இன்றைய கால வாழ்க்கையில் எம்மை மேலே உயர்த்தவும் நாட்டை அபிவிருத்தி செய்யவும், அத்தோடு உலகளாவிய வகையில் இணைந்து வாழ்வதற்கும் புதுத்தொழில் முறை (Startup companies) மிக்க உதவியாக இருக்கிறது. இந்த புதுத்தொழில் முறையை எல்லா விதமான வணிகத்துறையிலும் பிரயோகிக்கலாம். உதாரணமாக கடற்தொழில், விவசாயம், வர்த்தகம், மருத்துவம் என்று எந்த தொழில்களைப்பற்றி ஆராய்ந்தாலும் அவற்றை உருவாக்குவது தொடக்கம், பின்பு வளமாக்கி அவற்றை உலகளாவிய ரீதியில் வாடிக்கையாளர்களை கைப்பற்றி வெற்றி பெறலாம். எனது குடும்பத்தவரிடமும் என் மூதாதையரின் செயலிலும் கற்றுக்கொண்ட பன்முகத்தன்மை எனது தொழில் முயற்சிகளுக்கு எவ்வாறு கைகொடுத்தன என்பது பற்றி பகிர நினைக்கிறேன்.
நான் பிறந்து வளர்ந்த இடம் யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் புலவர்கள் ’ஒலி’ பாடிய கிராமமான புலோலி. அங்கு வாழ்ந்தவர்கள் மற்றைய தமிழ் மக்கள் போலவே சிறந்த வளம் கொண்ட மக்கள் ஆவர். இலங்கையின் வடக்கு பகுதியானது, வருடத்தின் சில நாட்களே மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறும் நிலமென்றாலும், மக்கள் அந்த நிலத்தை சாதூரியமாகப் பயன்படுத்தி பல தொழில்களைச் செய்து வந்தார்கள். அப்படியான ஒரு குடும்பத்தில் தான் நான் பிறந்தேன். எனது தாயின் தந்தையார் தென்னிலங்கைக்கு சென்று வியாபாரம் செய்து, தனது குடும்பத்தைப் பேணினார். என் அப்பாவின் தந்தையார், புலோலியில் ஒரு கடை வைத்து பிழைத்து வந்தார். பின்பு அந்தக் கடையை என் தகப்பனார் எடுத்து நடாத்தினார்.
என் முதலாவது தொழில் அனுபவம் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ரொக்வெல் (Rockwell) என்ற நிறுவனத்தில் தொடங்கியது.
எனது முதலாவது நிறுவனம் தொடங்கும்போது பல தொழிலாளர்களை பணிக்கு எடுக்க வேண்டியிருந்தது. மொத்தமாக சுமார் நூற்றைம்பதுக்கும் மேலான தொழிலாளர்களை நாங்கள் பணிக்கமர்த்தினோம். அதில் பிரதான குழுவாக (Core Team) சிலரை தேர்ந்தெடுக்கும் பணி என்தலையில் விழுந்தது. நான் ஈழத்தில் என் தந்தையிடம் கற்ற சில பாடங்களை வைத்து, அந்த குழுவைத் தேர்ந்தெடுத்தேன். அந்தக்குழு அங்கத்தவர்கள் ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, தாய்வான், சோமாலியா, சீனா, ஜேர்மனி, லெபனான், வியட்நாம், இஸ்ரேல் என்று பல நாட்டையும் சேர்ந்தர்கள். அவர்கள் நாட்டால் மட்டுமல்ல, மொழியாலும், கலாசாரத்தாலும், நடத்தையாலும் தமக்கிடையே பல வேறுபாடுகளைக் கொண்டிருந்தனர்.
நான் எனது வாழ்க்கைப் பயணத்தை எனது குடும்பத்தில் தொடங்கி பின் வாழ்வின் ஒவ்வொரு காலத்திலும் நான் சந்தித்த மக்களிடம் கற்றுக்கொண்ட பன்முகத்தன்மையை (Diversity) வைத்து உருவாக்கினேன்.