சாக்கி
உன்
கண்களில்
மய்யோடு என்னையும்
பூசிக்கொண்டாய்......
எனதன்பை
உனது
முதுகுத்தண்டிலேற்றிய
அம்பறாத்தூணியில்
சேமித்து வைத்து,
உன்
மோகமுள்ளேற்றுகிறாய்!!
நிலவின்
தழல் எறிசுடராய்
ஏறி, இறங்கி, ஓடித்திமிறி
என்
ரத்த நாளம்
ஒவ்வொன்றிலும்
தாவிக்குதித்துக் குலவியிடுகிறாய்....
துடிக்கும் எனது ஸ்வாசமாய்
வெடிக்கும் என் இதயமாய்
இடம் மாறிய
உனதன்பு,
என்
நரம்பில்
தீயாய்ப் பரவித்தகிக்கும் வேளையிலும்,
உருகும் பனியாய்
என்
இதயம்
உருகித்திளைக்கும்
உன்
உயிரினுள்!
உன்
கண்தாமரை
பொய்கையில்
தடந்தெரியாமல்
ஆழமுந்தெரியாமல்
வழி தவறிய மீனாய்
விழுந்து துடிக்கின்றேன்.
கனவுகளின் இறகுகளை
அன்பின் அலைகளோடு கோர்த்து
காதலைப் பூவாய்த் தொடுத்து,
காமத்தை
உன்
காதுவளையத்திலும்
கழுத்து மேட்டிலும்
உதட்டுப் பிரிவிலும்
நாபிக்கமலத்திலும்
நட்டு வைத்து
பூக்கின்றேன்.
காதல் வந்தால் கண் சிமிட்டு!
கலவி கொள்ளலாமெனில் பொறு!
ஒரு மிடறு
உன்னைக் குடித்துவிட்டு வருகிறேன்.
picture courtesy : @katha_nandi