பாவேந்தரும் பெரியாரும் முரண்பட்டனரா?
1928ஆம் ஆண்டுதான் அவருக்கும் பெரியாருக்குமான தொடர்பு அரும்புகிறது. அன்று தொட்டு 1964 வரை, அதாவது 36 ஆண்டுக்காலம் பகுத்தறிவியக்கச் சிம்புட் பறவையாய்ப் பாவேந்தர் சிறகடித்துப் பறந்தார். அவருக் கும் பெரியாருக்கும், அவருக்கும் தன்மான இயக்கத் திற்கும் அறுபட முடியாத ஓர் உறவுப் பாலத்தைக் காலம் தன்போக்கில் கட்டி அமைத்தது. அஃது வரலாற்றில் ஓர் இன்றியமையாத் தேவையாகவும் அமைந்து போயிற்று.
இன்று தமிழ்த்தேசியம் பேசும் சில பேர் ‘திராவிடம்’ என்ற சொல்லைக் கேட்டாலே தீராத பகை கொண்டு நஞ்சு கக்குகின்றனர். அவர்களுக்கு அந்தச் சொல்லின் மேல் அவ்வளவு வெறுப்பு; சினம். 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பெரியார் ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்ற முழக்கத்தைத்தான் முன்வைத் தார். பின்னர் அவரின் அரசியல் முழக்கம் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்பதாக மாற்றம் பெற்றது. அதற்கான அரசியற் பின்புலத்தை ஆய்வு செய்தல் இக்கட்டுரையின் நோக்கமன்று.
1956 ஆண்டுக்குப்பின் இங்கே மொழிவழி மாநிலங்கள் அமையலாயின. பெரியாரும் தம் அரசியல் முழக்கத்தைத் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என மாற்றிக் கொண்டார். தம் வாழ்வின் இறுதிக்காலமான 1973 வரை, இக்கொள்கையிலிருந்து அவர் பின்வாங்கவில்லை.
பெரியாரின் தொடர்பு ஏற்பட்ட காலம் முதல் பாவேந்தர் ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’ போன்ற ஏடுகளில் இடைவிடாமல் எழுதிவந்தார். 1938இல் குத்தூசி குருசாமி - குஞ்சிதம் குருசாமி இணையரின் முயற்சி யால் ‘பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி’ வெளி வருகிறது. முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ள பெரும் பாலான படைப்புகள் தமிழின் இனிமை, தமிழ்மொழி யின் மேன்மை, தமிழ் வளர்ச்சி, தமிழர் முன்னேற் றம், மூடத்திருமணம், கைம்மைக் கொடுமை, பெண்ணுக்கு நீதி, தொழிலாளர் விண்ணப்பம், புதிய உலகு செய்வோம் போன்ற பல்வேறு பாடுபொருள்களைக் கொண்டவை.
1949ஆம் ஆண்டு பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி வெளிவந்தது. இந்நூலின் முதல் பாடலே, ‘வாழ்க வாழ்கவே - வளமார் எமது திராவிட நாடு வாழ்க வாழ்கவே’ என்னும் ‘திராவிட நாட்டுப் பண்ணோடு’ தான் தொடங்குகிறது.
“செந்தமிழர் உன்நாட்டின் பேரென்ன செப்பென்றேன்
இந்தியா என்றே இளிக்கின்றான் என்தாயே
பைந்தமிழ் நாட்டினையும் பாரதம் என்று சொல்வான்
எந்தவகையில் இச்சேய் உருப்படுவான் என்தாயே!”
என்று எழுதிய பாரதிதாசன்தான்,
“‘இனப்பேர் ஏன்’என்று பிறன்எனைக் கேட்டால்
மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்
‘நான்தான் திராவிடன்’ என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்”
என்று மகிழ்ச்சி மீதூரக் கூவுவார்.
“சீர்த்தியால், அறத்தால், செழுமையால், வையப்
போர்த்தி றத்தால் இயற்கை புனைந்த
ஓருயிர் நான், என் உயிர்இனம் திராவிடம்
ஆரியன் அல்லேன் என்னும் போதில்
எத்தனை மகிழ்ச்சி எத்தனை மகிழ்ச்சி
விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட
‘திராவிடன்’ ஆலின் சிறிய வித்தே”
- பாரதிதாசன் கவிதைகள், தொகுதி-2
‘திராவிடம்’ என்பதே ஒரு திருட்டுச் சொல், குழப்பச் சிந்தனை என்று குழப்புகிறார்கள் இன்றைய நவீனத் தமிழ்த்தேசியர்கள். இதில் எவ்வகைக் குழப்பமும் இல்லை. ‘ஆரியம்’ என்கிற நச்சுப் பார்ப்பனியக் கருத்தியலுக்கு எதிராக முன்நிறுத்தப்பட்ட கலகச் சொல்தான் திராவிடம். ஆரிய எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, வருணாசிரம சாதி எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு போன்றவற்றின் குறியீட்டுச் சொல்தான் திராவிடம்.
மேலும் திராவிடம் தமிழியத்திற்கு எதிரானதும் அல்ல. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர் கள் தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந் தது என்றும், தமிழே பிற திரவிட மொழிகளாகத் திரிந் தது என்றும் சுட்டுவார்.
“தமிழுக்குத் திரவிடம் என்னும் பெயர் தமிழ்நாட் டில் வழங்காமையானும், தமிழ் என்னும் வடிவத்தை யொட்டிய பெயர்களே மேனாட்டிலும் வடநாட்டிலும் பழங்காலத்தில் வழங்கி வந்தமையாலும், திராவிட மொழிகளெல்லாம் ஒரு காலத்தில் தமிழாகவே இருந்த மையானும், தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தது என்று தெளியப்படும். தமிழ் என்னும் பெயர் எங்ஙனம் திரவிடம் எனத் திரிந்ததோ, அங்ங னமே தமிழாகிய மொழியும் திரவிட மொழிகளாய்த் திரிந்ததென்க.” - பாவாணர் : திரவிடத்தாய், பக்.8, தமிழ்மண் வெளியீடு.
எனவேதான், அரசியல் வழி திராவிட நாட்டுக் கொள்கையை முன்நிறுத்திய பெரியாரைப் பின்பற்றிப் பாவேந்தர், திராவிட நாட்டைப் பாடினார்; திராவிட நாட்டுக் கொடிக்கு வணக்கம் செய்தார்.
“வானில் உயர்ந்த திராவிட நாட்டு
மணிக்கொடி தன்னை வணங்குவோம்
ஊனுடைமை உயிர் யாவும் திராவிடர்
மானத்தைக் காப்பதற் கல்லவோ?
ஆனதைப் பார்க்கட்டும் ஆளவந்தார் - அவர்
ஆர்ப்பாட்டங்கள் நமை வெல்லுமோ?
திண்மையும் உண்மையும் வண்மையும் கொண்ட
திராவிடர் மாக்கொடி வாழ்கவே
ஒண்சுடர் வான்நிலை உள்ளளவும் புகழ்
ஓங்கித் திராவிடம் வாழ்கவே”