எழுநா

எழுநா

Download on the App Store

எழுநா episodes

  • வடக்கு-கிழக்கு மாகாணங்களின் விவசாயத்துறையும் வாய்ப்புக்களும் | வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும் | அமரசிங்கம் கேதீஸ்வரன்

    வடக்கு - கிழக்கு மாகாணத்தின் தன்னாதிக்கமுள்ள உற்பத்தித் துறையாக  விவசாயத்துறை விளங்குகின்றது.  இவ்விரு மாகாணங்களினதும் பொருளாதாரத்தில் 15 சதவீதமான பங்களிப்பை விவசாயத்துறை வழங்கிவருவதுடன் 65 சதவீதமானோர் வாழ்வாதாரத்திற்கு தங்கியிருக்கும் துறையாகவும் இது செயற்பட்டு வருகின்றது.

    நிலப்பாவனை என்ற வகையில்  விவசாயச் செய்கைக்காக கிழக்கு மாகாணத்தின் 42 சதவீதமான நிலப்பரப்பும், வடமாகாணத்தின் 33 சதவீதமான நிலப்பரப்பும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்விரு மாகாணங்களின் பிரதான விவசாயப் பயிராக நெல்லே காணப்படுகின்றது. வடமாகாணத்தில் 115,049 ஹெக்டெயர் நிலப்பரப்பிலும், கிழக்கு மாகாணத்தில் 324,455 ஹெக்டெயர் நிலப்பரப்பிலும் மொத்தமாக காலபோகம், சிறுபோகம் ஆகிய இரு போகங்களிலும் பயிர்ச்செய்கை இடம்பெறுகிறது.

    நெல் விவசாயத்தின் முதன்மைத் தன்மை காரணமாக இவ்விரு மாகாணங்களின் பிரதான செயற்பாட்டு வளங்களான நன்கு பயன் தரும் நிலங்களும் இருபோக பயிர்ச் செய்கையில் ஈடுபடும் மனிதவளம், நீர் என்பனவும் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் ஏனைய துறை வளங்களான இயந்திரங்கள், நிதி ஆகிய வாழ்வாதார வளங்களும் பயன்படுத்தக் கூடியனவாக அமைகின்றன.

    10 min
  • வாழ்வியலைத் தகர்த்து உருவாகிய அரசு | தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும் | ந. இரவீந்திரன்

    மகத்தான ஒக்ரோபர் புரட்சி (1917) ருஷ்யாவை "சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்" என மாற்றிப் புனைந்து முழு உலக நாடுகளது மக்களுக்கும் நம்பிக்கை நட்சத்திமாசத் திகழ்ந்தது. 

    எழுபதாம் ஆண்டுகள் வரை விடுதலை நாடும் மக்களுக்குச் 'சோசலிசம்' என்ற கருத்தியல் உத்வேகமூட்டும் நிவாரணியாக இருந்தது. அநேகமான நாடுகள் 'ஜனநாய சோசலிச', 'சோசலிச ஜனநாயக' என்பதான அடைமொழிகளை ஒட்டி தம்மை அழகுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆட்பட்டிருத்தன.

    10 min
  • கோட்டைகளுக்குப் பதிலாக பாதைகள் | இலங்கையின் இனவாத அரசியல் | பி.ஏ. காதர்

    1818 இல் கிளர்ச்சி வெடிக்கும் வரை தமக்கு சரியான தகவல் கிடைக்காததற்கும், கிளர்ச்சி  வெடித்தபின்னர் அதனை நசுக்குவதற்கும்  தாம் மிகுந்த சிரமப்பட்டதற்கும் இரு காரணங்களை பிரித்தானியர் இனம்கண்டனர். ஒன்று கண்டியை சிறப்பாக கண்காணித்து நிர்வகிப்பதற்கு மலைப்பாங்கான கண்டி பிரதேசத்தினை பாதைகளால் இணைக்கவேண்டும் . மற்றையது தமக்கு விசுவாசமான உள்ளூர்த் தலைவர்களை உருவாக்கி தமது நிர்வாகத்தில் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பதாகும்

