மனம் (mind) என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.
மனம் என்பது என்ன, அது எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பான கோட்பாடுகள் நிறையவே உள்ளன. பிளேட்டோ, அரிஸ்ட்டாட்டில், ஆதிசங்கரர், புத்தர் போன்ற பல கிரேக்க, இந்திய தத்துவஞானிகள் இதுபற்றிக் கூறியுள்ளனர். நவீன அறிவியலுக்கு முற்பட்ட காலக் கோட்பாடுகள் இறையியலை அடிப்படையாகக் கொண்டவை. ஆன்மாவுக்கும் மனத்துக்குமான தொடர்புகள் பற்றிப் பேசுகின்றன. நவீன கோட்பாடுகள், அறிவியல் அடிப்படையிலான மூளை பற்றிய புரிந்துகொள்ளலின் அடிப்படையில் ஆனவை.