எழுநா

எழுநா

Download on the App Store

எழுநா episodes

  • கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : பாளி சிங்கள இலக்கியங்கள் | ஈழத்துக் கீழைக்கரை - ஒரு வரலாற்றுப் பார்வை | விவேகானந்தராஜா துலாஞ்சனன்

    கீழைக்கரை தொடர்பான எழுத்துச் சான்றுகளில் பௌத்த பாளி இலக்கியங்கள், சிங்கள இலக்கியங்கள், தமிழக இலக்கியங்கள், ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள், பிறநாட்டவரின் பயணக்குறிப்புகள், காலனித்துவ காலக் குறிப்புகள் என்பன அடங்கும்.

    புத்த சமயத்தின் பரவலோடு, பாளி மொழியில் பல இலக்கிய முயற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் “வம்சக்கதை” என்ற வகையறாவைச் சேர்ந்த நூல்கள் முக்கியமானவை ஆகும். குறிப்பிட்ட புத்த சமயப் பேசுபொருளொன்றை அல்லது பலவற்றை எடுத்துக்கொண்டு இந்நூல்கள், அரசியல் வரலாற்றுக் காலகட்டமொன்றை விவரிக்கின்றன. இவற்றில் மிகப்பழையது தீபவம்சமாகும். இதை அடுத்து எழுந்த மகாவம்சம், அதன் தொடர்ச்சியான சூளவம்சத்துடன் இணைத்து இலங்கையின் மிக முக்கியமான வரலாற்று ஆவணமாக முன்வைக்கப்படுகின்றது.

    13 min
  • யாழ்ப்பாணக் குயர் விழா: சூழலியலும் குயர் மக்களும் | வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல் | அனுதர்சி கபிலன்

    குயர் சமூகத்தின் பன்மைத்துவத்தையும் சமூக ஏற்பையும் நோக்கிய ஏராளமான செயற்பாடுகள் மற்றும் குயர் நிகழ்வுகள் உலகளாவிய ரீதியில் நீண்டகாலமாக இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் சமூக, பொருளாதார, அரசியல் போன்ற பல்வேறு தளங்களிலும் குயர் மக்கள் தமக்கான வெளிகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதை நோக்கியே நகரசெய்கின்றன.

    இலங்கையின் முதலாவது சுயமரியாதை நிகழ்வு (Pride Event) 2005 ஆம் ஆண்டு இடம்பெற்றது. தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஈகுவல் கிரவுண்ட்(Equal Ground) நிறுவனம் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த நிகழ்வை முன்னெடுத்தது. அந்தக் காலப்பகுதியில் ஈகுவல் கிரவுண்ட்(Equal Ground) நிறுவனத்தின் இயக்குநரான றோசன்னாவின் (Rosanna Flamer Caldera) செயற்பாடுகள் சவால் நிறைந்ததாக இருந்தது.

    கடந்த வருடம் (2021) நவம்பர் மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் முதலாவது குயர் விழாவானது நேரடியாகவும் இணையவழியிலும் இடம்பெற்றது.

    அதன் தொடர்ச்சியாக 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த குயர் விழாவானது ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை நடந்து முடிந்திருக்கிறது. இந்த குயர் விழாவானது பல்வேறுபட்ட முக்கிய அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. வழமையான நிகழ்வுகள் குயர் சூழலியல் என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டிருந்தன. சூழலியல் சார்ந்து செயற்படும் நிறுவனங்களும் செயற்பாட்டாளர்களும் இணைந்து விதைப்பந்து சிற்பங்களை உருவாக்கல், கவிதையின் சூழலியல்கள், களப்பயணங்கள் மற்றும் கட்டுருவாக்க முயற்சிகள் போன்ற பல நிகழ்வுகளின் மூலம் இயற்கை நேயச் செயற்பாடுகளை ஊக்குவித்திருந்தார்கள்.

    யாழ்ப்பாணம் போன்ற பண்பாட்டுக் கட்டுப்பாடுகளும் தந்தையாதிக்கக் கருத்தியல்களும் ஆழமாக வேரூன்றிய ஒரு சமூகத்தில் குயர் விழாவை முன்னெடுக்கின்றமையானது, பால்நிலை சார்ந்த மாற்றுக் கருத்துக்களுக்கான வெளி ஒன்றிருப்பதை புலப்படுத்துகின்றது.