    1818 இல் கிளர்ச்சியை அடக்குவதற்கு தமது படைகளை அனுப்பியதன் மூலம் கண்டி இராச்சியத்தில் அதுவரை தொடர்பு இல்லாதிருந்த  பகுதிகள் பற்றிய  புவியியல் அறிவு அவர்களுக்கு ஓரளவு கிடைத்தது. உண்மையில் கண்டிய மன்னர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பெரும்பாலான மாட்டுவண்டி, குதிரை வண்டி பாதைகளை கைவிட்டிருந்தனர். வெல்லஸ்ஸ கிளர்ச்சி நசுக்கப்பட்ட பின்னர் உடனடியாக உள்ளூரில்  தகவல் வழங்குபவர்களையும் பிரிட்டிஷ் அளவையாளர்களையும் பயன்படுத்தி  தீவின் வரைபடத்தை முழுமைப்படுத்தி, பின்னர் மத்திய மலைநாட்டை இணைக்கும் சாலைகளின் வலையமைப்பை பிரித்தானியர் உருவாக்கினர். இது அவர்களது இராணுவக் கட்டுப்பாட்டை ஸ்தீரப்படுத்தியதுடன்,  பெருந்தோட்ட  உற்பத்தியை சாத்தியமாக்கியது.

     

    30 min
  • வேடரும் காலனியமும் | வேடர் மானிடவியல் | கமலநாதன் பத்திநாதன்

    இலங்கைத்தீவின் பூர்வீககுடிகளாக வேடர்கள் காணப்படுகின்றமை பலருக்கும் தெரிந்த விடயமாகும். அண்மைக்காலமாக வேடர் மானுடவியல் சார் பார்வைகள் பல ஆய்வாளர்களிடையே அகலித்துள்ளன. இது இலங்கையர்களான நமக்கும் மிகத் தேவையான விடயப்பொருள்தான். காரணம் இன்றைய  நவீன உலகானது  வரலாறு, பண்பாடு  மற்றும் மானிடவியல்  சார்ந்த ஆய்வாளர்களையே பெரிதும் வேண்டி நிற்கிறது. இலங்கையைப் பொறுத்தமட்டில் இவ்வகையான மானிடவியலாய்வை வேடர் சமூகத்தின்பால் தொடக்கி விட்ட பெருமை  “செலிக்மனையே” சாரும்.

    வரலாற்றுக் காலம் முதல் இன்றைய காலம் வரை இலங்கையின் வேடர் சமூகம் சார்ந்தும், அவர் தம் பண்பாடு, சடங்கார்ந்த விடயங்கள் மற்றும் மரபு சார்ந்து பல ஆதாரங்கள் தீவின் நெடுகிலும் கொட்டிக்கிடக்கின்றன. அவ்வாறு இருக்கையில் ஏன் இச்சமூகம் சார்ந்த பார்வைகளானது, இன்னமும் ஒரு பாவப்பட்ட உயிரிக்கு உதவுவதாகவும், நம்மால் தான் உதவ முடியும் என்றெண்ணிக் கொண்டு இச்சமூகத்தின்பால் பூர்வகுடியென்ற உருவைச் சிதைப்புச் செய்வதாகவும் காணப்படுகின்றன?காணப்பட்டு வருகின்றன? என்பதனை நுணுகி ஆராயும் போதுதான்  அதன் பின்னுள்ள காலனியச் சிந்தனையும், அதன் சிலந்திச் சிக்கலும் பற்றி அறியக்கிடைக்கின்றது.

    இன்றைய காலத்தில்  காலனியாதிக்கம்  பல பரிணாமங்களை மிகச்சாதுரியமாக வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதைப் போல் தனது வேலையைக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றது. அண்மைய கால இலங்கையைப் பொறுத்த மட்டில் தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலையை வைத்தல் பெரும்பான்மைச் சிந்தனை, ஆதிக்க மனோபாவம்  என்று சொல்லப்படுகின்றது. ஆனால் வேடர் சமூகங்கள் பரந்து வாழும் கிராமங்களில் தமிழ்த் தெய்வங்களான அம்மனுக்கு கோயில் கட்டுவதோ, அதை நாகரிகமாக நினைத்து வணங்கப்பண்ண வைப்பதோ, கோயிலின் பெயருடன் “ ஶ்ரீ”  என்ற எழுத்தைப் புகுத்துவதோ, இன்னும் சொல்லப் போனால் ஒரு இனத்தினை அதன் பெயரையே பொதுவில் சொல்லத் தயங்கவைப்பதும் கூட பெரும்பான்மைச் சிந்தனையும் அல்ல, ஆதிக்க மனோபாவமும் அல்ல என்ற நிலை வலிந்து உருவாக்கப்படுகின்றது.

    12 min
  • கீழைக்கரைக்கான வரலாற்றுச் சான்றுகள் : கல்வெட்டுக்களும் பொறிப்புகளும் | ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை | விவேகானந்தராஜா துலாஞ்சனன்

    கீழைக்கரை தொடர்பான வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்கு மூன்று வகையான ஆதாரங்களை நாம் பயன்படுத்தலாம். முதலாவது பொறிப்புச் சான்றுகள், இரண்டாவது எழுத்துச் சான்றுகள், மூன்றாவது வாய்மொழி மற்றும் தொன்ம மரபுரைகள்.

    பொறிப்புச் சான்றுகள் (Epigraphic Sources): - அண்ணளவாக பொ. மு 4ஆம் 3ஆம் நூற்றாண்டிலிருந்து கீழைக்கரையெங்கணும் தொடர்ச்சியாக கல்வெட்டுக்களும் உலோக மட்பாண்டப் பொறிப்புகளும் பரவலாகக் கிடைத்துள்ளன. இவற்றில் அவ்வவ் காலத்தில் வாழ்ந்த மக்கள், அவர்களின் மொழிகள், சமயம், வாழ்வியல் கோலங்கள், நம்பிக்கைகள், என்பன பற்றிய பல தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. இலங்கையில் ஈழப்பாகதம்[1], சிங்களம், தமிழ், சங்கதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட பொறிப்புச் சான்றுகள் கிடைத்துள்ளன.

    ஈழத்துக் கீழைக்கரையில் 175இற்குக் குறையாத பிராமிக்கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன[2]. இன்னும் வாசிக்கப்படாத ஏராளமான கல்வெட்டுக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. அவை பெரும்பாலும் பிராமி எழுத்துருவில் ஈழத்துப் பாகத மொழியில் எழுதப்பட்டவை.  ஆனால் கீழைக்கரையில் மாத்திரமன்றி, முழு இலங்கைத் தொல்லியலிலும் கடந்த 15 ஆண்டுகளில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டு வரும்  தமிழி அல்லது தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள்!

    23 min
  • இலங்கையின் பாலுற்பத்தித் துறை - ஒரு பார்வை | இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் | Dr. சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

    இலங்கையில் 1977 ஆண்டில் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட முன்னர் அன்றைய பால் தேவையின் 80 %  உள்ளூர் உற்பத்தியில் இருந்தே நிறைவு செய்யப்பட்டிருந்தது. பல்தேசிய பால் உற்பத்தி நிறுவனங்கள் இலங்கைச் சந்தையில் தமது பாலுற்பத்திகளை குறிப்பாக பால் பவுடரை அறிமுகப்படுத்திய  பின் படிப்படியாக இலங்கை மக்களின் பால் நுகர்வு கலாசாரம் மாற்றமடையத் தொடங்கியது.

    2020 வருட இலங்கை மத்திய வங்கி ஆண்டறிகையின் படி இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் [GDP]  விவசாயம் 7 % அளவிலும் விவசாயத்தின் ஒரு கூறாக அமையும் கால்நடை உற்பத்தித் துறை  0.6% ஐயும் கொண்டுள்ளது. இலங்கையில் 1.1 மில்லியன் பசு மாடுகளும், 0.3  மில்லியன் எருமை மாடுகளும் உள்ளன. வருடாந்தம் பசு மாடுகளில் இருந்து 413.6 மில்லியன் லீட்டர் பாலும் எருமை மாடுகளில் இருந்து 77.9 மில்லியன் லீட்டர் பாலும் பெறப்படுகிறது.

    இலங்கை 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததன் பின் பல வகையான வெளிநாட்டு கால்நடை வகைகள் மற்றும் அவற்றின் விந்தணுக்கள் கொண்டுவரப்பட்டு பல தூய, கலப்பு இனங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக இந்தியாவிலிருந்து சாஹிவால், சிகப்பு சிந்தி பசுக்களும் ஐரோப்பிய வகையான ஜெர்சி, பிரீசியன், அய்சியார் ,அவுஸ்றேலியன் பிரிசியன் சகிவால் [AFS] பசு இனங்களும் இந்திய மூரா மற்றும் இந்தோ - பாகிஸ்தானிய நிலி ரவி  எருமை வகைகளும் இவ்வாறு கொண்டுவரப்பட்டு இனக்கலப்பு செய்யப்பட்டன.

    இலங்கையில் வடக்கு, கிழக்கு  மற்றும் வட மத்திய மாகாணங்களில்தான் அதிக மாட்டுப் பண்ணைகளும் மாடுகளும் உள்ளன.

    18 min
  • வன்செயல் மரபுரிமையும் ஈழத்தமிழர்களும் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்

    அனைத்து வகைப்பட்ட போர்கள், இனவழிப்புக்கள், சர்வாதிகாரம், காலனியங்கள் முதலியவற்றைப் பிரதிபலிக்கும் வெளிப்பாடுகளை மரபுரிமையின் பகுதியாகக் கொள்ளும் போக்கு முக்கியமானதாகும். இவற்றை இன்று ‘வன்செயல் மரபுரிமை’ (violence heritage) என்ற பெயரால் இப்புதிய பார்வைகள் சுட்டுகின்றன. இவை இருண்ட, எதிர்மறையான, வலிமிகுந்த, அதிருப்தி நிறைந்த, கடினமான நிலைமைகளது வாழும் சாட்சியங்களாகப் பொதுவாக வரையறைக்கப்படுகின்றன.

    இதேசமயம் விமர்சன ரீதியான அகழ்வாய்வுச் செயற்பாட்டாளர்கள் (critical archeologist), பண்பாட்டு மற்றும் மரபுரிமை பயிலுனர்கள் எவ்வாறு அமைதியான மரபுரிமைக்களங்கள், மரபுரிமைச்சின்னங்கள், தொட்டுணரமுடியா பண்பாட்டுச் (intangible cultural heritage) செயற்பாடுகள் முதலியன அரசியல் ரீதியான இடையீடுகளால் இறுதியில் வன்செயல் மரபுரிமைக்களமாகின்றன என்பது பற்றியும் கவனஞ் செலுத்துகிறார்கள்.

    வன்செயல்கள் பொருள் (material) ஊடாக அல்லது பொருளாக நடைமுறையில் மாற்றீடு செய்யப்படுகின்றன. பொதுவாக சண்டைக்களங்கள், சித்திரவதைக் கூடங்கள், நினைவுச்சின்னங்கள், சிறைகள், மனிதப்புதைகுழிகள், அழிப்பிடங்கள், சுற்றாடல் - நிலவுரு மற்றும் கட்டடச் சிதைப்புக்கள், அகதிமுகாம்கள்,  இணைச்சேதப் (Collateral damage) பரப்புக்கள் முதலிய  பலவற்றை உள்ளடக்கியதாக வன்செயல் மரபுரிமை காணப்படும்.

    11 min
  • தொழிலாளர் எழுச்சி குரல்களின் எதிரொலிகள் | கண்டி சீமை | இரா.சடகோபன்

    அரசாங்கத்தினதும் துரைமார்களதும் தொழிலாளர் விரோத நடத்தைகள், சட்டங்கள், கொள்கைகள் தொடர்பிலான சேர் பொன். அருணாசலத்தின் கண்டன நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து எரிச்சலையும் சங்கடத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்தன. அதன் காரணமாக பல அரச உயர் அதிகாரிகள் சேர். பொன். அருணாசலம் அரசின் சுமுகமான நிர்வாக நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுகின்றார் என்று காலனித்துவ செயலாளருக்கு புகார் கடிதங்கள் வாயிலாக அறிவித்தனர்.

    இக்காலத்தில் சமூக சேவை லீக் என்ற அமைப்பை அதன் போதாமை கருதி கலைத்து விட்டு,  மேலும் பரவலாக செயற்படும் பொருட்டு ஏனையோருடன் சேர்ந்து இலங்கைத் தொழிலாளர் நலன்புரி  லீக்  (Ceylon Labour Welfare League)  என்ற அமைப்பை அருணாசலம் தோற்றுவித்தார்.

    இலங்கைத் தொழிலாளர் நலன்புரி  லீக்   தனது விரிவான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தது. அவ்வமைப்பு இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர் உட்பட அனைத்து தொழிலாளர் வர்க்கத்தினதும் உரிமைகளைப் பாதுகாப்பதும்,  அவர்களின் சமூக, கைத்தொழில் அந்தஸ்தினை உயர்த்துவதையும் தனது நோக்கமாகக் கொண்டிருந்தது. அதன் பொருட்டு அதன் பெயர் "சிலோன் தொழிலாளர் கூட்டமைப்பு"  (Ceylon  Workers  Federation)  என்று மாற்றப்பட்டது.

    இக்காலத்தில் பிரித்தானியாவில் அதிக அளவில்  பேசப்பட்ட விடயங்கள் சுய விடுதலை, சுய அபிவிருத்தி,  சுயநிர்ணய உரிமை,  அரசியல் அமைப்பில் ஜனநாயகப் பண்புகளை  அதிகரித்தல், தொழிலாளர்களின் கல்வி அறிவை அதிகரித்தல், அவர்களை ஸ்தாபனப்படுத்துதல் முதலியன போன்றனவே. இவை இலங்கையிலும் அரசியல் தலைவர்களின் மேடைப்பேச்சுகளாக இருந்தன. அருணாசலம் இந்தியத் தொழிலாளரை அதிகம் பாதித்த தொழில் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த குற்றவியல் தண்டனை ஏற்பாடுகள்,  தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மிகக்  குறைந்த கூலி, 12  வயதுக்கும் குறைந்த சிறுவர் ,சிறுமியரை வேலைக்கு அமர்த்துதல்,  அவர்களையும் கூட கைது செய்து சிறையில் அடைத்தல் போன்றவற்றை தனது ஆர்ப்பாட்டங்கள்,  மேடைப் பேச்சுகளுக்கு கருப்பொருளாக ஆக்கிக் கொண்டார்.

    1922 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து இலங்கையின் அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அருணாசலத்தை தலைவராகக் கொண்டு இயங்கிய  "இலங்கை தேசிய காங்கிரஸின்" போராட்டத்தின் விளைவாக முதல் முறையாக தேர்தல் முறையில் உருவாக்கப்பட்ட  "சட்டசபை" ஸ்தாபிக்கப்பட்டது. இவரது போராட்டங்களும், பின்னர் 1922 ஆம் ஆண்டு ஏ. ஈ. குணசிங்க தலைமையிலான தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களுமே 1865 ஆம் ஆண்டின் தொழிலாளர் கட்டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த குற்றவியல் பிரிவுகளை நீக்க காரணமாக அமைந்தன. சேர்  பொன். அருணாசலம் தன் இறுதி மூச்சு நிற்கும் வரை தொழிலாளர் வர்க்க நலனுக்காகப் போராடினார்.

    இந்திய வம்சாவழி தொழிலாளர்களின் இலங்கையை நோக்கிய குடிப்பெயர்வில் 1890 முதல் 1940 ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலம் மிக முக்கியமானதாகும். இக்காலத்திலேயே இவர்கள்  மிக அதிக அளவில் புலம் பெயர்ந்தனர்.  இதே காலத்தில்தான் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய தேசிய எழுச்சிப் போராட்டங்கள் மிக வலுவாகத் தொடுக்கப்பட்டிருந்தன.

    9 min
  • கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் - பகுதி 2 : பிரஞ்சும் ஆங்கிலமும் | சமஷ்டி அரசியல் முறைமைகள் | கந்தையா சண்முகலிங்கம்

    கனடா என்னும் பரிசோதனையின் மிகவும் சிக்கலான பிரச்சினை மூலமாக, பிரஞ்சு மொழிபேசும் கனடா மக்களுக்கும், கனடாவின் பிறமக்களுக்கும் இடையிலான பிளவு இருந்துவந்துள்ளது.

    கியூபெக்கின் பிரஞ்சுமொழி பேசுவோர் அனைவரிடமும் பிரஞ்சு என்ற அடையாள உணர்வு ஆழமாக உள்ளது. அவர்களில் தனிநாட்டை அல்லது தனித்த இறைமையைக் கோருவோர், சமஷ்டி ஆதரவாளர் என்ற இரு பிரிவுகள் இருந்தாலும் யாவரும் பிரஞ்சு என்ற அடையாள உணர்வாலும், கியூபெக் ஒரு தனித்த தேசியம் (Nation) என்ற உணர்வாலும் ஒன்றுபட்டவர்களாய் உள்ளனர். பிரஞ்சு மொழி பேசுவோர் தனித்த ஒரு தேசிய இனமா இல்லையா என்ற விவாதம் கியூபெக்கிற்குள் நடைபெறுவதாகக் கொள்ள முடியாது. தனித்துவமான பிரஞ்சுத் தேசியம் அல்லது தேசிய இனமான கியூபெக்கியர் சுதந்திர நாடாகப் பிரிந்துபோக வேண்டுமா அல்லது கனடாவுக்குள்ளேயே தொடர்ந்து இருப்பதனால் அதன் தனித்துவம் பாதுகாக்கப்படுமா என்ற விவாதமே அங்கு நடைபெறுகிறது.

    முதன் முதலில் கனடாவிற்குள் கால்பதித்த ஐரோப்பியர்கள் என்றால் அது பிரஞ்சுக்காரர்களே என்று கூறவேண்டும். யுத்தம் ஒன்றின் முடிவில் 1759 இல் வடஅமெரிக்காவிற்கான உரிமையை பிரான்ஸ் பிரித்தானியாவிற்கு விட்டுக்கொடுத்தது . இதன் பின்னர் பிரஞ்சுக்காரர்களிற்கும்,  பிரித்தானியாவிற்கும் பல இணக்கப்பாடுகள் ஏற்பட்டன. விட்டுக்கொடுப்புக்களும் நிகழ்ந்தன. பிரித்தானியர்கள் கனடாவின் கியூபெக் மக்களின் சில உரிமைகளைத் தயக்கத்தோடு, விட்டுக்கொடுக்கும் நிலை ஏற்பட்டது.

    1860களில் அத்திலாந்திக் கனடா, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகியவை இணையும் செயற்பாட்டின் தொடர்ச்சியாக 1867 ஆம் ஆண்டில் கனடாவின் 'கொன்பெடரேசன்" உருவானது. ஒன்டாரியோ (கனடாவின் மேற்பகுதி) கியூபெக் (கனடாவின் கீழ்ப்பகுதி) நோவா ஸ்கொட்டியா, நியூ பிரன்ஸ்விக் ஆகிய மாநிலங்கள் சேர்ந்த 'கொன்பெடரேசன்' ஆக இது அமைந்தது. கனடா தேசத்தை கட்டியெழுப்பும் செயல்முறை 1867 முதல் 1949 வரை தொடர்ந்தது . பல புதிய மாநிலங்கள் கனடாவுடன் இணைந்தன.

    12 min
  • வட இலங்கையில் சாதி: பிரித்தானிய காலனிய அரசின் கொள்கையும் நடைமுறைகளும் - 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி குறித்த நுண்ணாய்வு - பகுதி 1 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம்

    1806 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்கக் கட்டளைச் சட்டம் உயர்சாதியினருக்குரிய மரியாதைகளை மரபுவழி வழமைகளின்படி வழங்கவேண்டும் என்று விதித்தது. (அருமைநாயகம் 1976). 1859 ஆம் ஆண்டில் குடியேற்ற நாட்டுச்செயலாளராக இருந்த எமர்சன் ரெனன்ட் சாதிமுறை கொடுமையானது எனக் கருத்துரைத்தாராயினும், சாதிமுறை மீது அரசாங்கம் நேரடியாகத் தலையிடுவது முறையன்று என்ற முடிவுக்கே வந்தார்.

    19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக மாற்றங்களில் குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவமுடைய மாற்றம் ஒன்று, சாதிக்குழுக்கள் அரசுக்குச் சாதி அடிப்படையிலான நேரடி கடப்பாடுகளில் இருந்தும் சேவைகள் வழங்குவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டமையாகும். ஆயினும் அரசுக்கு அடுத்த இரண்டாம் நிலையில் மரபுவழி முறைமை தொடர்ந்தது. உதாரணமாக வடஇலங்கையில் கிராம மட்டத்தில் வேளாள உயர்சாதியினரைத் தலைமையாகக் கொண்ட சாதிமுறைமையும், சாதி உறவுகளும் தொடர்ந்தன.

    மீன்பிடி, விவசாயம் என்ற இரண்டு மரபுவழித்தொழில்களோடு தொடர்புப்பட்டதாகச் சாதிமுறைமை வடபகுதியில் இயங்கியது. வடபகுதியின் தமிழ்ச் சமூகத்தில் நபர் ஒருவரின் சாதி அந்தஸ்து பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதாக இருந்தது.


    8 min

About எழுநா

From the publisher's feed

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது.