ச.தமிழ்ச்செல்வன் 1954ல் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் பிறந்து, விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்து, கோவில்பட்டியில் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் அஞ்சல் துறையிலும், இராணுவத்திலும், மீண்டும் அஞ்சல்துறையிலும்... என மாறி மாறி பணியாற்றியவர். படிப்பறிவை சமூகத்தில் பரவலாக்கும் நோக்கில் துவக்கப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்காக ஊதியமற்ற விடுமுறை எடுத்துக்கொண்டு முழுநேரமும் விழிப்பணர்வு சேவையாற்றினார். சேவைப் பணியிலும், இலக்கிய படைப்பிலும், தமுஎகச அமைப்பு பொறுப்புகளிலும் திறம்பட இயங்குவதறகாக அஞ்சலகபணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று முழு வீச்சில் இயக்கியவர். தற்போது தனது இணையர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இரா.வெள்ளதாய் அவர்களுடன் சிவகாசியில் வசித்து வருகிறார்.