    12 min
  • தமிழ் குடும்பத் தலைவன் குட்டன் பற்றிய சேருவில கல்வெட்டு | இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் | என்.கே.எஸ்.திருச்செல்வம்

    திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் நகரின் தெற்கில் 16 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள சேருவில என்னுமிடத்தில் இக் கல்வெட்டு காணப்படுகிறது. சேறுவில்லு எனும் பெயரே செருவில என திரிபடைந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்விடத்தைச் சுற்றி சேறு நிறைந்த பல வில்லுக் குளங்கள் இருந்ததாகவும், இதன் காரணமாக இப்பெயர் உருவானதாகவும் தெரிகிறது.

    பண்டைய காலத்தில் இது “சேறுநகரம்” எனப் பெயர் பெற்று விளங்கியது. சிங்கள மொழியில் இது “சேருநுவர ராஜதானிய” என அழைக்கப்பட்டது. இது ஒரு நாக இராச்சியமாகும். தேவநம்பியதீசன் இலங்கையை ஆட்சி செய்த பொது ஆண்டுக்கு முன்(பொ. ஆ. மு) 307 - 267 வரையான காலப்பகுதியில் அவனது தம்பியான மகாநாகன் தெற்கில் இருந்த மாகமை இராச்சியத்தை ஆட்சி செய்து வந்தான். நாகவழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவன் சேருநகர இராச்சியத்திலும் நாகவழிபாட்டை நிலை நாட்டினான்.  

    6 min
  • யாழ். போதனா மருத்துவமனையின் தோற்றமும் மருத்துவர் கிறீனும் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன்

    சேர் பேர்சிவல் ஒக்லண்ட் டைக் யாழ்ப்பாணத்தின் முதலாவது அரசாங்க அதிபராகக் கடமையாற்றியவர். டைக் 01.10.1829 அன்று யாழ்ப்பாணத்தின் கலெக்டராகப் பதவியேற்றார். கோல்புறூக் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய கலெக்டர் பதவி அரசாங்க அதிபர் பதவி எனப் பெயர் மாற்றப்பட்டது. கலெக்டராகப் பதவி வகித்த டைக் 01.10.1833 அன்று யாழ்ப்பாணத்தின் முதலாவது அரசாங்க அதிபராகப் பதவியேற்றார்

    டைக் அவர்களது மனதில் யாழ்ப்பாணத்திலே ஒரு பொது மருத்துவமனையை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக இருந்ததாக சேர் வில்லியம் துவைனம் குறிப்பிடுகிறார்

    அமெரிக்க மிஷனரி மருத்துவர் கிறீன் மானிப்பாயில் ஆற்றிவரும் மருத்துவப் பணியை நன்கு அறிந்து கொண்ட பேர்சிவல் ஒக்லண்ட் டைக் யாழ். நகரிலே மருத்துவமனையை ஆரம்பிக்க விரும்பி கிறீனது உதவியை நாடினார்.

    யாழ்ப்பாண ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகம் (Jaffna Friend-In-Need-Society) 1841 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மக்களுக்கு உதவும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.

    பேர்சிவல் ஒக்லண்ட் டைக் , உவெஸ்லியன் மிஷனரியைச் சேர்ந்த வண. பீற்றர் பேர்சிவல் பாதிரியார், மருத்துவர் கோல்டன் மற்றும் அமெரிக்க மிசனரி மருத்துவர் கிறீன் ஆகியோரது உதவியுடன் 1850 ஆம் ஆண்டு யாழ். நகரத்தில் மருத்துவமனையை நிறுவினார்.

    யாழ். போதனா மருத்துவமனையானது 1850 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 2ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தின் ஆதரவில் இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டதாலும் இந்தக்கழகமே ஆரம்பத்தில் மருத்துவமனையை நிர்வகித்து வந்ததாலும் இந்த மருத்துவமனையானது ’ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தினது மருத்துவமனை ’ என்று அழைக்கப்பட்டது.

