வேலப்பதேசிகரும் இச்சிறுவருடைய முகக்குறிப்பு, அகமகிழ்ச்சி, சிவநெறியில் ஒழுகும் திறம் ஆகியவற்றை அறிந்து இச்சிறுவரைத் தம் மாணாக்கராக ஆக்கிக் கொண்டு உடனிருக்கச் செய்து கல்வி, கேள்விகளில் பயிற்றுவித்து, வடமொழி, தமிழ் என்னும் இருமொழியிலும் வல்லவராக்கினார். தமது ஆதீன மரபுக்கு ஏற்பச் சித்தாந்த சைவத் தத்துவ ஞானத்தையும் விளக்கிக் கூறி மெய்கண்ட சாத்திரங்களிலும் பண்டார சாத்திரங்களிலும் வல்லவராக்கினார். தேசிகர் தாம் அருளிய பஞ்சாக்கரப் பறொடை என்னும் சாத்திரப் பொருளையும் இத்தம்பிரானுக்குத் தெளிவாக உபதேசித்தார். சமய, விசேட, நிருவாணம் என்னும் மூவகை தீக்கையும், சந்நியாசமும் முறையாகச் செய்து சிவஞானத்தம்பிரான் எனத் தீக்கைப் பெயரும் சூட்டித் தம் ஆதினத்துத் தம்பிரான் கூட்டத்தினருள் ஒருவராக ஆக்கிக் கொண்டார்