குடிசைதான்! ஒரு புறத்தில்
கூரிய வேல்வாள்
வரிசையாய் அமைத்திருக்கும் - வையத்தைப்
பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும்
வடித்துவைத்த படைக்கலம்போல் மின்னும்;
மிளிரும்
புலியின் குகையினிலே அழகில்லை -
புதுமையல்லன்று!
கிலியும் மெய் சிலிர்ப்பும்
கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டா
மானத்தின் உறைவிடம் -
மறவன் மாளிகை!
இல்லத்து வாயிலிலே
கிண்ணத்துச் சோற்றோடு
வெல்லத்தைச் சிறிது கலந்து
வயிற்றுக்குள் வழியனுப்பப்
பொக்கை வாய்தனைத் திறந்து
பிடியன்னம் எடுத்துப் போட்டாள்
பெருநரைக் கிழவி யொருத்தி.
ஓடி வந்தான் ஒரு வீரன்
"ஒரு சேதி பாட்டி!" என்றான்.
ஆடிவந்த சிறுமிபோல்
பெருமூச்சு வாங்குகின்றாய்
ஆண் மகனா நீ தம்பி!
மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும். பின்,
பேச்சுக்குத் தொடக்கம் செய் என்றாள் அந்தக்
கிண்டலுக்குப் பேர்போன
கிழட்டு தமிழச்சி!
வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி - உன்
வாடிக்கைக் கேலியை விட்டுவிடு.
'மடிந்தான் உன் மகன் களத்தில்'
என்றான் - மனம்
ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை!
"தாயம் ஆடுகையில் காய்களை
வெட்டுவதுண்டு-களமும் அதுதான்.
காயம் மார்பிலா? முதுகிலா?
கழறுவாய்" என்றாள் - முதுகிலென்றான்.
கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள்;
வாளை எடுத்தனள்.
முழவு ஒலித்த திக்கை நோக்கி
முடுக்கினாள் வேகம்!
"கோழைக்குப் பால் கொடுத்தேன்
குப்புற வீழ்ந்து கிடக்கும்
மோழைக்குப் பெயர்
போர் வீரனாம்! முன்பொருநாள்
பாய்ந்துவந்த ஈட்டிக்குப்
பதில் சொல்ல மார்பைக் காட்டிச்
சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர்.
அவருக்குப் பிறந்தானா?
அடடா மானமெங்கே - குட்டிச்
சுவருக்கும் கீழாக வீழ்ந்து பட்டான்.
இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும் - இங்கு
வீணை நரம்பினிலே இசை துடிக்கும்.
அதுவும் மானம் மானமென்றே ஒலிக்கும்!
மதுவும் சுறாவும் உண்டு வாழும் மானமற்ற வம்சமா நீ - ஏடா
மறத் தமிழ்க் குடியிலே மாசு தூவி விட்டாய்
மார்பு கொடுத்தேன்
மகனாய் வளர்த்தேன் - தின்று
கொழுத்துத் திமிர் பாய்ந்த தோள்களெங்கே?
தினவெடுக்கவில்லையா? அந்தோ!
வேலுக்கு வழி சொல்ல வகையற்ற
கோழையே - என் வீரப்
பாலுக்கு வழி சொல்வாய்!! என்று கதறினாள்
எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி.
சென்றங்குச் செரு முனையில்
சிதறிக் கிடந்த
செந்தமிழ்க் காளைகளைப்
புரட்டிப் பார்த்தாள் - அங்கு
நந்தமிழ் நாட்டை காக்க
ஓடிற்று ரத்த வெள்ளம்!
பிணக்குவியலிலே பெருமூச்சு
வாங்க நடந்தாள்!
மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை - மகன்
பிறந்த போதும் மகிழ்ச்சிக்கு
எல்லையுண்டு - அவன்
இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி!
இதைக் கண்டாள் - இதயங் குளிர்ந்தாள்!
"எதைக் கண்டாலும் இனிக் கவலை இல்லை
என் மகன் வீரனாய் இறந்தான்" என்றாள்.
அறுத்தெறிய இருந்தேன்
அவன் குடித்த மார்பை - அடடா!
கருத்தெரியப் பொய் சொன்ன கயவனெங்கே?
வாளிங்கே! அவன் நாக்கெங்கே?"
என்று நாக்கை அறுப்பதற்குக் கேட்டாள் தமிழ்த் தாய். புறநானாற்றுத் தாய்!