    9 min
  • பக்கவாட்டுச் சிந்தனைகள் மூலம் முக்கிய சிக்கல்களை தீர்ப்பது (Using Lateral Thinking to Solve Important Problems) | ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை | ரூபன் கணபதிபிள்ளை

    என்பதாக அர்த்தப்படாது. அது அறிவியல் பாதி, செய்கலை பாதி கலந்து செய்த நுட்பத்தினூடாகவே புதிய சிந்தனைகளும், அதன் வழியே புதிய தொழில்களும் பிறப்பெடுக்கின்றன. அப்படியான புதுமைகளுக்கு அடிநாதமாக இருப்பதுதான் பக்கவாட்டுச் சிந்தனை(Lateral Thinking).

    இந்தப் பக்கவாட்டுச் சிந்தனையால் வென்றவர்கள் வரிசையில் வாழும் உதாரணமாக இருப்பவர்,  உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அமேசான் (Amazon.com) நிறுவனத்தின் நிறுவுநர்  ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) தான். அவர் தன் தொழில் முயற்சியை வித்தியாசமாகவும், தனித்துவமாகவும், பட்டறிவையும் கற்பனையையும் கலந்து யோசித்ததால் தான் இன்றைக்கு இந்தளவுக்கு அவரால் உயரமுடிந்தது. இப்படி ஜெஃப் பெசோஸின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் பக்கவாட்டுச் சிந்தனையை அவருக்கு அறிமுகப்படுத்தியது ஒரு இலங்கையர் என்பது பலருக்கும் தெரியாத இரு விடயம்.

    ஜெஃப்  பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில்  (Princeton University) பயின்றபோது, அவரது அறைத்தோழனாக இருந்தவர் ஒரு இலங்கையர். அவர்தான் மிகச் சிக்கலான கணிதப் புதிர்களுக்கெல்லாம், மாற்றுவழிகளில் தனக்கேயுரித்தான புதுமையான பாணியில் விடைகளை விரைவாகவும் சரியாகவும் கண்டுபிடித்துக் காட்டினார். அதைப் பார்த்த ஜெஃப் பெசோஸ், அதேவழியைக் கையாண்டு தொழில் முயற்சி ஒன்றை ஆரம்பித்தால் என்ன என்று சிந்தித்ததன் விளைவே, இன்று உலகமெங்கும் ஆலமரம் போல இணைய வியாபாரத்தில் அசைக்கமுடியாத  சக்தியாக உருவெடுத்திருக்கும் ‘அமேசான்’நிறுவனம்.

    11 min
  • இலங்கையின் பாலுற்பத்தித் துறை சந்திக்கும் சவால்கள் | இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் | சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

      இலங்கையிலுள்ள பசு மாடுகளும் எருமை மாடுகளும் அதிகளவு உள்ளூர் வகையை சேர்ந்தவை. அவற்றின் சாராசரி உற்பத்தி ஒரு லீட்டருக்கும் குறைவாகும்.  இந்த மாடுகளைக்  கொண்டு எதிர்பார்த்த பாலுற்பத்தியை பெற்று தன்னிறைவு காண முடியாது.

    அதிக பாலுற்பத்தியைக் கொண்ட மாடுகளை பெற இரண்டு வழிமுறைகள்தான் உள்ளன. ஒன்று நல்லின மாடுகளை இறக்குமதி செய்ய வேண்டும். இந்த முறையில் பல தடவைகள் மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மற்றைய வழி இருக்கும் மாடுகளை தரமுயர்த்துவது[upgrading]. இந்த வழியில் இரண்டு முறைகளை கையாளலாம். ஒன்று நல்லின காளைகளை இறக்குமதி செய்து பண்ணையாளருக்கு வழங்கி அவற்றைக் கொண்டு  இனப்பெருக்கம் செய்து பண்ணைகளை  தரமுயர்த்துவது. மற்றையது தரமான காளைகளின் உறைவிந்தணுக்களை [frozen semen] இறக்குமதி செய்தோ அல்லது தரமான காளைகளை இறக்குமதி செய்து  அவற்றின் விந்துகளை உறையச் செய்து அவற்றைக் கொண்டு செயற்கை சினைப்படுதல் மூலம் மாடுகளை தரமுயர்த்துவது.

