
Sign up to save your podcasts
Or


மலையக மக்களின் வாழ்வியல், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் போன்றவை பற்றி எல்லாம் ஆராய்ந்த ஆய்வாளர்கள் "ஏன் இந்த மக்கள் கூட்டத்தினர் தம்மை நசுக்கி, அடக்கி, ஆளுகின்றவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழவில்லை" என்று வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர். இவ்வளவு துன்ப துயரங்களையும் பொறுமையாக சகித்துக் கொண்டு எவ்வாறு இவர்களால் இவ்வளவு நீண்ட காலம் வாழ முடிந்தது என்று கேள்வி எழுப்பி அதற்கு விடை காணவும் முயன்றிருக்கிறார்கள்.
வரலாற்றுக் காலம் முழுவதும் "நீ எமக்கு எதிராக ஏதும் செய்ய முற்பட்டால் அதற்கான கடுமையான தண்டனை உனக்கு வழங்கப்படும்" என்ற மௌனமான பயமுறுத்தல் இம்மக்களை எழ விடாது தடுக்க எப்போதும் உபயோகிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பயமுறுத்தல் இந்த மக்களுக்கு மாத்திரமன்றி ஒடுக்கப்படும் மக்கள் எங்கெல்லாம் இருக்கின்றனரோ அங்கெல்லாம் ஒடுக்குமுறையாளர்களால் விடுக்கப்படும் பயமுறுத்தலாகும் என்பது பொதுவான ஒரு எடுகோள். எனினும் அவ்வப்போது அதிகார வர்க்கத்தின் மீது கோபம் ஏற்பட்ட போதெல்லாம் தொழிலாளர்கள் பல்வேறு எதிர்ப்பு செயல்கள் மூலம் தம் கோபத்தை கொட்டித் தீர்த்துக் கொண்டார்கள் என்பதனை இவர்களது வரலாற்றை நுணுகி ஆராயும் போது புரிந்து கொள்ள முடிகின்றது.
#realestate #upcountry #kandy #upcountrysrilanka #TeaWorkers #upcountrypoliticians #teaplantation #teaestates #teaharvester #மலையகம் #தோட்டத்தொழிலாளர்கள் #தேயிலைத்தோட்டம் #educationinupcountry #arrack
சமூகப்பிரிவுகள் சமூகப்படிநிலையில் உயர்ச்சியடைதல் என்னும் சமூக அசைவியக்கத்திற்கான (Social Mobility) வழிகளில் வர்த்தகமும், முயற்சியாண்மையும்(Entrepreneurship) முக்கியமானவை. யாழ்ப்பாண மாவட்டத்தில் வர்த்தகம், அதனோடு தொடர்புடைய வட்டிக்குப் பணம் கொடுத்தல் ஆகிய நடவடிக்கைகளில் மரபுவழியாக ஈடுபட்டுவந்த சமூகப்பிரிவினர் மிகச் சிறிய எண்ணிக்கையினராக இருந்தனர். இதனால் இச்சிறிய வர்த்தக சமூகப்பிரிவு வேளாளர்களுக்கு அறைகூவல் விடுக்கக்கூடியளவுக்குப் பலம் உடையதாக இருக்கவில்லை
செட்டிகள் என்ற சமூகப்பிரிவினரான வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்தின் சில கிராமங்களிலேயே குடியேறி வாழ்ந்து வந்தனர். இச்சமூகப் பிரிவினர் கடல்கடந்த வர்த்தகத்திலும் உள்நாட்டில் சில்லறை வர்த்தகத்திலும் செல்வாக்குச் செலுத்தி வந்தனர். புகையிலை, யானை ஏற்றுமதி என்பன முக்கியமான ஏற்றுமதிகளாக இருந்த அக்காலத்தில் செட்டிகள் இப்பண்டங்களின் (Commodities) தரகர்களாக (Brokers) செயற்பட்டு இலாபம் ஈட்டினர்.
செட்டிகள் சமூகப்பிரிவைச் சேர்ந்த தனிநபர்கள் சிலர் வர்த்தகர், வட்டிக்குப் பணம் கொடுப்போர், ஏற்றுமதிப் பண்டங்களின் தரகர்கள் ஆகிய வகிபாகம் மூலமாக சமூகத்தில் பிரபலம் பெற்ற ஆளுமைகளாக விளங்கினர். இவர்கள் ‘பரதேசிகள்’ என்ற சமூகப்பிரிவினருடன் இணைந்து கொண்டனர். செட்டிகள், வேளாளர்களுடன் நல்லுறவைப் பேணிவந்தனர். வேளாளர் சமூக அந்தஸ்தில் உயர்ந்தவர்களாய் இருந்தனர். அவர்கள் விவசாய வளங்கள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர். இக்காரணங்களால் செட்டிகள், வேளாளர்களோடு நட்புறவைப் பேணியமை, அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவியது.
வர்த்தகம், பண்டங்களின் தரகுவேலை, ஏனைய முயற்சியாண்மை நடவடிக்கைகள் என்பனவற்றில் டச்சுக்காரர் ஆட்சியின்போது வேளாளர்களும் படிப்படியாக ஊடுருவத் தொடங்கினர். அக்காலத்தின் முக்கியமான மாற்றங்களில் வேளாளர்களின் வர்த்தகத்துறை ஊடுருவல் குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும்
#SriLankanVellalar #CastesysteminSriLanka #casteinjaffna #caste #periyar #ambedkar #humanity #periyarist #periyarism #casteism #discrimination #equality #tamildesiyam #inequality
ரஞ்சி உற்பத்தி நிலையத்தை 2010இலிருந்து நடத்தி வருகின்றேன். தற்போது சத்துமா, ஒடியல் மா, வல்லாரை மா உட்பட 35 விதமான உற்பத்திகளை செய்து வருகின்றோம். அவற்றில் சத்து மாவுக்கே அதிக கேள்வியுள்ளது.
கொரோனா தொற்று மற்றும் தொடர்ந்து வந்த பொருளாதார நெருக்கடியால் உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. உள்ளூர் உற்பத்திப் பொருள்களுக்கு போதுமான கேள்வி இருந்தாலும், மூலப்பொருள்களைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சிக்கலால் போதுமான உற்பத்திகளைச் செய்ய முடிவதில்லை.
கடந்த நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத் தமிழர்களின் மனங்களை வெற்றி கொண்ட அந்நிய தேசத்தவர்கள் பலர் இருந்தார்கள்; யாழ்ப்பாணத்திலே வாழ்ந்து தன்னலமற்ற பணியாற்றி தமிழர்களின் மனதிலே இடம்பிடித்த மருத்துவத்துடன் தொடர்புடைய மறைந்துபோன இருவரை இங்கே மீள நினைவூட்டுகின்றேன். ஒருவர், வடமாகாணம் என்று அழைக்கப்பட்ட அன்றைய யாழ்ப்பாண பிராந்தியத்தின் பிரித்தானிய குடியேற்ற நாட்டுப் பிரிதிநிதி, சேர் பேர்சிவல் ஒக்லண்ட் டைக். மற்றையவர், மருத்துவர் கிறீன். டைக் யாழ்ப்பாணத்தின் முதலாவது அரசாங்க அதிபராகக் (01.10.1829 - 09.10.1867) கடமையாற்றிவர்.
இவரே யாழ். போதனா மருத்துவமனையின் தாபகர். டைக், யாழ்ப்பாண மக்களுக்கு அளப்பரிய சேவை செய்த அரச அதிகாரிகளில் ஒருவர். தனது சொந்த வருமானத்தில் 27 ஏக்கர் நிலப்பரப்பை வாங்கி இன்று பழைய பூங்கா என்று அழைக்கப்படும் காணியில் மரங்களை நாட்டி, வளர்த்து யாழ். நகரத்தில் ஒரு பூங்காவை உருவாக்கியவர். அதனை யாழ்ப்பாண மக்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக தனக்குப் பின்னரும் எவரும் அதனை மீள உரிமைகோராத வண்ணம் விக்ரோரியா மகாராணியாரிடமிருந்து விசேட உறுதியையும் பெற்றிருந்தார்.
1847 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 6ஆம் திகதி பருத்தித்துறையை வந்தடைந்த மருத்துவர் கிறீன் வல்வெட்டித்துறையில் வசித்த வண. கோப் பாதிரியாரது இல்லத்தில் ஓரிரவு தங்கி 1847 ஒக்டோபர் 8 ஆம் திகதி வட்டுக்கோட்டையைச் சென்றடைந்தார். அடுத்தநாளே தமிழ் படிக்க ஓர் ஆசிரியரையும் அமர்த்திக் கொண்டார். ஓர் ஆண்டு காலத்துள் தமிழில் சொற்பொழிவாற்றவல்ல தமிழ்ப்புலமையாளராக வேண்டும் என்பதை கிறீன் இலக்காகக் கொண்டிருந்தார். அதே நேரம் வட்டுக்கோட்டையிலே சிறு டிஸ்பென்சரி ஒன்றை நிறுவி நோயாளர்களைப் பார்வையிடவும் ஆரம்பித்தார்
1847 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி நோயாளர் ஒருவரைப் பார்வையிடுமாறு கிறீனுக்கு அழைப்பு வந்தது. அடுத்து நிகழ்ந்தவை, யாழ்ப்பாணத்தில் கிறீன் மேற்கொண்ட முதலாவது சத்திர சிகிச்சை, கிறீனை உலகப் புகழ்பெற வைக்கும் என்று கிறீனும் கிறீனை யாழ்ப்பாணத் தமிழர்கள் கடவுளின் தூதுவர் என்று கருதி வியப்பார்கள் என்று அமெரிக்க மிசனரிகளும் நினைத்திருக்கவில்லை.
#SamuelFiskGreen #greenmemorialhospital #ABCFM #scudderfamily #TheScudderAssociationFoundation #firstmedicalmissionary #missionaries #missionaryjaffna #Vellore #MCMWorldwide
சோறு, நெற்பொரி, அவல், கஞ்சிவகைகள் போன்று அரிசி மாவில் இருந்து பல்வேறு வகையான அரிசி சார்ந்த உணவுகள் நமது பாரம்பரியத்தில் காணப்படுகின்றன.
அரிசிக்கூழானது பித்த மாறுபாட்டால் ஏற்படும் நோய்நிலைகளையும், தலையில் நீர் கோர்த்து ஏற்படும் உபத்திரவங்களையும் மாற்றும்.
புளிச்சாதம் உண்டால் மேக ரோகங்கள் இல்லாது போகும். ஆனால் தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது வயிற்றுப்புண், பீனிசம் என்பவற்றை உருவாக்கும். மேக ரோகம் என்பது அனுசேபத் தொழிற்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களால் அல்லது தொற்றுக்களால் சிறுநீரில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.
வேகவைத்த சோற்றினை நீண்டதூரப் பயணத்தின்போது பழுதாகாமல் இருக்க தமிழர்கள் உப்பு, புளி ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டனர். தூர இடங்களுக்கு கட்டிக் கொண்டு செல்வதால் கட்டுச்சோறு என்றும் புளியைப் பயன்படுத்துவதால் புளிச்சாதம் என்றும் இது அழைக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பாரம்பரியத்தில் யாரேனும் நோய்வாய்ப்படும்போது இலகுவாகச் சமிபாடு அடையக்கூடியதும் தேவையான சக்தியை வழங்கக்கூடியதுமாக இடியப்பமே வழங்கப்பட்டு வருகின்றது. மெல்லிய இழைகளாகவும், நீர்ச்சத்தையும் அதிகமாகக் கொண்டதாக காணப்படுவதால் விரைவாகச் சமிபாடு அடையக்கூடியதாக இடியப்பம் காணப்படுகின்றது
#ayurveda #ayurvedalifestyle #health #ayurvedic #healthylifestyle #ayurvedalife #wellness #ayurvedaeveryday #ayurvedicmedicine #natural #meditation #healthyfood #vegan #organic #fitness #ayurvedafood #சித்தமருத்துவம் #சித்தர்கள் #தற்சார்பு
நம்மிடையே உள்ள பாராம்பரிய வேளாண்மை முறைமைகளில் நவீன நுட்பங்களை புகுத்தி, இலங்கையில் ஒரு விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான நவீன விவசாயக் கொள்கைகளை உருவாக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும், விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கு உசாத்துணை ஆதாரமாகவும் 'இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்' என்ற இந்தக்கட்டுரைத்தொடர் அமைகிறது.
இலங்கையின் பாரம்பரிய வேளாண்மை முறைமையில் உள்ள சாதக - பாதகங்கள், அதிலுள்ள போதாமைகளை நிவர்த்திக்கும் வகையில் நவீன நுட்பங்களைப் புகுத்துதல், நவீன நுட்பங்களால் உண்டாகக்கூடிய விளைவுகள், இலங்கையில் பசுமைப்புரட்சிக்காக முன்வைக்கப்படவேண்டிய விவசாயக் கொள்கைகள் என்பன பற்றி விரிவாகவும், ஆய்வுத்தளத்திலும் இந்தக்கட்டுரைத்தொடர் விபரிக்கின்றது
பெருந்தோட்டத்துறையினது அறிமுகத்தால் அதுவரை காலமும் நிலவிவந்த மானியமுறைப் பொருளாதார அமைப்பு முதலாளித்துவப் பொருளாதாரமுறைக்கு நெகிழ்ந்து கொடுத்ததுடன், பெருந்தோட்டத்துறையினது நடவடிக்கைகளோடு தொடர்புபட்ட புதிய பல தாபனங்களும் உருவாகின.
ஆரம்பத்தில் இத்துறைக்குத் தேவையான வங்கிச்சேவைகளை வழங்குவதற்காக சில வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள் இங்கு திறக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, பெருந்தோட்ட உற்பத்திக்குத் தேவையான நிதிசம்பந்தப்பட்ட சேவைகளை வழங்கும் பல்வேறு நிதிநிறுவனங்களின் கிளைகளும், தேயிலைத் தொழிற்சாலைகளின் பொறியியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பெருந்தோட்டப் பிரதேசங்களுக்கு அமைக்கப்பட்ட புகையிரதப்பாதை, பெருந்தெருக்கள், அவற்றில் கையாளப்பட்ட இயந்திர சாதனங்கள் என்பவற்றைப் பராமரிப்பதற்கும் தேவையான பொறியியல் நிறுவனங்கள் சிலவும் தாபிக்கப்பட்டன.
19ம், 20ம் நூற்றாண்டுகளில் பெருந்தோட்ட உற்பத்திக்காக பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டதால் நிலத்தின் மேற்பரப்பு மண் பெரிதும் இழக்கப்பட்டது. தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்ட பின்னர் பல தோட்டமுகாமைகள், மரக்கறி, காய் கனி மரங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தோட்ட வேளாண்மையில் ஈடுபடுவதால் சூழல் பாதிப்பிற்கு உள்ளாகின்றது. ஒரு குறிப்பிட்ட காணியில் தொடர்ந்து பல வருடங்களுக்கு தனியொரு பயிர் மட்டுமே செய்கை பண்ணப்படுவதும் நிலத்தின் செழிப்பைப் பாதிக்கின்றது.
#realestate #upcountry #kandy #upcountrysrilanka #TeaWorkers #upcountrypoliticians #teaplantation #teaestates #teaharvester #மலையகம் #தோட்டத்தொழிலாளர்கள் #தேயிலைத்தோட்டம் #educationinupcountry
இலங்கையின் இயல்பான வளர்ச்சி ஐரோப்பியர்களின் காலனித்துவ ஆக்க்கிரமிப்பால் தடைப்பட்டு ஒருவிதமான சார்பு முதலாளித்துவம் உருவானது.
இலங்கை 1505 முதல் 1948 வரை 443 நீண்ட வருடங்கள் மூன்று மேற்கத்தைய நாடுகளின் காலனியாக கிடந்தது. முதலில் போர்த்துக்கேயர் 1505 முதல் 1658 வரை இலங்கையை தமது காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து நாட்டைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் 1658 முதல் 1796 வரை தமது காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர். அதன்பின்னர் 1796 முதல் 1948 வரை ஆங்கிலேயரின் காலனித்துவ பிடிக்குள் வந்தது
பிரித்தானியர் இலங்கையை தமது காலனித்துவ பிடிக்குள் 1796ல் கொண்டுவந்தபோது அவர்களே உலகில் மிகவும் முன்னேறிய உற்பத்திமுறையைக் கொண்டிருந்தனர். சூரியன் அஸ்தமிக்காத அவர்களது விரிந்த சாம்ராஜ்யம் உதயமாகிக்கொண்டிருந்தது.
ஆனால் இலங்கையோ இன்னும் பின்தங்கிய - நிலப்பிரபுத்துவ - சுயதேவை பொருளாதாரத்தையே கொண்டிருந்தது.
இந்தியாவில் காணப்பட்ட முன்னோடி-தொழில்மயமாக்கப்பட்ட முகலாய வங்காளம் (Proto-industrialised Mughal Bengal) போன்ற ஆரம்ப முதலாளித்துவ வளர்ச்சி இங்கு காணப்படவில்லை. பிரித்தானியர் கண்டியை 1815 ல் கைப்பற்றி முழு இலங்கையையும் ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பின்னர்தான் இலங்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.
அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த 3 ஆவது தகுதிவாய்ந்த மருத்துவர் சாமுவேல் பிஸ்க் கிறீன். கிறீன் 1841 இல் நியூயோர்க்கிலுள்ள மருத்துவர்கள் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்தார்.
எப்போதும் ஆன்மிகத்திலும் மிசனரி சேவையிலும் நாட்டமுள்ளவராக விளங்கிய மருத்துவர் கிறீன், பிரதேசங்களுக்கு மிசன் தொண்டர்களை அனுப்பும் அமெரிக்க மிசன் பணியகத்துடன் 1846 இல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.
இலங்கையில் அமெரிக்க மருத்துவ மிசனரியின் பணியை ஆற்றுவதற்கு விரும்பிய மருத்துவர் கிறீன், தமது விருப்பத்தைக் கடிதம் மூலம், பிரதேசங்களுக்கு மிசன் தொண்டர்களை அனுப்பும் அமெரிக்க மிசன் பணியகத்துக்கு (ABCFM) அனுப்பினார். கிறீனது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்க மிசன் பணியகம் கிறீனுக்கு அனுமதி வழங்கும் நியமனக் கடிதத்தை அனுப்பியது.
கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, மற்றும் ஜேர்மன் முதலான மொழிகளைக் கற்றிருந்த கிறீன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவதற்கு முன்பே அமெரிக்காவிலே தமிழ் மொழியைக் கற்க விரும்பினார்.
மருத்துவர் கிறீன், போஸ்ரன் துறைமுகத்திலிருந்து 1847 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி “ஜேக்கப் பேர்க்கின்ஸ்” என்ற கப்பலில் யாழ்ப்பாணம் நோக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை ஆரம்பித்தார். அந்தக் கப்பல், அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடந்து ஆபிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைத் தாண்டி இலங்கைத் தீவைச் சுற்றிச் சென்று 1847 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 4 ஆம் திகதி சென்னையை அடையும் வரை நான்கரை மாதங்கள் எங்குமே தரிக்கவில்லை. மருத்துவர் கிறீன் சென்னையில் அமெரிக்க மிசனரிகளுடன் இரு வாரங்கள் தங்கியிருந்துவிட்டு, 1847 ஆம் ஆண்டு ஓக்ரோபர் மாதம் 6 ஆம் திகதி பருத்தித்துறை வந்தடைந்தார்.
#SamuelFiskGreen #greenmemorialhospital #ABCFM #scudderfamily #TheScudderAssociationFoundation #firstmedicalmissionary #missionaries #missionaryjaffna #Vellore #MCMWorldwide #zenana_missions_srilanka #JaffnaCollege
இன்றைய நிர்வாகப் பிரிவுகளின் படி, திருக்கோணமலை மாவட்டத்தின் மூதூர், சேறுவில், வெருகல் பிரதேசங்களும், அம்பாறை மாவட்டத்தின் தெகியத்தகண்டி, தவிர்ந்த ஏனைய நிர்வாகப் பிரதேசங்களும் முழு மட்டக்களப்பு மாவட்டமும் கீழைக்கரையில் அடங்கும். இந்த எல்லைகளின் அடிப்படையில், சுமார் 9000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட கீழைக்கரையானது, முழு இலங்கையின் பரப்பில் சுமார் 15%ஐ அடக்குகிறது. தமிழர், சோனகர், சிங்களவர் ஆகிய மூவினத்தார் இங்கு பரந்து வாழ்ந்துவருகின்றனர்.
கீழைக்கரைக்கு இயற்கையாகவே தனித்துவமான புவியியல் தரைத்தோற்ற அமைப்பு அமைந்திருக்கிறது. அந்த அமைப்பே இங்கு குடியேறிய பல்வேறு பண்பாடுகளையும் பல்வேறு மொழிகளையும் மதங்களையும் கொண்ட மக்களை ஒன்றுதிரட்டி, ஒற்றைப்பண்பாடாக மாற்றி இருக்கிறது.
இந்த புவியியல் சிறப்பம்சங்களில் இரண்டு மிகவும் முனைப்பானவை.முதலாவது, மூதூரிலிருந்து பொத்துவிலூடாக கூமுனை வரை கணிசமான எண்ணிக்கையில் களப்புகளைக் கொண்ட அதன் சமதரை அமைப்பு. இரண்டாவது சிறப்பு, இந்நிலப்பரப்பு முழுவதும் கடலுக்கு சமாந்தரமாக நிலத்தில் நீளவாக்கில் அமைந்துள்ள நீர்நிலைகள்.
கீழைக்கரையெங்கணும் தொன்மையான குளங்களும் கால்வாய்களும் பெருமளவில் காணப்படுகின்றன. எனவே வாழ்தகைமைக்கான குறைந்தபட்சத் தேவைகளை நிறைவேற்றியபடி, இங்கு ஒரு காலத்தில் அடர்ந்து செறிந்து வாழ்ந்த பெரும் குடித்தொகை ஒன்று காணப்பட்டிருக்க வேண்டும். அது உண்மை என்பது போல், சிற்றாறுகளின் கரைகள், களப்புகளின் அயற்பகுதிகள் அவற்றினருகே அங்குமிங்கும் துண்டிக்கப்பட்டுள்ள மலைக்குன்றுச் சாரல்களிலேயே கீழைக்கரையின் தொல்நாகரிகம் உருவாகி வளர்ந்த பழங்குடியிருப்புகளை இன்று கண்டறியமுடிகின்றது.
#கீழைக்கரை #கிழக்குமாகாணம் #புவிச்சரிதவியல்
From the publisher's feed