1890 ஆம் ஆண்டுகளிலிருந்தே மாக்ஸ்சிசச் சிந்தனைகள் இலங்கைக்கு அறிமுகமாயின. இக் காலப்பகுதியில் தொழிற்சங்க இயக்கங்களும் தொழிற்சங்கப் போராட்டங்களும் முனைப்புப் பெற்றதைத் தொடர்ந்து இலங்கைத் தொழிலாளர்கள் தங்களுக்கிடையிலான இனம், மதம், மொழி, சாதி, பிரதேசம் என்பவற்றைக் கடந்து வர்க்கங்களாக அணிதிரண்டனர்.
1930 களில் பெருமளவிலான மலையாளத் தொழிலாளர்கள் இலங்கையின் பல்வேறு தொழிற்துறைகளிலும் வீடுகளிலும் கடைகளிலும் தொழில்செய்தனர். இதனைவிட தேனீர்க்கடை உரிமையாளர், உணவக உரிமையாளர், சிறுவணிகர்கள், குட்டிமுதலாளிகள் எனப் பலதரப்பட்டவர்களும் இங்கு தொழில்புரிந்தனர். அத்துடன் குறைந்த ஊதியத்துக்கும் தொழில் செய்யக்கூடியவர்களாகவும் இவர்கள் இருந்தனர். இவர்களுடைய நலன்களுக்காக நன்கு கட்டமைக்கப்பட்ட அமைப்புக்களும் அவர்களுக்கான பல பத்திரிகைகளும் இருந்தன.
இலங்கை தேசியவாதிகள் காலனித்துவ ஆட்சிக்கெதிராக போராடி இலங்கையர்களுக்கு சுயாட்சி பெற்றுக்கொடுப்பதற்காக 1919ம் ஆண்டில் “இலங்கைத் தேசிய காங்கிரஸ்” எனும் அமைப்பினை உருவாக்கினர். இது இந்திய தேசிய காங்கிரசின் வழியில் எல்லா மக்களையும் ஒன்றிணைத்து காலனித்துவத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த போதிலும் அதற்குள் காணப்பட்ட ‘சிங்கள பௌத்தம்’ பிரதேச ரீதியான மற்றும் தமிழ் அடையாளங்கள்; முன்னுரிமை பெற்றதினால் எல்லா மக்களையும் ஒன்றிணைத்து காலனித்துவத்துக்கு எதிராக போராடுவது இவர்களாலும் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது.
#buddhism #srilankawar #racism #SriLankaEconomicCrisis #TamilGenocide #SrilankanTamils