எழுநா

எழுநா

Download on the App Store

எழுநா episodes

  • ஈழத் தமிழரும் கறுப்புச் சுற்றுலாவும் | மரபுரிமைகளைப் பறைதல் | பாக்கியநாதன் அகிலன்
    அண்மைக் காலத்தில் அதிகம் கவனிப்புப் பெற்ற ஒரு சுற்றுலா முறையாகச் கறுப்புச் சுற்றுலா (Black tourism) காணப்படுகிறது. குறிப்பாக 1990களில் இது முக்கியமான புலமை உரையாடலாக உருவாகியது. இது ஒரு மக்கள் குழுமத்தின் அல்லது தேசத்தின் துயரடர்ந்த நிகழ்ச்சிகளான இறப்பு, கொலை, அழிவு முதலியன நடைபெற்ற இடங்களை அவற்றின் சான்றாதாரங்களை உள்ளடக்கிய சுற்றுலா முறையாகும்.
    உலகளாவிய ரீதியில் பல கரிய மையங்கள் இனங் காணப்பட்டுள்ளன. அதில் முதன்மையானவையாக நாசிவதை முகாம்கள், செர்நோபில் அணுநிலையம். ஹீரோசிமா முதலியன உட்பட 9/11 நினைவுச்சின்னம், கம்போடிய கொலைக் களங்கள் காணப்பட்டாலும், எவற்றை தெரிவு செய்வது அல்லது மூடிமறைப்பது முதலானவற்றின் பின்னால் உலகளாவிய அரசியல் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதையும் இவ்விடத்தில் நாம் மறந்துவிடக் கூடாது. ஆகவே அவற்றை நிர்ணயித்தல், செயற்படுத்தல் என்பதுவும் ஒரு தொடர் போராட்டம்தான்.
    ஈழத்தமிழர்கள் மத்தியில் கறுப்புச் சுற்றுலா பற்றிய சிந்தனைகளும் – அதனை நோக்கிய செயற்பாடுகளும் தேவைப்படுகின்றன. அவர்களது தேசப்படம் இவ்வகைப்பட்ட  பல படுகொலைகள், கல்லறைகள்,  நினைவுச் சின்னங்கள் அழிவுக் களங்கள், உடைப்புக்கள், வதை முகாம்கள், பயணப் பாதைகள், கைப்பற்றப்பட்ட கிராமங்கள், இழக்கப்பட்ட கட்டுமானங்கள் முதலான பல்வேறு கரிய மையங்களால் ஆகியுள்ளன. அவற்றை அடையாளப்படுத்தி இணைத்தொரு அழிப்பு வரலாற்றைக் கூறும் வரைபடமும் எடுத்துரைப்பும் தொகுப்பட்ட நிலையில் ஈழத்தமிழர்களிடம் பொதுவெளியில் இல்லை. 
    அழிப்பு வரலாற்று அருங்காட்சியகம், ஒளிப்படக் காப்பகம், ஆவணக்காப்பகம், நிலத்துண்டங்கள் சிறைகள், முகாம்கள், உயர்பாதுகாப்பு வலயங்கள், கடற்பகுதிகள், கடற் தடுப்புக்கள், காவலரண்கள், முதலியவற்றை உள்ளடக்கி  ஒரு சுற்றுலா வலைப்பின்னல் அமைய வேண்டும்.
    #Blacktourism #Darktourism #Grieftourism #genocide #tamils #srilankantamils
    7 min
  • கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் | சமஷ்டி அரசியல் முறைமைகள் | கந்தையா சண்முகலிங்கம்

    சர்வதேச தராதரங்களின் படியான மதிப்பீட்டில் கனடா தேசம் பன்மைத்துவத்தின் மத்தியில் ஒற்றுமையை பேணுவதில் வெற்றிகண்டுள்ளது என்றே கூறவேண்டும். கனடா உலகின் சமஷ்டிகளுள் பழமையானது. அது உறுதியான ஒரு சமஷ்டியாக நிலைத்துள்ளது.

    பன்மைத்துவத்தின் பலபரிமாணங்களையும் ஒரே சமயத்தில் எதிர்கொள்ளும் வல்லமையுடைய சமஷ்டியாக அது விளங்குகிறது. கனடா பன்மைத் தேசியங்களின் நாடாக இருந்து வருவதோடு கியுபெக் பகுதியில் எழுந்த தனித்தேசியம் என்ற கோரிக்கை, பழங்குடிமக்களின் ‘முதலாவது தேசியங்கள்' (First Nations) என்ற கருத்து என்ற இரண்டையும் நேர்முறையாக அணுகியது. கனடாவில் பிரதேச உணர்வும் பிராந்திய அடையாளமும் மிகுதியாக உள்ளது. அது 'சமஷ்டியாக ஒன்று சேர்ந்த சமூகம்’(Federal Society) என்ற தன்மை உடையது.

    புவியியல் இடப்பரப்பில் மிகவும் பெரியதான கனடாவில் (9,984,670 சதுர கிலோ மீட்டர்) சனத்தொகை அடர்த்தி மிகக் குறைவு. 2008 ஆம் ஆண்டில் ஒரு சதுர கி. மீட்டருக்கு 3.3 ஆட்கள் வதிந்தனர். அங்கு மொத்தம் 33.2 மில்லியன் மக்கள் வாழ்ந்தனர். சனத்தொகை வளர்ச்சி 0.8 வீதமாக உள்ளது. ஐக்கிய அமெரிக்கா - கனடா எல்லையோரமாகவும், சில பெருநகரங்களிலும் கனடாவின் மக்கள் செறிந்து வாழ்கின்றனர்.

    பழங்குடி மக்கள் கனடா சமூகத்தின் விளிம்புநிலை மக்களாக உள்ளதோடு, வறுமை, சுகாதாரம் போன்றவற்றில் மிக மோசமான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு வேறுபல சமூகப் பிரச்சினைகளும் உள்ளன. தமக்கு ஏதாவது வகையிலான சுயாட்சிவேண்டும் என்றும், தமக்கு ஏனைய கனடிய மக்களைப் போன்று சமத்துவமாக வாழவும், பிறமக்களோடு நீதியான உறவுகளைப் பேணவும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர். 

    ஏனைய மாநிலங்களிலும் பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக கனடாவின் மேற்குப் பகுதி மாநிலங்கள் தமது நலன்களை மத்திய சமஷ்டி அரசில் (ஒட்டாவோ நகரில்) பிரதிநிதித்துவம் செய்வதற்கு வாய்ப்புக்கள் அரிதாக உள்ளதாகக் கருதுகின்றனர். மேற்குப்பகுதி மாநிலங்களோடு அத்திலாந்திக் கனடாவும் பிரதேச ரீதியான பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டுள்ளது. பொருளாதார மீள்கட்டமைப்பு மூலமும் சமத்துவப்படுத்தும் செயற்திட்டங்கள் மூலமும் இக் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளன.

    #FederalSociety #UnityinDiversity #CanadianModel #canadafederalsystem #Federalism #சமஷ்டி #கனடா

    11 min
  • மலையகத்திலே ஒரு பல்கலைக்கழகமும் சமூக – பொருளாதார மேம்பாடும் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் எம். சின்னத்தம்பி

    இலங்கையில் கடந்த நான்கு தசாப்தகாலப்பகுதியில் ஏனைய சமூகங்கள் மூன்றாம் நிலைக்கல்வியைப் பெற்றுக்கொள்வதில் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளன. 

    எழுபதாம் ஆண்டுகளுக்கு முன்னர் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த எமது சகோதர முஸ்லிம் சமூகம், சமூக உணர்வுமிக்கதும் தொலைநோக்கு கொண்டதுமான அதன் அரசியற்தலைவர்கள் மேற்கொண்ட காத்திரமான நடவடிக்கைகள் காரணமாக, தொடர்ந்துவந்த காலப்பகுதியில் பாடசாலைக்கல்வியில் துரிதமாக முன்னேற்றமடைந்து, இன்று அச்சமூகத்தினர் செறிந்து வாழும் ஒரு பிரதேசத்தில் அரச பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதில் வெற்றி கண்டதன் மூலம் தனது இளைஞர்களின் உயர்கல்விக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும், சமூக - கலாசார வளர்ச்சிக்கும் உறுதியானதொரு அடித்தளத்தை அமைத்துக் கொண்டுள்ளது. 

    இதை ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்வோமாயின், மலையகச் சமூகம் செறிந்து வாழும் மலையகப் பிரதேசத்தில் இதே போன்றதொரு பல்கலைக்கழகத்தை அமைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

    இன்றைய அறிவுசார் உலகில் மலையக இளைஞர்களும் இணைந்து கொள்ளவேண்டுமாயின், அவர்கள் தமது அறிவாற்றலையும் ஆக்கத்திறனையும் பெருக்கிக்கொள்வது இன்றியமையாததாகும். இதனை அடைந்து கொள்வதற்கு அவர்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசத்தில் பல்கலைக்கழகமொன்று அமைவதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்திக் கூறமுடியாது. நாட்டில் இருக்கும் ஏனைய பல்கலைக்கழகங்கள் சிலவற்றிலாவது தமிழ்மொழிமூல கல்விக்கான வாய்ப்புக்கள் இருந்தபோதும், அவை மலையக மாணவர்களின் விசேட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை. 

    அறிவாற்றலால் உந்தப்படும் பொருளாதார வளர்ச்சிக்குப் பொருத்தமான கல்வி, பயிற்சி என்பவற்றை உறுதி செய்துகொள்வதில் மூன்றாம்நிலைக்கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்களிக்கின்றன என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

    மலையகச் சமூகம் செறிந்து வாழும் ஒரு பிரதேசத்தில் அரச பல்கலைக்கழகமொன்றை அமைத்துக்கொள்வதன் ஊடாக அவர்கள் உயர்கல்வியை பெற்றுக் கொள்வதோடு, தமது சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இனங்காண்பதற்கும், தமது சமூகத்தின் கலை, கலாசார, பாரம்பரியங்களை வளர்த்துக் கொள்வதற்கும் அது உதவியாகவிருக்கும்.

    18 min
  • வனவளமும் வன முகாமைத்துவமும் | வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும்
    நிலப்பயன்பாட்டின் அடிப்படையில் 1,888,607 ஹெக்டெயர் நிலப்பரப்பை கொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில், வடமாகாணம் 889,007 ஹெக்டெயர் நிலப்பரப்பையும் கிழக்கு மாகாணம் 999,600 ஹெக்டெயர் நிலப்பரப்பையும் கொண்டிருக்கின்றது. இந்த வகையில் கிழக்கு மாகாணம் அதிக நிலப்பரப்பை கொண்டிருப்பதுடன் நீர்ப்பரப்பு என்ற வகையில் வடமாகாணத்தில் 8% நீர்ப்பரப்பும் கிழக்கு மாகாணத்தில் 6.35 சதவீதமுமாக மொத்தமாக இவ்விரு மாகாணங்களிலும் 14.35% ஆன பங்கு நீர்ப்பரப்பாக காணப்படுகின்றது.
    நிலப்பாவனையின் அடிப்படையில் வடமாகாணத்திலேயே அதிக காடுகள் காணப்படுகின்றன. 735,413.67 ஹெக்டெயர் காடுகள் இவ்விரு மாகாணங்களிலும் காணப்படுவதுடன் வடமாகாணத்தில் 459,129.67 ஹெக்டெயர் நிலங்களில் காடுகளும் கிழக்கில் 276,286 ஹெக்டெயரிலும் காணப்படுகின்றன. மனித பாவணைக்குட்பட்ட காணிகள் என்ற வகையில் வடக்கில் 75,749.79 ஹெக்டெயரிலும் கிழக்கில் 74,942 ஹெக்டெயருமாக மொத்தம் 179,031.38 ஹெக்டெயர் பரப்பில் காடுகள் காணப்படுகின்றன
    காடுகளின் வளங்கள் இவ்விரு மாகாணத்திலும் அதிகம் காணப்பட்டிருந்தாலும் அதனை வருமானம் தரும் வளமாக பாவிக்கும் தன்மை குறைவாகவே காணப்படுகின்றது. காடுகளை பொருளாதார வளமாக கொண்ட மலேசியா, பர்மா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்தே இன்றைய சர்வதேச சந்தை தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. எனினும் வடகிழக்கு மாகாணங்களில் காடுகள் பொதுக்காடுகளாக மட்டுமே காணப்படுகின்றன. வனபரிபாலன திணைக்களம் மற்றும் அரசமரக்கூட்டுத்தாபனம் ஆகிய இரு அரச அமைப்புக்கள் இதன் முகாமைத்துவத்துக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளன.
    மாறிவரும் காலநிலை மாற்றத்துக்கேற்ப உற்பத்தி மீதான தாக்கத்தை குறைத்துக் கொள்வதில் , பாதுகாப்பான பசுமைப் போர்வையை பெறுவது தொடர்பில் இலங்கை செய்து கொண்டுள்ள சர்வதேச சூழல் பாதுகாப்பு உடன்படிக்கைக்கமைய , காபன் நன்கொடையை (Carben Credit) பெற்றுக் கொள்வதற்கு மிகவும் உதவியளிக்கும் மாகாணங்களாக இவ்விரு மாகாணங்களுமே இருந்து வருகின்றன. 
    #fishing #fishinglife #fishing #coastalcommunity #coastalcommunities #Jaffna #fishingcommunity #fishingcommunities #northernsrilanka #ruraleconomics #ruraldevelopment #socialimpact #socialgood #resources #poverty #foodsecurity #sustainabledevelopment #communitydevelopment #farming #livestock #poultryfarming
    11 min
  • உலகையே அடிமையாக்கிய இலங்கைத் தேயிலை | கண்டி சீமை - 2 | இரா. சடகோபன்

    உலகிலேயே மிகச்சிறந்த தேயிலை இலங்கை தேயிலை என்ற பெயரைப் பெற்றுக்கொள்ள ஜேம்ஸ் டெய்லரின் பங்களிப்பும் உழைப்பும் மிக மகத்தானதாக இருந்தது என்றாலும் இந்த நிலையை அடைவதற்கு மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாக இருந்தது. அதற்குக்  காரணம் இலங்கைத் தேயிலைக்கு முன்னதாகவே சீன, இந்திய தேயிலைகள் உலக சந்தையை மிக வலுவாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தமையாகும்.

    1885 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் தேயிலை  கொள்வனவில் சீனத் தேயிலை 62% தினை தனது பங்காகக்  கொண்டிருந்தது. இது 1895 ஆம் ஆண்டில் 14 % சதவீதமாக குறைந்து போனது. இக்காலத்தில் பிரித்தானியா 35%  சதவீதமான தேயிலையை இலங்கையிடம் இருந்து கொள்வனவு செய்தது. பிரிட்டனில் இவ்விதம் இலங்கைத் தேயிலையின் நுகர்வின் அதிகரிப்பும் ஏனைய நாடுகளில் உருவாக்கப்பட்ட தேயிலைக்கான அதிகரித்த கேள்வியும் இலங்கையில் தேயிலை பயிர்ச் செய்கைக்கான ஆர்வத்தை சடுதியாக அதிகரித்தன. 

    உலகெங்கும் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக சிலோன் டீ சிண்டிகேட்  (Ceylon Tea Syndicate) மற்றும் தேயிலை நிதியம் (Tea Fund)  ஆகிய அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. 1886ஆம் ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நிகழ்த்தப்பட்ட கிளாஸ்கோ  சர்வதேச கைத்தொழில், விஞ்ஞானம் மற்றும் கலை கண்காட்சியில் இலங்கை தேயிலை " தேநீர் இல்லம் " மற்றும் " இலங்கை மன்று" ஆகிய மண்டபங்கள் உருவாக்கப்பட்டிருந்தன .

    இந்த கண்காட்சியின் போது இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி எதிர்பாராத வகையில் இலங்கையின் தேநீர் இல்லத்திற்கு விஜயம் செய்து ஒரு கோப்பை தேநீர்  அருந்தியமையானது உலகெங்கும் பேசப்படும் ஒரு பரபரப்புச் செய்தியானது, இலங்கைக்கு பெரும் விளம்பரத்தை பெற்றுக் கொடுத்தது. 

    #ceylontea

    10 min
  • பண்பாட்டுத் திணிப்பும் பால்நிலைச் சமத்துவம் நோக்கிய நகர்வும் | வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல் | அனுதர்ஷி கபிலன்

    ‘இயற்கை’, ‘இயல்பு’ என்ற வரையறைக்குள் அடங்காதவைகளை சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இயற்கையானது மற்றும் இயல்பானது என்பவைகளை யார் தீர்மானிக்கிறார்கள்? எதிர்பால் காதலைக் கொண்டாடுகின்ற இந்தச் சமூகம், குயர் மக்களின் காதலையும் அழகியலையும் இயல்பாகவாவது பார்க்கப் பக்குவப்படவேண்டும்.

    இலங்கையைப் பொறுத்தமட்டில் இன்றைய காலகட்டத்தில் பால்நிலை சார்ந்த மாற்றுச் சிந்தனைகளின் அவசியம் உணரப்பட்டிருக்கிறது. இலங்கை போன்ற தந்தை ஆதிக்கக் கருத்தியல் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு நாட்டில் பால்நிலை சார்ந்த விடயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுதல் காலத்தின் தேவையாகவுள்ளது. ஏனெனில் தந்தையாதிக்கக் கருத்தியல்கள் குயர் மக்களையும் பெண்களையும் அதிகம் பாதிக்கின்றன. குறிப்பாக அவர்களது குடும்பம், சமூகம் மற்றும் தொழில் வாழ்க்கையில் அதிகம் சிக்கல்களை உருவாக்குகின்ற அதேவேளை ஒருபாலீர்ப்பு வெறுப்பாளர்கள் உருவாகுதலும் இந்தக் கருத்தியலின் இன்னொரு பரிணாமம் ஆகும்.

    அண்மைக்காலங்களில் யாழ்ப்பாணத்தில் தமிழ்பேசும் குயர் மக்களின் எழுச்சி என்பது மிகப்பெரும் சாதனையாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. யாழ் குயர் விழா இதற்கு ஒரு உதாரணம் எனலாம். ஏனெனில் யாழ்ப்பாணம் ஏனைய பிரதேசங்களைப் போன்றதல்ல. இது முற்றிலும் வேறுபட்ட பண்பாட்டுக் கட்டமைப்பையும் மிக இறுக்கமான சூழலையும் கொண்டிருக்கிறது. ஆண், பெண் என்ற பால்நிலைகளையும் எதிர்ப்பால் ஈர்ப்பையும் மட்டுமே இயற்கையாகவும் இயல்பாகவும் கருதும் இந்த மக்கள், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மற்றெல்லாப் பால்நிலைகளைப் பற்றியும் உணர்வுத்தளத்தில் நின்று சிந்திக்கத் தவறிவிட்டனர்