    வெளிநாட்டு  மாடுகளை இறக்குமதி செய்வதன் மூலம் சடுதியாக பாலுற்பத்தியை கூட்ட முடியும் என்ற போதும் அண்மைக் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மாடுகளில் இருந்து சாதகமான பயனை பெற முடியவில்லை. கொண்டு வரப்படும் மாடுகளின் இனம், காலநிலை, வளர்ப்பு முறை, உணவு முறை வேறுபாடு, நோய்கள் காரணமாக கடும் பாதிப்புகளை சந்தித்திருந்தன. இந்த மாடுகள் மீது முதலிட்டவர்கள் பாரிய நட்டத்தை சந்தித்திருந்தனர். இலங்கையின்  கால்நடை துறை அதிகாரிகளின் சரியான ஆலோசனைகள் இன்றியும்  இலங்கை கால்நடை இனப்பெருக்க கொள்கைக்கு முரணாகவும் [Breeding policy] மேற்படி மாடுகள் கொண்டு வரப்பட்டதும் இதற்குரிய முக்கிய காரணமாகும்.

    இலங்கையில் உள்ள மாடுகளில் கணிசமானவை பாலுற்பத்தி செய்யாதவை. அவற்றில் தற்போது பாலுற்பத்தியில் இருப்பவை [milch animals]  அண்ணளவாக  23% ஆகும். உற்பத்தியில் பங்களிக்காத பசு மாடுகளையும்  ஆண் மாடுகளையும் குறைக்கும் அல்லது கழிக்கும் முறையான முறை இலங்கையில் இல்லை. மாடுகளைக்  கொல்வது மதத்துடன் பிணைக்கப்பட்டு அரசியலாகப்பட்டுள்ளது. தரமான கொல் களங்களும் [slaughter houses]  கிடையாது. ஒரு வெற்றிகரமான பண்ணை இயங்க  தேவையற்ற மற்றும்  உற்பத்திக் குறைவான மாடுகள் கழிக்கப்பட வேண்டியது அவசியமானது.

    11 min
  • மக்களுக்காக குரல் கொடுத்த மணிலாலும், நாடு கடத்திய காலனித்துவ அரசும் | கண்டிசீமை | இரா.சடகோபன்

    இந்திய வம்சாவளி பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க ரீதியாகவும், வர்த்தகரீதியாகவும் ஸ்தாபனப்படுவதற்கு முன்னரே அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கொழும்பிலும், சர்வதேச ரீதியாகவும் பலமாக குரல் எழுப்பப்பட்டது என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. இலங்கையில் மாத்திரம் அன்றி பல்வேறு உலக நாடுகளிலும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து சென்று வாழ்ந்த இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் பற்றி பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்தன.

    இவ்வமைப்புகளில்  இலங்கையிலிருந்து குரல் கொடுத்த இந்தியரான டாக்டர். டி. எம். மணிலால் (1881-1956) மிக முக்கியமானவராவார். இந்தியாவில் பரோடா என்ற இடத்தில் பிறந்த இவர் பம்பாயில் (இப்போதைய மும்பை) சட்டக்கல்வி பயின்று சட்டத்தரணி ஆனார். லண்டனில் மிடில் டெம்பிள் என்ற நகரத்தில் சட்டத்தரணியாக கடமையாற்ற 1907ஆம் ஆண்டு அழைக்கப்பட்டார்.

    அவர் இக்காலத்தில் மகாத்மா காந்தியின் நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட்டார். இதன் காரணமாக இவர் மகாத்மா காந்தியால் மொரிசியஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்த இந்தியத் தொழிலாளர்களின் நீதிமன்ற வழக்குகளில் அவர்களுக்கு உதவ அந்நாட்டுக்கு அனுப்பப்பட்டார். 1907ஆம் ஆண்டு முதல் 1920ஆம் ஆண்டு வரை அவர் அங்கே இருந்து செயற்பட்டு, அந்த நாட்டு ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

    டாக்டர் மணிலால் தனது மனைவியுடன் ஒக்டோபர் 1921ஆம் ஆண்டு இலங்கை வந்தார். அப்போது இலங்கையில் தொழிற்சங்க மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடும்போக்காளர்களுடன் இணைந்து கொண்டார். அவர்களில் நடேசய்யர், லோரி முத்துக்கிருஷ்ணா, சி .எச். பெர்னாண்டோ ஆகியோர் முக்கியமானவர்கள். இக்காலத்தில் வேல்ஸ் இளவரசர் இலங்கைக்கு வருவதாக இருந்தது. வருடம் 1922, வேல்ஸ் இளவரசனின் வருகையில் மணிலால் தலையிடக்கூடும் என்று பொலிஸார் சந்தேகப்பட்டனர். இதனால் போர்க் கால கட்டளைச் சட்டத்தின்படி மணிலாலை நாடு கடத்த ஆளுநர் கட்டளை பிறப்பித்தார்.

    இதனைத் தொடர்ந்து இந்த ஆபத்தான கட்டளையை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கூறி கொழும்பு நகரசபை முன்றலில் மாபெரும் கூட்டம் ஒன்று 1922 ஜனவரியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    சிலோன் டெய்லி நியூஸ் பத்திரிக்கை இலங்கையில் இருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து டாக்டர் மணிலால் உலகத்துக்கு அம்பலப்படுத்திவிடுவார் என்ற அச்சத்தினாலேயே அவரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது என செய்தி வெளியிட்டிருந்தது. (சிலோன் டெய்லி நியூஸ் 9 ஜனவரி 1922)  எனினும் இந்த எதிர்ப்பை எல்லாம் பொருட்படுத்தாது டாக்டர் மணிலால் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். இருந்தாலும் இலங்கையில் அவருடன் சேர்ந்து பணியாற்றிய கோ. நடேசய்யர் தொடர்ந்தும் மணிலாலுடனான தனது உறவைப் பேணிவந்தார்.

    8 min
  • இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் : இன மரபும் பண்பாட்டுச் சமூகவியலும் | இலங்கை முஸ்லிம்கள் : இனத்துவ மரபும் சமூகவியலும் | ஜிஃப்ரி ஹாசன்

    இலங்கை முஸ்லிம்கள் என முன்பு அறியப்பட்டவர்கள் யார்? இந்த முஸ்லிம் என்கிற இன அடையாளத்துக்குள் பெரும்பான்மையாக இருக்கும் இனக்குழுமம் எது எனப் பார்த்தால் அது இலங்கைச் சோனகர்தான். இலங்கையில் முஸ்லிம் அடையாளத்துக்குள்ளிருக்கும் இனக்குழுமங்களில் இலங்கைத் தன்மையையும், பூர்வீகத்தையும் சோனகரிலேயே காண முடியும். 

    இந்த ‘சோனகர்’, ‘முஸ்லிம்’ போன்ற இனப்பெயரிடலே பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக பல மாறுதல்களுக்குட்பட்டு வந்திருப்பதை முஸ்லிம் அறிஞர்கள், வரலாற்றாய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

    இத்தகைய ஒரு கலவையான இனங்களை உள்ளடக்கிய ஓர் ஒற்றை அடையாளச் சமூகமாக இலங்கையில் முஸ்லிம்கள் மாத்திரம்தான் உருவானார்களா என்றால் அப்படி அல்ல. சிங்களவர்கள் கூட இத்தகைய ஒரு பல்லின மரபைக்கொண்ட இனமாகவே உள்ளனர். சிங்களவர் எனும் ஒற்றை இன அடையாளத்துக்குள் வரும் பல்வேறு இனக்குழுக்கள் பற்றி வரலாற்றாய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

    இலங்கையில் மரபினரீதியாக தமிழர்களுக்கு முதல் நெருக்கமாக முஸ்லிம்கள் இருப்பது தெளிவாகிறது. அதேநேரம் அரபு மூலத்தோடு தொடர்பில்லாமலும் இல்லை. மரபினரீதியான அரபுக் கலப்பும் சோனகர் மத்தியில் நிகழ்ந்துள்ளது. ஆனால் அதுவே அவர்களின் முதன்மையானதும் மையமானதுமான மரபினத் தொடர்ச்சி அல்ல. அவர்கள் இந்திய-இலங்கைத் தன்மையுள்ள தமிழர்-சிங்களவர் இனத்துவ மூலத்திலிருந்து வந்தவர்கள் என்பதே யதார்த்தம். இதனால்தான் அரபிகள் இலங்கை முஸ்லிம்களை தங்களின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதில்லை. அரபிகளைப் பொறுத்தவரை இலங்கை முஸ்லிம்கள் அஜமிகள்தான் (அரபி அல்லாத முஸ்லிம்). இதனால் அரபுத் தூய்மைவாதத்துக்குள் இலங்கை முஸ்லிம்கள் எந்தவிதத்திலும் நுழைய முடியாது

    13 min
  • எண்மிய மரபுரிமை : அவசியமும் அவசரமும் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்

    எண்மிய மரபுரிமை என்பது பண்பாட்டு மரபுரிமை மற்றும் இயற்கை மரபுரிமையை புரிந்துகொள்ளல், பாதுகாத்தலில் எண்மியத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் மூலமாக உருவாக்கப்படும் மரபுரிமையாகும். சிலபோதிலது எண்மிய பண்பாட்டு மரபுரிமை (digital cultural heritage), எண்மிய இயற்கை மரபுரிமை (digital natural heritage)  எனவும் இரண்டாகப் பிரித்து நோக்கப்படுவதுமுண்டு. “இது பண்பாடு, கல்வி, அறிவியல் மற்றும் நிர்வாக வளங்கள் மற்றும் தொழில்நுட்பம், சட்டம், மருத்துவம் மற்றும் பிற வகையான தகவல்களை எண்மிய முறையில் உருவாக்குகிறது அல்லது எண்மிய வடிவத்தில் இருக்கும் தொடர் மின்னணு (Analogy/ analog) ஆதாரங்களாக மாற்றுகிறது” என யுனெஸ்கோ எண்மியத் தொழில்நுட்பம் பற்றிப் பேசுகிறது.


    10 min
  • தேயிலைத் தோட்டங்களிலே பெண்களது பின்தங்கிய நிலை | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் எம். சின்னத்தம்பி

    பெண்களது கடந்தகால - நிகழ்கால சாதனைகளைக் கொண்டாடும் சர்வதேச மகளிர்தினம் (International Women’s Day) முதன்முதலாக 1911ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி கொண்டாடப்பட்டது. ஒரு நூற்றாண்டு காலமுடிவில் 2011ஆம் ஆண்டு அது நினைவுகூரப்பட்டதோடு, ஒவ்வொரு வருடமும் அதேதினத்தில் பூகோளரீதியாகத் தொடர்ந்து அது கொண்டாடப்பட்டும் வருகிறது. அவ்வாறு கொண்டாடப்படும்போது ஏதாவதொரு முக்கிய விடயத்தைக் கருப்பொருளாக வைத்தே அத்தினம் கொண்டாடப்படும்.

    அண்மைக்காலங்களில் பெண்களது சமூக – பொருளாதார - அரசியல் அந்தஸ்தில் நேர்மறையான வளர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளபோதும், பெண்களைப் பொறுத்தவரை, உலகம் இன்றும் சமமற்ற ஒன்றாகவே இருந்து வருகின்றது. எனவே, பெண்களின் கடந்த கால - நிகழ்கால சாதனைகளைக் கொண்டாடும் அதேவேளையில், இந்த சமமற்ற நிலையினைப் போக்குவதற்கு எதிர்காலத்தில் என்ன முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துவது இன்றியமையாததாகும். பூகோளமட்டத்தில் சர்வதேச மகளிர்தினம் கொண்டாடப்படும் இச்சந்தர்ப்பத்தில் சில பொருளாதாரத்துறைகளில் பெருந்தொகையான பெண்கள் பணிபுரியும் எமது நாட்டினது பெருந்தோட்டத்துறையில் பெண்தொழிலாளரது நிலை எவ்வாறு உள்ளது என்பதை இச்சிறு கட்டுரை ஆராய்கின்றது.

    11 min

About எழுநா

From the publisher's feed

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது.