சைவத்துறையில் தமிழகத்தில் பதின் எட்டாம் நூற்றாண்டில் மாதவசிவஞான முனிவர் சிவஞான மாபாடியம் அறிவித்துச் சித்தாந்த சைவத்திற்குப் புதுப்பொலிவு அளித்தார். அவர் காலத்தில், பதின் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவராயர் உணர்ந்த பரமாத்துவிதம் என்ற வேதாந்தம் சைவத்துறையில் வீறார்ந்த நிலையில் விளக்கம் பெற்று நின்றது. பட்டினத்தார், அருணகிரியார், தாயுமானவர் பற்றிய போற்றி உணர்வுகள் சைவத்துறையினில் சிறப்பிடம் பெற்று இருந்தன.
சிவஞான முனிவர் தமது மாபாடியத்துள் வேதம் மற்றும் ரௌரவம், பவுட்கரம், மதங்கம் மற்றும் மிருகேந்திரம் ஆகிய ஆகமங்களையும், சுவேதாச்சுவதரம், சாந்தோக்கியம், சுபாலம் ஆகிய உபநிடதங்களையும், நீலகண்ட சிவாச்சாரியார், அப்பைய தீட்சதர், சிவாக்கிரயோகிகள் ஆகியோருடைய பேருரைகளையும் போற்றிச் சித்தாந்த சைவத்தின் பசு, பதி, பாசம் ஆகிய முப்பொருள்களுக்கு பேருரை அளித்துச் சைவத்தை வளப்படுத்தினார்.