    #lgbtq #lgbt #gay #pride #queer #lesbian #love #gaypride #bisexual #transgender #trans #gayboy #lgbtqia #lgbtpride #nonbinary #pridemonth #lgbtcommunity #lovewins #art #instagood  #jaffnapride #pridemonth2022 #lgbtqia+ #jaffna #transgenderrights #TamilLGBTQ

    11 min
  • பெரும்பான்மை சனநாயகம் பெரும்பான்மைத்துவம் அற்ற அரசை உருவாக்காது: சிலி தரும் பாடம் | சட்டம் அறி | சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன்

    இலத்தீன் அமெரிக்க நாடான சிலியில் அண்மையில் நடைபெற்ற புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பங்கோடல் தொடர்பாகவும் அது இலங்கையினுடைய இனப்பிரச்சினை சார்ந்தது அரசியலமைப்பு சீர்திருத்தம் சார்ந்தும் என்ன படிப்பினைகளை வழங்குகின்றது என்பது தொடர்பாக சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்கள் இந்தக் காணொலியில் விளக்கியுள்ளார்.

    #Chile #Chilenewconstitution #ProgressiveConstitution #WorldNews #chilereferendum #gabrielboric #சிலி #கேப்ரியல்போரிக்

    21 min
  • இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள்- பகுதி 3 | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்

    இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள்- பகுதி 3 | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்

    கட்டுக்கரையின் பண்பாட்டுத் தொன்மையையும், தொழில்நுட்பச் சிறப்பையும் அடையாளப்படுத்திக் காட்டுவதில் அங்கு வாழ்ந்த பெருங்கற்கால மக்களின் சிறு கைத்தொழிற்சாலைகளுக்கு முக்கிய இடமுண்டு. தென் தமிழகத்திலும், இலங்கையிலும் இரும்பின் பயன்பாட்டை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களாவர். இதன் விளைவால் இதுவரை காலமும் கல்லாயுதங்களைப் பயன்படுத்திவந்த மக்கள் இரும்புக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்தமாற்றம் பெருங்கற்கால மக்களின் பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் புரட்சிகர மாற்றங்களேற்பட வழிவகுத்தன. இங்கு இரும்புத்தாதின் படிமங்களை அகழ்வாய்வு செய்யப்பட்ட குழிகளிலும், பிறதேவைகளுக்கு மண்ணகழப்பட்ட ஆழமான குழிகளிலும் பரவலாகக் காணமுடிந்தது. பெருங்கற்கால கலாசார மண் அடுக்குகளில் அப்பண்பாட்டு மக்கள் இரும்பை உருக்கிக் கருவிகளைச் செய்ததற்கான சான்றுகள் (Iron Slacks) அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    கட்டுக்கரைத் தொல்லியல் ஆய்விலிருந்து இங்கு வாழ்ந்த பூர்வீக மக்கள் நுண்கற்கால, பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரியவர்கள் என்பது உறுதியாகின்றது.  தொல்லியல் அறிஞர்கள் இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் ஒரே இனவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். தொல்லியலாளர் அல்ஜின் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட இருபக்க அலகுடைய நுண்கற்காலக் கல்லாயுதங்கள் தமிழகத்தில் உள்ள தேரிக் கலாசாரத்துடன் ஒரே பிராந்தியம் எனக் கருதும் அளவிற்கு ஒற்றுமை கொண்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.

    பெருங்கற்காலப் பண்பாட்டிற்கும் நாக இன மக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் அடையாளப்படுத்துவதில் 2016 -2017 காலப்பகுதியில் நாகபடுவான் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்விடம் கட்டுக்கரைக்கு வடக்கே ஏறத்தாழ 50 கிலோ மீற்றர் தொலைவில் பூநகரிப் பிராந்தியத்தின்  காட்டுப் பகுதியிலுள்ள சிறிய கிராமமாகும். இங்கே நாகபடுவான் என்ற இடப்பெயரே நாக மக்களோடு தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. இப்பெயர் நாகர்களின் குளம் என்ற பொருளிலேயே  பயன்படுத்தப்பட்டுள்ளது. படுவம், படுவான் என்பது பழமையான தமிழ்ச்சொல். இது சங்க இலக்கியத்தில் ஆழமான குளம், பெரிய குளம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதனால் நாகர்களின் குளம் என்ற பொருளைக் கொண்ட இடப்பெயரே இன்றும் மாற்றம் அடையாது நாகபடுவான் என்ற பண்டைய தமிழ்ச் சொல்லில் அழைக்கப்பட்டு வருகின்றது. கலாநிதி இரகுபதி நாகபடுவான் என்ற இடப்பெயர் ஆதியில் இங்கு நாகத்தைக் குலமரபாகக் கொண்ட மக்கள்  வாழ்ந்ததன் காரணமாகத் தோன்றியது எனக் கூறுகிறார்.

    #கட்டுக்கரைஅகழ்வாய்வு #Kaddukkaraiarchaeologicalstudies #malvathuoya #Aruviyaru #kaddukkarai #kaddukkaraikulam #NorthernSriLanka #Universityofjaffna #Historicalheritage

    24 min
  • மருந்தாகும் மசாலாப் பொருள்கள் | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால.சிவகடாட்சம்

    கடுகு, பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படக்கூடிய கூடுதலான உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். பாலூட்டும் தாய்மாருக்குப் பாற்சுரப்பை ஊக்குவிக்கும். மூல வியாதியைத் தவிர்க்கும். சமையலுக்குத் தாளிதம் செய்வதற்கு உதவும்.

    பொதுவாக ஹோர்மோன் சமநிலை பிறழ்வு காரணமாக இளம் வயதுப் பெண்களுக்கும் நடுவயது கடந்த பெண்களுக்கும் மாதவிலக்கின்போது கூடுதலாக இரத்தம் வெளியேறுவதுண்டு. இதைக் கட்டுப்படுத்தப் பயன்படும் மூலிகைகளுள் கடுகும் ஒன்று.

    சீரகத்தில் இரும்புச்சத்து நிறைய உண்டு. பொதுவாக இந்தச் சத்துக்குறைவினால் பெண்கள், குழந்தைகள் மற்றும் பருவ வயதினரே கூடுதலாகப் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் உணவில் சீரகத்தைக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. பருவம் அடைந்த பெண்களுக்கு மாதவிலக்கின்போது வெளியேறும் இரத்தத்துடன் இரும்புச்சத்து இழக்கப்படுவதால் இவர்களுக்குச் சீரகம் சேர்ந்த கறி சமைத்துக்கொடுக்கும் வழக்கம் இலங்கை மக்களிடம் இருப்பதை இவ்விடத்தில் நினைவுகூரலாம். பெண்களில் மாதவிலக்குச் சுழற்சி சீராக நடைபெறுவதற்கு சீரகம் உதவுகிறது.

    இரவில் தூங்குவதற்கு முன் ஒரு தேக்கரண்டி அளவு  சுத்தமான வெந்தயத்தை எடுத்து 200 mL (ஒரு கப்) தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிட்டுவிட்டு அந்தத் தண்ணீரையும் குடிக்க வேண்டும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்துவர உடல் சூடு, மலச்சிக்கல் என்பன வராமல் தடுக்கலாம். கோடைகாலத்தில் மோரில் வெந்தயத்தை ஊறவைத்தும் குடிக்கலாம். நீரிழிவு நோயாளர்க்கும் இது நல்லது என்று கூறப்படுகிறது.

    இரசவர்க்கத்தில் கொத்தமல்லி கண்ணுக்கும் காந்தி (ஒளி) தரும் என்று கூறப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். வைட்டமின் A கண்களின் விழிவெண்படலத்தைப் (cornea) பாதுகாப்பதன் மூலம் கண்களின் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. ஆரோக்கியமான சளியமென் சவ்வுகளினதும் சருமத்தோலினதும் ஆரோக்கியத்துக்கும் வைட்டமின் A அவசியமாகும்.

    #சித்தமருத்துவம் #சித்தர்கள் #இரசவர்க்கம் #Cumin #சீரகம் #கடுகு #Mustard #Fenugreek #வெந்தயம் #கொத்தமல்லி #Coriandar #Cilantro #cholesterol

    11 min
  • டி.எஸ். சேனநாயக்காவும் ஜி.ஜி.பொன்னம்பலமும் | இலங்கையில் அடையாள அரசியல் - சுதந்திர இலங்கை வரையிலான ஒரு வரலாற்று நிலைப் புரிதல் | கலாநிதி சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம்

    இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்திற்கான முதலாவது தேர்தல் 1947ம் ஆண்டு இடம்பெற்றது. பாராளுமன்றத்திற்கான 100 ஆசனங்களில் டி.எஸ்.சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 46 ஆசனங்களை வென்றது. டி.எஸ்.சேனநாயக்காவின் சமயோசித நடவடிக்கையினால் சுயேட்சை வேட்பாளர்களை தம்பக்கம் இழுத்து அரசாங்கத்தினை அமைத்துக்கொண்ட போதும் ஒரு நிச்சயமற்ற அரசாங்கமாகவே டி.எஸ்.சேனநாயக்காவின் அரசாங்கம் காணப்பட்டது.

    டி.எஸ்.சேனநாயக்கா பிரதமரான பின்பு அவருடைய அரசாங்கத்தை தோற்கடித்து இடதுசாரிகளும் சிறுபான்மையினரும் சேர்ந்த அரசாங்கமொன்றை அமைக்கும் பொருட்டு ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் கூடிய இடதுசாரிக் கட்சிகளும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் சிலரும் பொதுக் கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தை அமைப்பது என்று முடிவு எடுத்திருந்த போதிலும், பொதுக் கொள்கைக்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதில் எழுந்த முரண்பாடுகளை அடுத்து இம்முயற்சி பலனற்றுப் போய்விட்டது.

    சிறுபான்மையினரின் நலனுக்காக 50:50 கோரிக்கையில் விடாப்பிடியாக நின்ற ஜி.ஜி.பொன்னம்பலம் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இடதுசாரிகளுடன் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தினை தவறவிட்டமை அவருடைய முதலாளித்துவ வர்க்க நலனின் வெளிப்பாடே எனலாம். 

    டி.எஸ். சேனநாயக்கா 1947ம் ஆண்டுத் தேர்தல் முடிவினை அடிப்படையாகக் கொண்டு சிங்கள மக்களின் எதிர்கால அரசியல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை மிக நிதானமாகத் திட்டமிட்டார். 

    இலங்கை இந்திய காங்கிரசும், இடதுசாரிக்கட்சிகளும் பெற்ற வாக்குகள் இந்தியத் தொழிலாளர்களுடைய வாக்குகள் என்பதை நன்கு அறிந்திருந்தார்.இவர்களுடன் தமிழ் காங்கிரசும் சேர்வது பேரினவாத முதலாளித்துவத்துக்கு ஆபத்தானது என்பதை உணர்ந்த அவர் அன்று மேற்குலகில் வளர்ந்து வந்துகொண்டிருந்த கம்யூனிச எதிர்ப்பை தமக்குச் சார்பானதாக பயன்படுத்திக் கொண்டார். அத்தோடு சிறுபான்மையினர் விடயத்தில் தாம் மிகத் தாராளமாகச் செயற்படுவதாக பிரிட்டிஷ் அரசுக்குக் காட்டினார். 


    #buddhism #srilankawar #racism #SriLankaEconomicCrisis #TamilGenocide #SrilankanTamils #DonoughmoreConstitution #constitutionlk



    32 min

About எழுநா

From the publisher's feed

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது.