1980 களை அடுத்து வந்த காலப்பகுதியில் வடபகுதியில் நிலவிவந்த அசாதாரண அரசியல் நெருக்கடிகள் மீன்பிடித்துறையை மிகமோசமாக பாதித்திருந்தன. இத்துறையில் தங்கி வாழ்ந்த மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து -மிகமுக்கியமாக இராணுவ நடவடிக்கையின் காரணமாக தமது உடைமைகளை இழந்து – தாம் வாழ்ந்த கிராமங்களையும் விட்டு இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களிலும், அயற்கிராமங்கள் மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடம்பெயர வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.
இக்கட்டுரை வடபிரதேசத்தின் கடல்வளத்திற்கான வாய்ப்புக்கள், சமுத்திரவியல் பின்னணிகள் , இதில் ஈடுபட்டுவரும் மக்கள் தொகை, மீன்பிடியில் பயன்படுத்தப்படும் முறைகள், உற்பத்திப் போக்குகள், இவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் இன்று எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறிப்பாக இந்திய மீனவர்கள் ஊடுருவல் , தென்பகுதி மீனவர்களின் வருகை இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், சட்டபூர்வமற்ற மீன்பிடிச் செயற்பாடுகள் , உயர் பாதுகாப்பு வலய நெருக்கடிகள், மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் பற்றி ஆராய முற்படுகிறது.